தேநீர் நேரம் - 8: கடுப்பில் ஹார்மோனியத்தை எம்ஜிஆர் வீட்டுக்கு அனுப்பிய எம்எஸ்வி!

எம்எஸ்வி, எம்ஜிஆர், டிஎம்எஸ்
எம்எஸ்வி, எம்ஜிஆர், டிஎம்எஸ்

தமிழ்த் திரையுலகில் மெல்லிசை என்ற வகைமையை மட்டுமல்லாமல் பல்வேறு புதுமைகளையும் புகுத்திப் பரீட்சித்துப்பார்த்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இரட்டையர்களாக இசைச்சாதனைகள் பல புரிந்திருக்கிறார்கள். ராமமூர்த்தியைப் பிரிந்து விஸ்வநாதன் தனித்து நின்றும் சிகரம் தொட்டதுதான் அவரது இணையில்லாச் சிறப்பு.

அவருடன் ஜோடி சேர்ந்த ராமமூர்த்தி மட்டுமென்ன சாமானியரா? 72 மேளகர்த்தாவையும் அநாயசமாக வாசிக்கிற இசைச் சக்கரவர்த்தி அவர். ராமமூர்த்தி மெட்டமைப்பதும், அந்த மெட்டுக்கு விஸ்வநாதன் இசையாலேயே மெருகூட்டுவதுமென்று தமிழ்த் திரைப்பட இசைப்பிரியர்களுக்கு அமுத விருந்தே சிலகாலம் கிடைத்தது. 1952 முதல் 1965 முடிய இந்த இரட்டையரின் இணைந்திருந்த பொற்காலம். இருவரும் முரண்பட ஏதோவொரு காரணம் பிறந்தது. அதை அருகிலிருந்தவர்கள் ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள். இரட்டை நாதசுரமாக ஒலித்துக்கொண்டிருந்த அந்த மங்கள இசைக்கு மங்களம் பாடப்பட்டுவிட்டது. அந்த இசை சகாப்தம் முடிவுக்கு வந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் அவர்களிடையே மீண்டுமோர் இணைப்பு முயற்சி ஏற்பட்டாலும் அது முன்புபோல சோபிக்கவில்லை.

விஸ்வநாதன் தனித்துக் கோலோச்சத் தொடங்கி, உயர்ந்தார். கடினமான ஈடுபாட்டாலும் உழைப்பாலும் பிறக்கிற அவரது இசையை எவரும் குறைகூறப் பொறுக்காதவர் விசு. ஆனாலும் என்ன செய்ய? அந்நாளில் ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த மக்கள்திலகமாகத் திகழ்ந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கோ தனக்குத் திருப்தி ஏற்படும்வரையில் எந்தப் பாடலையும் ரிக்கார்டிங் தியேட்டருக்கு அனுப்பப் பிடிக்காது. எம்ஜிஆர் விஸ்வநாதனைவிட சீனியர். அதனால் விஸ்வநாதனுக்குப் பல நேரங்களில் தர்மசங்கடங்கள் தோன்றியபடியே இருக்கும்.

எம்ஜிஆர் என்று மட்டுமில்லாமல் சிவாஜி, ஜெமினி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் தேர்வாகவும் எம்எஸ்வி திகழ்ந்தார். ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.சங்கர், கே. பாலசந்தர் போன்ற இயக்குநர்கள், முன்னணி நிறுவனங்கள் என்று எம்.எஸ்.விஸ்வநாதனை மொய்த்துக்கிடந்த காலம் அது. 1953-ம் ஆண்டு தனது ஆரம்பகாலத்தில் வெளிவந்த ’ஜெனோவா’ படத்திலேயே தான் இசையமைத்திருந்த பாடல்களைக் குறை சொன்னவர் எம்ஜிஆர். அதனால் மனவருத்தமடைந்தார் விஸ்வநாதன். பிறகு நிதானமாக அந்தப் படப்பாடல்களைக் கேட்டுவிட்டு நேராக வீட்டுக்கே வந்து எம்எஸ்வி-யைப் பாராட்டவும் செய்தார் எம்ஜிஆர். கடைசிவரையில் எம்ஜிஆரின் இந்தப் போக்கு புரியவே இல்லை விஸ்வநாதனுக்கு.

எம்ஜிஆரின் ஆஸ்தான இசையமைப்பாளராக விஸ்வநாதன் ஆகியிருந்தபோதிலும் பாடல்களுக்கு இசையமைப்பதில் ஒருவித சுதந்திரத்தை விரும்புபவராகவே அவர் இருந்தார். அதை விட்டுக்கொடுக்க அவருக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. இப்படித்தான் ‘நேற்று இன்று நாளை’ படத்தை அசோகன் தயாரித்தார். எம்ஜிஆர் தான் நாயகன். விஸ்வநாதன் இசை. எவர் தயாரித்தாலும், எவர் இயக்கினாலும் பாடல்கள் தனக்குப் பிடித்தால் மட்டுமே ஒலிப்பதிவுக்குப் போகவேண்டும் என்பது எம்ஜிஆரிடம் எழுதப்படாத சட்டமாகக் கடைசிவரை இருந்தது.

‘நேற்று இன்று நாளை’ படத்துக்காக நூற்றுக்கணக்கான மெட்டுக்களைப் போட்டுவிட்டார் விஸ்வநாதன். ஒன்றைக்கூட எம்ஜிஆர் ஏற்கவில்லை. நாட்கள் ஓடி மாதங்களாகின. நிலைமையில் முன்னேற்றமில்லை. ஒருநாள் தன் காரோட்டியை எம்எஸ்வி வீட்டுக்கு அனுப்பி “புதிய டியூன் எதுவும் போட்டிருந்தால் வாங்கிவா” என்று அனுப்பினார் எம்ஜிஆர். விஸ்வநாதனுக்குக் கடுப்பான கடுப்பு. என்ன செய்தார் தெரியுமா? தனது ஹார்மோனியத்தை அந்தக் காரில் ஏற்றி அனுப்பிவைத்தார். எம்ஜிஆருக்கு இந்தச் செயல் அளவில்லாத கோபத்தை உண்டுபண்ணிவிட்டது.

தொலைபேசியை எடுத்தார். விஸ்வநாதனின் நம்பரைச் சுழற்றினார். மறுமுனையில் விசு வந்ததும் சத்தம்போடத் தொடங்கினார் எம்ஜிஆர். இப்படி: "என்ன விளையாடுறியா... எதுக்கு ஹார்மோனியத்தை அனுப்பி வச்சே?"

"எனக்குத் தெரிஞ்ச மியூசிக்கையெல்லாம் போட்டுட்டேன். இனி நீங்களே மியூசிக் போட்டுக்கொள்ள வசதியாகத்தான் என் ஹார்மோனியத்தை அனுப்பினேன்..." கொஞ்சம்கூட பிசிறில்லாமல் பதில் சொன்னார் விஸ்வநாதன். எம்ஜிஆருக்கு அதைக் கேட்டு இன்னும் கோபம் வந்தது. இருந்தாலும் விஸ்வநாதனை முழுவதுமாக நிராகரிக்கவும் முடியாமல் தொலைபேசியை வைத்துவிட்டார்.

பலநேரங்களில் விஸ்வநாதனும் நிதானம் காட்டுவார். எம்ஜிஆருக்கு இசையில் இருக்கும் ஈடுபாட்டினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் நினைப்பார். எம்ஜிஆரின் தலையீடு சிலசமயம் வெல்லும்; சிலசமயம் தோற்கவும் செய்யும் என்பதே விசுவின் கருத்து. எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’ படப்பாடல் ஒன்றுகூட ஹிட் ஆகாததற்கு அவரின் தலையீடுதான் காரணம் என்று எம்ஜிஆரிடமே கூறியவர் எம்எஸ்வி.

‘நாளை நமதே’ படத்திற்கு முன்பணத்தை வாங்கிக்கொண்டு எம்ஜிஆரிடம் இப்படிச் சொன்னார் விஸ்வநாதன்: "இந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் ஹிட் ஆக்கவேண்டியது என் பொறுப்பு. ஆனால், நீங்கள் தலையிடவே கூடாது". இதைக் கேட்ட எம்ஜிஆர், சம்மதம் என்பதற்கு பதிலாக லேசான புன்னகையைத் தந்துவிட்டுப் போய்விட்டாராம்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின்போதும் இப்படித்தான் நடந்தது. முதலில், “நீதான் இசையமைக்கிறே” என்று எம்ஜிஆர். சொல்லியிருந்தார். சிலநாட்கள் கழித்து குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடல் பதிவு என்று செய்தித்தாளில் வந்திருந்தது. நொந்துபோனார் விஸ்வநாதன். நாட்கள் நகர்ந்தன. தொலைபேசி ஒலித்தது. எம்எஸ்வி எடுத்துப் பேசினார்.

"என்னப்பா... ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றிச் சொன்னதெல்லாம் மறந்திட்டியா? எப்போ கம்போசிங் வச்சிக்கலாம்?" என்றார் எம்ஜிஆர்.

"பேப்பர்ல பாத்தேன் அண்ணே... குன்னக்குடி பெரிய இசை மேதை. அவரையே வச்சு படத்தை முடிங்கண்ணே. இனி நீங்க எனக்கு வாய்ப்பே கொடுக்கலைனாலும் பரவாயில்லை. இந்தப் படம் பண்ணமாட்டேன்..." - என்று தீர்க்கமாக பதில் சொன்னார் விஸ்வநாதன். விடாமல் முயன்றார் எம்ஜிஆர். குன்னக்குடியையே அவரிடம் பேசச் செய்தார். குன்னக்குடி மனப்பூர்வமாக சம்மதித்த பிறகு விசு ஒப்புக்கொண்டார். ஆனாலும் பிரச்சினை விட்டபாடில்லை.

எம்எஸ்வி தன் திறனையெல்லாம் கொட்டி டியூன் போட்டு வைப்பார். மதியம் வந்து எம்ஜிஆர், “நான் நினைச்ச மாதிரி வரலியே” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். மறுநாள் வேறொரு மெட்டை வாசித்துக் காட்டினால் “முதல்நாள் போட்ட டியூனே பரவாயில்லை... அதையே ரெக்கார்ட் பண்ணிடு” என்பார். எல்லோரும் பாடல்கள் பிரமாதம் என்று பாராட்டினாலும் எம்ஜிஆர் மட்டும் ஒன்றுமே சொல்ல மாட்டார். எம்ஜிஆர் பாராட்டாததால் எம்எஸ்வி மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அதனால் தனக்குப் பணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தன் அலுவலகத்துக்கு விசுவை அழைத்தார் எம்ஜிஆர். அங்கே விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். விஸ்வநாதனுக்கு அவர்கள் ஆளுயர மாலையை அணிவித்தார்கள்.

"நீ அடுத்த படத்திற்கு ஏதாவது ஸ்டாக் வச்சிருக்கியா... இல்லை இந்தப் படத்திலயே எல்லாவற்றையும் தீர்த்துட்டியானு இவங்க கேக்குறாங்க விசு. பாட்டெல்லாம் அவ்வளவு நல்லாருக்காம்!" - என்று சொல்லி விஸ்வநாதனைக் கட்டியணைத்தார் எம்ஜிஆர். ஒரு பை நிறைய பணக்கட்டுகளைப் போட்டுக் கொடுத்தார்.

"எனக்குத் திருப்தியில்லைனு சொல்லிக்கிட்டே இருந்தாதான் நீ இன்னும் நல்லா மெனக்கிடுவேனு நினைச்சேன். எல்லா பாடல்களும் ரொம்பப் பிரமாதம் விசு!" - என்றார் எம்ஜிஆர் எம்எஸ்வியிடம் அன்பொழுக.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

எம்எஸ்வி, எம்ஜிஆர், டிஎம்எஸ்
தேநீர் நேரம் 7: விரும்பினார் அண்ணா... விலகினார் எம்ஜிஆர்!

வீடியோ வடிவில் காண:

எம்எஸ்வி, எம்ஜிஆர், டிஎம்எஸ்
தேநீர் நேரம் 8: கடுப்பில் ஹார்மோனியத்தை எம்ஜிஆர் வீட்டுக்கு அனுப்பிய எம்எஸ்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in