தேநீர் நேரம் 6 : எஸ்எஸ்ஆரிடம் என்ஓசி வாங்கிவரச் சொன்ன ஜெமினி!

சாவித்திரியுடன் ஜெமினி
சாவித்திரியுடன் ஜெமினி

‘காதல் மன்னன்’ என்ற பட்டத்துக்கு சாலப் பொருத்தமானவர் ஜெமினி கணேசன். ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும் தமிழ்ப் படவுலகின் மூவேந்தர்கள் என்றுகூடச் சொன்னதுண்டு. ஜெமினி காலமானபோது மலையாளப் பத்திரிகைகள் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதின. நாடக அனுபவமின்றி நேரடியாக சினிமாவுக்கு வந்தவர் ஜெமினி கணேசன். அதனாலேயே அவரது நடிப்பை வெகு யதார்த்தமானது என்று அறிவார்ந்த மலையாள ரசிகர் உலகம் புகழ்ந்தது.

நடிப்பு வாய்ப்புக்காக ஜெமினி நிறுவனத்திற்குப் போய் அங்கே நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் 'காஸ்டிங்' பிரிவில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார் ஜெமினி கணேசன். அப்போது சின்னச் சின்ன வேடங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நாயகனாக நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஜெமினி நிறுவனத்தை விட்டு வெளியேறினார் ஜெமினி கணேசன்.

அடுத்து, பிரபல இயக்குநர் கே.ராம்நாத்தின் சிபாரிசுக் கடிதத்தோடு நாராயணன் கம்பெனி என்ற படநிறுவனத்துக்குப் போனார். அங்கே 'தாயுள்ளம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னால் அந்தப் பாத்திரத்தில் சரியாக நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்ததால் அதில் நடிக்கத் தயங்கினார் ஜெமினி. அதனால் வாய்ப்பு ஆர்.எஸ்.மனோகருக்குப் போனது. ஜெமினிக்கு வில்லன் வேடம் தரப்பட்டது.

இப்படியே ஒன்பது படங்களில் நடித்த பிறகுதான் நாயகன் வாய்ப்பு ஜெமினியைத் தேடி வந்தது. 'மனம்போல மாங்கல்யம்' (1953) என்ற அந்தப் படத்தில் ஜெமினிக்கு இரட்டை வேடம். சாவித்திரியும், பாலசரஸ்வதியும் ஜோடிகள். முதல் படத்தில் நடித்தபோதே ஜெமினிக்கு சாவித்திரி மீது காதல் பிறந்தது. படம் ரிலீஸாகும் முன்பே இருவரின் காதலும் ஊருக்குத் தெரிந்துபோனது.

சாவித்திரி மீது தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து ஒரு பேட்டியில், "அதை ஏதோ பூர்வஜென்ம பந்தம் என்றுதான் சொல்லவேண்டும். காரணம், ‘மனம்போல மாங்கல்யம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவளிடம் நான் என் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். இத்தனைக்கும் என்னோடு சேர்ந்து நடிப்பதற்கு முன்னமேயே சாவித்திரி ஒரு பிரபல நடிகை. ‘தேவதாஸ்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களில் நடித்தவள். நனோ புதுமுகம். இருந்தாலும் எனக்கு சாவித்திரி மீது காதல் பிறந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார் ஜெமினி.

விரைவிலேயே சாவித்திரியை ரகசியத் திருமணமும் செய்துகொண்டார் ஜெமினி கணேசன். ‘மனம்போல மாங்கல்யம்’ படத்திற்குப் பின் நாராயணன் நிறுவனத்தினர் 'கணவனே கண்கண்ட தெய்வம்' (1955) படத்தை எடுக்க திட்டமிட்டார்கள். அதன் கதைப்படி படத்தின் பிற்பகுதியில் நாயகனுக்குக் குரூரமான தோற்றமுள்ள கூனன் வேடம். அது தனக்கு ஒரு சவாலான பாத்திரமாக அமையும், நடிப்பதற்கு மிகுந்த வாய்ப்பைத் தரும் என்று ஜெமினி கருதினார்.

ஆனால் அந்த வேடம் ஜெமினி கணேசனுக்கு இல்லை என்றானது. மிகுந்த வருத்தமடைந்தார் அவர். எப்படியாவது அந்த வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று யோசித்தவருக்கு பளிச்சென ஒரு ஐடியா உதித்தது. அடுத்த நாள் அதிகாலை. நாராயணன் படக் கம்பெனி அதிபர் நாராயண ஐயங்கார் வீட்டின் வாசலில் பார்க்கவே அருவருப்பான தோற்றத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து நின்றான்.

முதுகு வளைந்த கூனனாக அவன் இருந்தான். பார்க்கச் சகியாத முகம். வெளியே வந்த நாராயணன் அந்தப் பிச்சைக்காரனை விரட்டினார். அவனோ அவரை வீட்டுக்குள் போகவிடாமல் மறித்தான். பட அதிபருக்குக் கோபம் பொங்கிவந்தது.

அப்போதுதான் அவரைப் பார்க்க வந்திருந்த இயக்குநர் பட்டண்ணா பிச்சைக்காரனைப் கூர்ந்து பார்த்தார். வந்திருப்பது அசல் பிச்சைக்காரனில்லை என்பது புரிந்துவிட்டது. “அண்ணா நல்லா உற்றுப்பாருங்கள். அது நம்ம கணேசன்...” என்று சொன்னார் பட்டண்ணா. நாராயணனுக்கு வியப்போ வியப்பு. "கணேசா... நீயா? எதுக்கு இந்தப் பிச்சைக்கார வேடம்?" என்றார் கண்களை அகல விரித்துப் பார்த்தபடி.

” ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தின் கதாநாயகனான கூனன் வேடத்தை நீங்கள் எனக்குப் பிச்சைபோடுங்கள்... அதற்காகத்தான் இப்படி வேடமிட்டு வந்தேன்" என்று சொன்னார் ஜெமினி. அவரது ஆசையை நிறைவேற்றினார் நாராயணன். கூனன் கதாபாத்திரம் அவருக்கே தரப்பட்டது.

ஜெமினிக்கு கூனன் வேடம் அவ்வளவு சுகமாக இருந்துவிடவில்லை. மேக்அப் கலைஞர் அரிபாபு. அதிகாலை 3 மணிக்கு மேக்அப் போடத் தொடங்கினால் 7 மணியாகிவிடும். 8 மணிக்குப் படப்பிடிப்பு. காலை முதல் இரவு வரை படப்பிடிப்பு நடக்கும். சில சமயம் 3 நாட்களுக்குக்கூட அந்த மேக்அப்பைக் கலைக்காமல் நடித்தார் ஜெமினி கணேசன்.

ஒரு காட்சியில் நாயகன் ஆலம் விழுதைப் பற்றிக்கொண்டு தொங்கியபடி அரண்மனை உப்பரிகையில் இளவரசியின் அறையில் குதிக்க வேண்டும். நரசு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு. பெரிய ஆலமர செட் போட்டிருந்தார்கள். மூன்று டூப் ஸ்டண்ட் நடிகர்களோடு ஸ்டண்ட் மாஸ்டர் பலராமன் தயாராக இருந்தார். ஆலம் விழுது போன்ற கயிற்றில் தொங்கியபடி உப்பரிகைக்குப் போய்க் குதிக்க ஸ்டண்ட் நடிகர்களுக்கே அச்சம். அவர்கள் தயங்கினார்கள். ஜெமினி சொன்னார்: "நானே குதிக்கிறேனே..."

சொன்னபடி அவரே கயிற்றில் தொங்கியபடி உப்பரிகையை அடைந்து அதில் குதித்தும் விட்டார். இயக்குநர் பட்டண்ணா ஜெமினியின் அருகில் வந்தார். “படத்தில் மட்டுமல்ல... உண்மையிலும் நீ ஹீரோதான்” என்றார். படம் பெருவெற்றி பெற்றது. அந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருதும் ஜெமினிக்குக் கிடைத்தது. அதன்பிறகு ஜெமினி கணேசனுக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். என்ன காரணத்தினாலோ அவர் அதில் நடிக்க முடியாமல் போனது. அவரது பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜெமினிக்கு அமைந்தது. ஆனால், உடனே அந்த வாய்ப்பை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. "நான் இந்தப் படத்திலிருந்து என் சொந்தக் காரணங்களுக்காக விலகிக்கொள்கிறேன். எனக்குப் பதிலாக இப்பாத்திரத்தில் வேறு யார் நடித்தாலும் அதுகுறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று எஸ்எஸ்ஆரிடம் ஒரு கடிததத்தை எழுதி வாங்கி வந்தால் மட்டுமே நான் இதில் நடிப்பேன்” எனத் திட்டவட்டமாக சொன்னார் ஜெமினி. அதன்படியே கடிதம் பெறப்பட்டு, அதன்பிறகே அந்தப் படத்தில் நடித்தார் ஜெமினி.

அந்த சமயத்தில் சாவித்திரிக்குப் பிரசவ காலம் மனைவிக்கு அருகிலேயே இருக்க விரும்பினார் ஜெமினி. ஆனால், படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் திட்டமிடப்பட்டுவிட்டது. சிவாஜியும் அங்கே சென்றுவிட்டார். படக்குழுவினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஜெமினியிடமும் சாவித்திரியிடமும் மாறி மாறி போனில் பேசினார் சிவாஜி. சாவித்திரியை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ளச் செய்வது தன்னுடைய பொறுப்பு என்று ஜெமினிக்கு உத்தரவாதம் தந்தார்.

அதன்படி சென்னை இசபெல் மருத்துவமனையில் சாவித்திரியைச் சேர்க்கும்படி செய்தார். சிவாஜி கொடுத்த நம்பிக்கையிலும் தைரியத்திலும் ஜெமினி ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்குச் சென்றார். மருத்துவமனையில் நல்லபடியாக மகள் சாமுண்டீஸ்வரியைப் பெற்றெடுத்தார் சாவித்திரி!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

சாவித்திரியுடன் ஜெமினி
தேநீர் நேரம் 5 : எதற்கும் துணிந்து காஷ்மீர் பண்டிட் வேஷம் போட்ட எல்லிஸ் ஆர்.டங்கன்!

வீடியோ வடிவில் காண:

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in