தேநீர் நேரம் - 4: சந்திரபாபுவை ரிஜெக்ட் செய்த எம்எஸ்வி!

சந்திரபாபு
சந்திரபாபு

தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர் சந்திரபாபு. அவரது மேற்கத்திய பாணி நடிப்பும் சொந்தக் குரலில் பாடும் விதமும் மற்றவர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியமாகாத அம்சங்கள். வெறித்தனமான கலை ஆர்வத்துடன் அரும்பாடுபட்டு நடிக்க வந்தவர் அவர். அப்படி திரையுலகம் தந்த அரிய வாய்ப்பை மிக அலட்சியமாக இழந்தவரும் அவர் போல் எவருமில்லை.

சினிமாவில் எப்படியேனும் தனது திறமையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற கலை தாகத்துடன் சந்திரபாபு அலைந்து திரிந்துகொண்டிருந்த சமயம். அது 1945 - 46 காலகட்டம். கோவையில் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் மாதம் 15 ரூபாய் சம்பளத்தில் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். சினிமாவில் பாட வாய்ப்புக் கேட்டு அங்கு போய் நின்றார் சந்திரபாபு. விஸ்வநாதனுக்கு என்ன வேலை தெரியுமா... புதிதாகப் பாட வருபவர்களின் குரல் வளத்தை பரிசோதிக்கும் வாய்ஸ் டெஸ்ட் செய்வது தான் எம்எஸ்வி-க்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலை.

சுப்பையா நாயுடு விஸ்வநாதனை அழைத்து சந்திரபாபுவுக்கும் வாய்ஸ் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். சந்திரபாபு தனக்குத் தெரிந்த திரைப் பாடல்கள் சிலவற்றைத் தனது ஸ்டைலில் பாடிக் காட்டினார். விஸ்வநாதனுக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை. “இவர், பாட்டை வசனம்போல படிக்கிறார்” என்றார் சுப்பையா நாயுடுவிடம்.

அதனால் முதல் ரவுண்டிலேயே ரிஜெக்ட் ஆனார் சந்திரபாபு. ஏமாற்றத்துடன் மனவருத்தத்தோடு அங்கிருந்து வெளியேறினார். ஆண்டுகள் கழிந்தன. எப்படியோ சந்திரபாபு நடிகராகிவிட்டார்... பாடகராகிவிட்டார். விஸ்வநாதனும் ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைக்கத் தொடங்கிவிட்டார்.

எல்.ஆர்.ஈஸ்வரி, சந்திரபாபு, எம்எஸ்வி
எல்.ஆர்.ஈஸ்வரி, சந்திரபாபு, எம்எஸ்வி

சந்திரபாபுவும் விஸ்வநாதனும் ‘குலேபகாவலி’ படத்தில் ஒன்றாகப் பணியாற்றும் நேரம் வந்தது. சந்திரபாபு ஒரு பாடலைப் பாடவேண்டியிருந்தது. முன்பு விஸ்வநாதன் தன்னை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் என்ற எண்ணம் சந்திரபாபு மனதில் அப்படியே இருந்தது. இயக்குநர் டி.ஆர். ராமண்ணா சந்திரபாபு பாடவேண்டிய பாடலின் மெட்டைச் சொல்லித்தரும்படி விஸ்வநாதனிடம் சொன்னார். விஸ்வநாதனும் ஹார்மோனியத்தில் சந்திரபாபு பாடவேண்டிய பாடலின் மெட்டை வாசித்தார்.

அதைக் கேட்ட சந்திரபாபு, “என்ன மெட்டு இது? இவருக்கு மெட்டுப்போடவே தெரியல. இது டான்ஸ் சீன்ல வர்ற பாட்டு. இந்தப் பாட்டோட மெட்டு இப்படி இருந்தா நான் எப்படி ஆட முடியும்” என்று இயக்குநர் ராமண்ணாவிடம் சொன்னார்.

சந்திரபாபு பழசை மறக்கவில்லை. அதனால் தான் இப்படி போட்டுப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் எம்எஸ்வி. தனது இருக்கையை விட்டு எழுந்தார். இசைக் கலைஞர்களிடம் அந்த மெட்டை வாசிக்கச் சொன்னார். அந்தப் பாடலைப் பாடிக்கொண்டே அதற்கேற்ப மிக அற்புதமாக ஆடத்தொடங்கினார் விஸ்வநாதன். அவர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டு, நடிக்கும் ஆசையில்தான் திரைத் துறைக்கு வந்தார் என்பதும் பிறகுதான் இசையமைப்பாளரானார் என்பதும் பலருக்கும் தெரியாது.

விஸ்வநாதனின் நடனத்தைப் பார்த்து அசந்துபோனார் சந்திரபாபு. தன் மனதிலிருந்த கோபத்தையெல்லாம் தூர வீசியெறிந்தவராக அவரைக் கட்டித்தழுவினார். அன்று முதல் எம்எஸ்வி-யும் சந்திரபாபுவும் நெருங்கிய நண்பர்களானார்கள். எந்த அளவுக்குத் தெரியுமா? தான் நடிக்கும் படங்களில் வேறு இசையமைப்பாளர் இசையமைத்தாலும் தனது பாடலுக்கு மட்டுமாவது விஸ்வநாதன் இசையமைக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக சந்திரபாபு ஆசைப்படும் அளவுக்கு!

காலங்கள் உருண்டோடின. கண்ணதாசனின் ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் சந்திரபாபுதான் கதாநாயகன். இசை விஸ்வநாதன். ஒருநாள் சந்திரபாபு, “எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு விஸ்வநாதா. இந்தப் படத்திலாவது எனக்கு டப்பாங்குத்து பாட்டெல்லாம் வேண்டாம். நல்ல தத்துவப்பாடல் ஒன்றை எனக்காகப் போட்டுக்கொடு” என்று எம்எஸ்வி-யிடம் சொன்னார். அந்த நேரத்தில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்துபோனார். அதனால் கண்ணதாசன் மிகுந்த சோகத்தில் இருந்தார். எவராலும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. பட்டுக்கோட்டையார் மீது அத்தனை பிரியம் வைத்திருந்தார் கவியரசர்.

சந்திரபாபு அவரிடத்தில், ”இன்று நம்மை அழவைத்துவிட்டு, அகால மரணமடைந்துவிட்டார் பட்டுக்கோட்டையார். பிறந்தது முதல் நாம் அழுதுகொண்டே இருக்கிறோம். நாம் இறக்கும்போது இந்த உலகம் நமக்காக இப்படி அழவேண்டும்” என்று சொன்னார். அதைக் கேட்டுவிட்டு கண்ணதாசன் ஒரு அற்புதமான தத்துவப் பாடலை எழுதி முடித்தார்.

அதுதான் ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் இடம்பெற்ற

‘பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாளேனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே...’ - என்ற அற்புதமான பாடல்.

பாடல் பதிவு தொடங்கியது. தன் சொந்தக் கற்பனையுயும் சேர்த்து இஷ்டம்போலப் பாடும் இயல்புடையவர் சந்திரபாபு. ஆனால், அது எம்எஸ்வி-யிடம் செல்லுபடியாகாது. தான் சொல்லுகிறபடிதான் பாடகர் பாடவேண்டும் என்று விரும்புவார்.

இந்தப் பாடலை சந்திரபாபு பாடிய விதம் விஸ்வநாதனுக்குத் திருப்தியாக இல்லை. ரீ டேக்... ரீ டேக் என்று போய்க்கொண்டே இருந்தது. சந்திரபாபுவால் விஸ்வநாதனைத் திருப்திப்படுத்துமளவுக்கு அந்தப் பாடலை எதிர்பாத்த உணர்வுகளோடு பாட முடியவே இல்லை. முதலில் ரீ டேக் என்றதும் தன் மேல்ச்சட்டையைக் கழற்றி வீசினார் கோபத்தில். மறுபடியும் ரீ டேக் என்றதும் பேன்டைக் கழற்றினார். மீண்டும் ரீ டேக் என்றபோது தன் பனியனைக் கழற்றினார்.

இப்போது வெறும் கால் சட்டையுடன் நின்றார் சந்திரபாபு. “என்னால் பாட முடியாது” என்று பெரிதாகக் கத்திவிட்டு விருட்னென காரில் ஏறிப் போய்விட்டார். விஸ்வநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னாலேயே அவரைத் துரத்திக்கொண்டு போனார். சந்திரபாபு ஒரு ஆசிரமத்திற்குள் போனார். அமைதியாக உட்கார்ந்தார். பின்தொட்டுச் சென்ற விஸ்வநாதன் அவரை சமாதானப்படுத்தினார். மீண்டும் அழைத்து வந்தார். நிதானமாகப் பாடல் பதிவு நடந்து முடிந்தது. அனைவருக்கும் திருப்தி.

‘கவலை இல்லாத மனிதன்’ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. என்றாலும் இந்தப் பாடல் பெரிய ஹிட் ஆனது. சந்திரபாபுவுக்கு பேரும் புகழும் கிடைத்தது. ரசிகர்களின் மனங்கவர்ந்த இந்தப் பாடலை மும்பையில் விஸ்வநாதனின் இசைக் கச்சேரி நடந்தபோது எல்லோரும் ரசித்த விதம் சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

மும்பையில் டிஎம்எஸ், சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்ற எம்எஸ்வி-யின் இசைக் கச்சேரி நடந்தது. அதில் சந்திரபாபுவும் பங்கேற்றார். அவர் ‘கவலை இல்லாத மனிதன்’ படப்பாடலைப் பாடுவார் என அறிவிக்கப்பட்டதுமே ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். சந்திரபாபு உணச்சிததும்பப் பாடினார். மெய்மறந்தார்கள் ரசிகர்கள்.

பாடலைப் பாடி முடித்ததும் “ஒன்ஸ்மோர்” என்று ஏகக் குரலில் முழக்கமிட்டார்கள். மறுபடியும் பாடினார் சந்திரபாபு. மறுபடியும் குலலெழுப்பினார்கள் “ஒன்ஸ்மோர்” என்று. விஸ்வநாதன் சந்திரபாபுவை மறுபடியும் பாட வைத்தார். பாடல் முடிந்தது. மீண்டும் “ஓன்ஸ்மோர்” என்றார்கள் ரசிகர்கள். என்ன செய்வதென்றே இசைக் குழுவினருக்குப் புரியவில்லை. ஒன்ஸ்மோர் கோரிக்கையைக் கவனிக்காதது போல அடுத்த பாடகரை அழைத்து வேறு பாடலைப் பாடச் சொல்லிச் சமாளித்துவிட்டார் விஸ்வநாதன்.

இதுதான் சமயமென்று, “நீ சரியாகப் பாடல போலிருக்குடா பாபு. அதான் மறுபடியும் மறுபடியும் பாடச் சொல்லிட்டே இருந்திருக்காங்க” என்று ஜோக் அடித்துக் கிண்டல் செய்தார் விஸ்வநாதன். அன்று ரீ டேக் வாங்கிய அதே பாடல் இப்போது ஒன்ஸ்மோர் கேட்கும்படி மாறியிருந்தது எல்லோருக்கும் பெருமையாகவும் இருந்தது. அதனால், விஸ்வநாதனின் கிண்டல் வெறும் நட்புரீதியிலான கலாய்ப்புதான் என்பது சந்திரபாபுவுக்கும் புரிந்தது. அதனால் இருவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் அர்த்தமுடன் சிரித்துக் கொண்டார்கள்!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

சந்திரபாபு
தேநீர் நேரம் 3: நாயகியாக சுஹாசினி வந்தது இப்படித்தான்!

வீடியோ வடிவில் காண:

சந்திரபாபு
தேநீர் நேரம் 4 : சந்திரபாபுவை ரிஜெக்ட் செய்த எம்எஸ்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in