தேநீர் நேரம் - 3: நாயகியாக சுஹாசினி வந்தது இப்படித்தான்!

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில்...

இயக்குநர் மகேந்திரனை ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன் என்றே அடையாளப்படுத்துவது வழமை. அந்தப் படம் அவரது மாஸ்டர் பீஸ். அவரை ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன் என்றும்கூட பெருமையோடு சொல்வதுண்டு. காரணம், அதுவும் அவரது மிகச் சிறந்த படம்தான். மகேந்திரன் தமிழ்த் திரையுலகின் மிகமுக்கியமான ட்ரெண்ட் செட்டர். புதிய பாய்ச்சலைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர். அவர் இயக்கி, ஒருவருட காலம் திரையரங்குகளில் ஓடிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் கதையை அவர் ஒருசில விநாடிகளில் கண்டடைந்தார் என்றால் வியப்பாக இல்லை?

உதிரிப்பூக்கள் படத்தில்...
உதிரிப்பூக்கள் படத்தில்...

மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுக்கள்’ படங்கள் வெளிவந்த பிறகு பிரபல தேவி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் தங்களுக்காக ஒரு படத்தை இயக்க அவரை அனுகினார்கள். தேவி ஃபிலிம்ஸார் இயக்குநரிடம் கதை கேட்கும் பாணியே தனி. அவர்களின் குடும்பத்திலிருக்கும் பெண்கள் உள்பட அனைவரின் முன்னிலையிலும் கதை சொல்லவேண்டும். கதை எல்லோருக்கும் பிடித்து, அவர்கள் ஓகே என்றால் தான் அதைப் படமாக்க முடிவெடுப்பார்கள்.

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

அப்படி, நீண்ட காலமாக தனது மனதில் இருந்த ஒரு கதையை தேவி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்குச் சொன்னார் மகேந்திரன். கம்பெனியாரின் முழு குடும்பத்துக்கும் கதையைக் கேட்டமாத்திரத்தில் பிடித்துப் போனது. தாமதிக்காமல் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.

கதைப்படி பல மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். படத்தின் கதாநாயகனும் நாயகியும் புதுமுகங்களாக வேண்டும். அதற்காக கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தெல்லாம் புதுமுகங்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், மகேந்திரன் மனதில் கற்பனை செய்துவைத்திருந்த சாயலில் யாரும் சிக்கவில்லை.

“நாம் பம்பாய்க்குப் போய் நாயகனையும் நாயகியையும் தேடுவோம்” என்றார் படக் கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி கௌரிசங்கர். தேவி ஃபிலிம்ஸாரிடம் இன்னொரு சிறப்பும் இருந்தது. இயக்குநரின் முடிவில் அவர்கள் தலையிடமாட்டார்கள். படத்திற்காக ஆகிற நியாயமான செலவினங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். கௌரிசங்கரை அழைத்துக்கொண்டு மகேந்திரன் மும்பை பயணமானார். அங்கேயும் மகேந்திரன் எதிர்பார்த்தது போன்ற முகங்கள் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கவலையுடன் அன்றைய இரவைக் கடத்திய மகேந்திரன், அதிகாலை தான் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்தார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

நேர் எதிரே கடற்கரை. தூரத்திலே இளம் பெண் ஒருத்தி கடற்கரை மணலில் ஓடிக்கொண்டிருந்தாள் தனியாக. மகேந்திரன் அந்தக் காட்சியைப் பார்த்தார். அவர் மனம் இப்படி எண்ணத் தொடங்கியது. உடல் ஆரோக்கியத்துக்காக உற்சாகத்தோடு இந்த இளம் வயதில் ஓடுகிற அந்தப் பெண் திருமணத்திற்குப் பின் எதற்கெல்லாம் ஓடவேண்டியிருக்கும்? மனம் பட்டியலிட்டது.

அற்பத்தனமான புருஷனால் அடித்து விரட்டப்பட்டு தாய்வீட்டுக்கு ஓடவேண்டியிருக்கலாம். அல்லது விவாகரத்துக்காக நீதிமன்றத்துக்கு ஓடவேண்டி வரலாம். அடிபட்டு மருத்துவமனையிலிருக்கும் கணவனைக் காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடலாம்.

வேலைக்குப் போகும் பெண் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் தினசரி ஓட்டம். இன்று உடல் நலனுக்காக ஓடுகிற பெண் தன் வாழ்க்கையில் எத்தனை வகையான ஓட்டங்களை ஓடவேண்டியிருக்குமோ? இப்படி நினைக்க நினைக்க அந்த நொடியே அவர் மனதில் புதியதொரு கதை துளிர்விடத் தொடங்கிவிட்டது.

அறைக்கு வந்த கௌரிசங்கரிடம், “விளையாட்டா ஒரு கதை சொல்லட்டுமா?” என்று ஆரம்பித்தார் இயக்குநர். அதிகாலையில் உடல் ஆரோக்கியத்துக்காக ஓடத்தொடங்கிய ஒரு பெண் தன் கணவனை இழக்க மனமின்றி ஏர்ப்போர்ட்டுக்கு ஓடுவதையும், அப்படி ஓடியவள் எப்படித் தன் கணவனை மீண்டும் அடைந்தாள் என்கிற மீதிக் கதையையும் சொல்லி முடித்தார். மகேந்திரன் கதை சொல்லி முடித்ததுதான் தாமதம். அடுத்த நொடியே கௌரிசங்கர் “ஒன்டர்ஃபுல்... ஃபென்டாஸ்டிக்...” என்று சத்தம் போட்டுச் சொன்னார்.

சென்னையில் படக்கம்பெனியார் குடும்பத்திடம் சொன்ன கதையை விட்டுவிட்டு இதைப் படமாக்கினால் என்ன என்று அடுத்து கேட்டார் மகேந்திரன். “அதைத்தான் செய்யப்போகிறோம்” என்றார் கௌரிசங்கர் உற்சாத்தோடு. சென்னை போய் கம்பெனியின் குடும்பத்தார் எல்லோருக்கும் கதையைச் சொல்ல வேண்டுமே... அப்புறம்தானே அது தேறுமா இல்லையா என்று தெரியும்? என்று மகேந்திரன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே கௌரிசங்கர் தன் அறைக்குப் போனார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் மகேந்திரன் அறைக்கு வந்தார். மகேந்திரனின் கையைப் பிடித்துக் குலுக்கினார். “தொலைபேசியில் குடும்பத்தினருக்கு கதையைச் சொல்லிவிட்டேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஊருக்குப்போய் உடனே வேலைகளைத் தொடங்கலாம்” என்றார் அவர். மகேந்திரனுக்கு மறுபடியும் ஒரு கவலை. இதற்கும் நாயகன் - நாயகி என்ற இரண்டு புதுமுகங்கள் வேண்டுமே...

ஜானி படப்பிடிப்பில்...
ஜானி படப்பிடிப்பில்...

இதற்கிடையில், மகேந்திரன் ரஜினி நடிப்பில் ‘ஜானி’ படத்தை முடிக்கவேண்டியிருந்தது. விறுவிறுவென படப்பிடிப்பு நடந்தது. படத்தின் ஒளிப்பதிவு அசோக்குமார். ஒருநாள், படப்பிடிப்பு தளத்தில் நாற்காலியில் அமர்ந்து வேலைகளைக் கவனித்துக் கொண்டுருந்தார் மகேந்திரன். அடுத்த ஷூட்டுக்காக தளம் தயாராகிக்கொண்டிருந்தது. யூனிட் ஆட்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள் சுறுசுறுப்பாக.

ஜானி படப்பிடிப்பில்...
ஜானி படப்பிடிப்பில்...

அப்போது அசோக்குமாரின் உதவியாளராக ஒளிப்பதிவு வேலைகளில் மும்முரம் காட்டிக்கொண்டு, விளக்குகளை இடம்மாற்றிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண். அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரனுக்கு சட்டென ஒரு பொறி தட்டியது.

அப்போது தற்செயலாக அவரைப் பார்க்க அங்கே வந்திருந்தார் கௌரிசங்கர். அவரை அருகே அழைத்த மகேந்திரன், “நம் படத்துக்கு புதுமுகம் கிடைத்தாயிற்று... அங்கே பாருங்கள்” என்று அந்தப் பெண்ணைக் காட்டினார். உடனே கௌரிசங்கர், “சார்... அவுட்ஸ்டாண்டிங் சார்...” என்றார். அவர்கள் பார்த்து, வியந்து, தங்களின் புதிய படத்தின் நாயகியாகத் தேர்வு செய்த அந்த இளம் பெண்தான் சுஹாசினி.

ஆனால், அவர்கள் தங்களின் விருப்பத்தைச் சொன்ன போது முதலில் சுஹாசினி சம்மதிக்கவில்லை. “உங்கள கையெடுத்துக் கும்புடுறேன்... என்னை விட்டுடுங்க சார். ஃப்யூச்சர்ல ஒரு ஒளிப்பதிவாளரா வரணும் என்பது தான் என்னோட ஆசை...” என்று கூறி மறுத்தார்.

கமல் குடும்பம் பரமக்குடியில் இருந்தபோதே மகேந்திரனுக்கு அந்தக் குடும்பத்துடன் நெருக்கம் உண்டு. அருகிலுள்ள இளையான்குடி தான் மகேந்திரனுக்கு சொந்த ஊர். ஏற்கெனவே சுஹாசினியின் தந்தை சாருஹாசனைத் தனது ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நடிக்க வைத்தார் மகேந்திரன். அதுவும் அவருக்கு இப்போது கை கொடுத்தது. சுஹாசினி அரை மனதோடு சம்மதித்தார். "இந்த ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன். ஒருவேளை சரியா நடிப்பு வரலைனா பாதி படத்துலகூட ஓடிவந்துருவேன்” என்று சாருஹாசனிடன் சொல்லிவிட்டுத்தான் அரிதாரம் பூச ஓகே சொன்னார் சுஹாசினி.

அவர் சொன்னது போல் அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை. நாயகனாக கன்னட தேசத்திலிருந்து இன்னொரு இளம் புதுமுகமாக மோகன் வந்து சேர்ந்தார். படம் தயாராகி, வெளிவந்து, மிகச் சிறப்பாக ஓடி எல்லோரையும் மகிழ்வித்தது. மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் மூலமாக இப்படித்தான் சுஹாசினி என்ற அற்புதமானதொரு நடிப்புக் கலைஞர் நமக்குக் கிடைத்தார்.

வீடியோ வடிவில் காண:

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in