தேநீர் நேரம் - 5: எதற்கும் துணிந்து காஷ்மீர் பண்டிட் வேஷம் போட்ட எல்லிஸ் ஆர்.டங்கன்!

மீரா படப்பிடிப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் எல்லிஸ் ஆர்.டங்கன்
மீரா படப்பிடிப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் எல்லிஸ் ஆர்.டங்கன்

எல்லிஸ் ஆர்.டங்கன் உண்மையிலேயே வியக்கவைக்கும், வித்தியாசமான ஓர் திரை ஆளுமை. தமிழ்த் திரைப்பட இயக்குநராக அவர் புழங்கியது 15 ஆண்டுகள். 13 படங்களை இயக்கி இருக்கிறார். ‘சதிலீலாவதி’, ’சீமந்தினி’, ’இரு சகோதரர்கள்’, ’அம்பிகாபதி’, ’சூர்யபுத்ரி’, ’சகுந்தலா’, ‘காளமேகம்’, ’தாசிப்பெண்’, ‘வால்மீகி’, ‘ரிட்டர்னிங் சோல்ஜர்’, ’மீரா’, ’பொன்முடி’, ‘மந்திரி குமாரி’ முதலான படங்களை அவர் தமிழில் இயக்கினார். இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது என்கிறீர்களா?

எல்லிஸ் ஆர்.டங்கனின் தமிழ் சினிமாவுடனான உறவு என்பது 1935-ல் தொடங்கி 1950-ல் நிறைவு பெற்றுவிட்டது. அந்த நாட்களில் அத்தனை படங்களை இயக்கி, தானும் ஒரு தமிழ் இயக்குநர் என்று புகழோடு இங்கே வாழ்ந்துவிட்டுச் செல்லும் வரையிலும் அவருக்குத் தமிழில் ஒரேயொரு சொல்கூடத் தெரியாது. இது வியப்புக்குரியது இல்லையா? அவர் பிறந்தது அமெரிக்காவில். அங்கே ஓஹியோ மாநிலத்தில் பார்டன் என்ற சிற்றூரில் 1909-ல் பிறந்த ஐரிஷ்காரர் அவர்.

எல்லிஸ் ஆர்.டங்கன்
எல்லிஸ் ஆர்.டங்கன்

அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அப்போதுதான் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது சினிமாவுக்கான தனியானதொரு துறை. பள்ளிப் படிப்பை முடித்து, சினிமாவைக் கற்றுக்கொள்ளும் நோக்கோடு கலிபோர்னியா பல்கலையின் திரைப்படத்துறையில் சேர்ந்தார் டங்கன். அங்கே அவருடன் இந்தியாவைச் சேர்ந்த மாணிக்லால் டாண்டன் என்ற மாணவர் பயின்றுவந்தார். இருவருக்கும் நட்பு ஏற்பட, படிப்பை முடித்த கையோடு டாண்டனுடன் இந்தியாவுக்குப் பயணமானார் எல்லிஸ் ஆர்.டங்கன்.

பொன்முடி படப்பிடிப்பில்...
பொன்முடி படப்பிடிப்பில்...

இந்தியாவில் டாண்டனின் குடும்பம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டிருந்தது. அதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்காக டாண்டன் தன்னுடன் படித்தவர்களான டங்கனையும் மைக்கேல் ஆர்மலே என்ற இன்னொருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொல்கத்தாவில் ’நந்தனார்’ படத்தை 1935-ல் டாண்டன் இயக்கத் தொடங்கியபோது அவருக்கு உதவியாக டங்கனும் சில காட்சிகளை இயக்கினார்.

அப்போது ஏ.என்.மருதாசலம் செட்டியார் என்ற தயாரிப்பாளர் தனது அடுத்த படமான ‘சதிலீலாவதி’யை இயக்கித்தருமாறு டாண்டனிடம் கேட்க, ‘நந்தனார்’ படம் முடியாத நிலையில் அந்த வாய்ப்பைத் தனது நண்பர் டங்கனுக்குக் கொடுத்தார் டாண்டன்.

சதிலீலாவதி படத்தில்
சதிலீலாவதி படத்தில்டங்கனுடன் பாலையா

இப்படித்தான் டங்கனுக்கு முதன்முதலில் ஒரு தமிழ்ப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் எழுதிய தொடர்கதைதான் ‘சதிலீலாவதி’. பின்னாளில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட பிரபலங்களான எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா போன்றோர் இந்த ‘சதிலீலாவதி’ படத்தில்தான் அறிமுகமானார்கள். ஆனால், இதற்கு பிறகு என்எஸ்கே நடித்த ‘மேனகா’ முந்திக்கொண்டு அவரது முதல்படமாக வெளியாகிவிட்டது.

எல்லிஸ் ஆர்.டங்கன்தான் தமிழ் சினிமாவின் துவக்க நாளிலேயே ஹாலிவுட் தொழில்நுட்பங்கள் பலவற்றை அறிமுகப்படுத்திய முதல் திரைக்கலைஞர். நாடகத்தில் அரிதாரம் பூசும் பழைய முறையையே சினிமாவிலும் செய்துவந்த நிலையில், சினிமாவுக்கான நவீன மேக்கப் சாதனங்களை, புதிய முறைகளை அவர்தான் முதன்முதலில் இங்கே அறிமுகப்படுத்தினார். கேமராவை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, இரண்டு புறங்களிலிருந்தும் மாறிமாறி வந்து, அதன்முன் நின்று நடித்துவிட்டுப் போவதே அதுவரையில் பொதுவான வழக்கமாக இருந்தது. டங்கன்தான் படப்பிடிப்பின்போது கேமராவை நகர்த்தலாம் என்பதையும் கேமராவை பல்வேறு கோணங்களில் கையாண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் முதன்முதலில் சொல்லிக்கொடுத்தார்.

டங்கன் 
 (அமர்ந்திருப்பவர்)
டங்கன் (அமர்ந்திருப்பவர்)

அவர் இயக்கிய ‘ரிட்டர்னிங் சோல்ஜர்’ 1945-ல் வெளிவந்த ஒரு மாறுபட்ட படம். அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவும் போரில் ஈடுபட்டிருந்தது. அதனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிற விதமாக முற்றிலும் வித்தியாசமான முயற்சிதான் இந்தப் படம். இதை டங்கன் இயக்கினார். இதில் டி.எஸ். பாலையா முக்கிய வேடத்தில் நடித்தார்.

ரோமியோ - ஜூலியட் காதல் காவியத்தைப் போன்று ‘அம்பிகாபதி’ படத்தைக் கொடுத்தார் டங்கன். அதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்தார். கலைஞரின் கதை - வசனத்தில் டங்கன் இயக்கிய ‘மந்திரி குமாரி’ படமும் காலத்தால் அழியாத காவியம்தான். ஆனாலும், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய ‘சகுந்தலை’ மற்றும் ‘மீரா’ ஆகிய படங்கள் அவருக்கு இணையில்லா புகழினைச் சேர்த்தன என்றே சொல்ல வேண்டும்.

அம்பிகாபதி படப்பிடிப்பில்...
அம்பிகாபதி படப்பிடிப்பில்...

அதிலும் குறிப்பாக, ’மீரா’ இந்தியத் திரைப்பட வரலாற்றில் மகத்தான இடத்தில் வைத்துக் கொண்டாடப்பட்ட படம். உள்ளரங்கில் உருவாக்கப்பட்ட செட்களிலேயே படமெடுத்துவந்த அந்தக் கால வழக்கத்துக்கு மாறாக வெளிப்புறக் காட்சிகளை டங்கன் தாராளமாகத் தன் படங்களில் முயன்றார். ‘மீரா’வில் அவரது வெளிப்புறப் படப்பிடிப்பு பெரிதும் ரசிகர்களை ஈர்த்தது. அந்தப் படத்திற்காக அவரும் ஒருமுறை வேடம் போட வேண்டிவந்தது.

வடஇந்தியாவில் பழமைவாய்ந்த கிருஷ்ணன் கோயில் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த டங்கன் விரும்பினார். ஆனால் அவர் இந்துமதம் சாராத ஒரு வெளிநாட்டுக்காரர் என்ற காரணத்தால் அந்தக் கோயிலுக்குள் போகமுடியாத நிலை. என்ன செய்தாவது கோயிலுக்குள் படப்பிடிப்பு நடத்தியே தீருவது என்று பிடிவாதமாக இருந்தார் டங்கன். உதவியாளர்களுடன் ஆலோசித்தார்.

மீரா படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி
மீரா படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி

அவர்களின் ஆலோசனையின்படி டங்கனை ஒரு காஷ்மீர் பண்டிட்போல மாறுவேடமிடச் செய்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் வாயில் அடிக்கடி “அச்சா... அச்சா...” என்ற ஒற்றைச் சொல் மட்டும் புழங்கிக்கொண்டே இருந்தது. அவரின் அந்த உச்சரிப்பும் இயல்பாக இல்லை. ஆனால், அங்கிருந்தவர்கள் காஷ்மீர் பண்டிட்கள் இப்படித்தான் பேசுவார்கள்போல என்று நினைத்துக்கொண்டார்கள்.

தான் விரும்பியபடி அந்தக் கோயிலுக்குள் சென்று திருப்தியாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்துக்கொண்டு வெளியேறினார் டங்கன். அதுவரையில் அவரை எவரும் அந்நிய நாட்டவர் என்று சந்தேகப்படவே இல்லையாம். சூப்பர் ஹிட் திரைப்படமான ‘மீரா’ இந்தியிலும் வெளிவந்தபோது இந்தியா முழுமையிலும், கடல் கடந்தும் புகழின் உச்சம் தொட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மீரா படப்பிடிப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் எல்லிஸ் ஆர்.டங்கன்
தேநீர் நேரம் 4 : சந்திரபாபுவை ரிஜெக்ட் செய்த எம்எஸ்வி!

வீடியோ வடிவில் காண:

மீரா படப்பிடிப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் எல்லிஸ் ஆர்.டங்கன்
தேநீர் நேரம் 5 : எதற்கும் துணிந்து காஷ்மீர் பண்டிட் வேஷம் போட்ட எல்லிஸ் ஆர்.டங்கன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in