இயக்குநர் ஞான ராஜசேகரன் ஒரு மாறுபட்ட திரை ஆளுமை. தமிழில் அவரது இயக்கத்தில் ‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற குறிப்பிடத் தகுந்த படங்கள் வந்துள்ளன. இவற்றுள் பயோபிக் படங்களான ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தவை.
இயக்குநர் ஞான ராஜசேகரன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதும் இந்திய ஆட்சிப்பணியில் இணைந்த அவர் கேரள மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பதும் பலரும் அறியாதது. திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞான ராஜசேகரன், கேரளத்தின் பல்வேறு துறைகளில் இயக்குநர் மற்றும் செயலாளர் பதவிகளில் இருந்தவர். மத்திய அரசின் சார்பில் சென்னைத் திரைப்படத் தணிக்கை அதிகாரியாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்று இளம் வயதிலேயே கனவு கண்டவர் ஞான ராஜசேகரன். அதற்காகவே அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், அவர் லெவலுக்கு திரைப்படக் கல்லூரிப் பாடங்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தார். அப்பாவின் விருப்பத்திற்கிணங்க எம்.எஸ்சி., படித்து ஐஏ எஸ் ஆனார். கேரளத்தின் பணிச் சூழல் அவரது சினிமா ஆசைக்கு உரம் இட்டது. அவரது சினிமா குறித்தான புரிதலுக்கு கேரள மாநிலத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பதவி அவரைத் தேடி வந்தது.
ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அவருக்குத் தனது ஆட்சிப் பணியிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியதிருந்தது. பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற விடுப்புகள் வழக்கத்தில் இல்லை. ஆனாலும் அவரது கலை ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. கேரளாவாக இருந்ததால் அது சாத்தியமானது.
அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கலைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு மாறுபட்ட விஷயத்தைப் பேசுவதாகவும் இருந்தது. அதன் உருவாக்கமும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருந்தது. சென்னையில் மத்திய அரசின் சார்பில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்திலிருந்து, தான் இயக்கிய எல்லாப் படங்களையுமே தணிக்கை விதிகளை மீறாதவாறு எச்சரிக்கையோடு உருவாக்கினார்.
அதேபோல ஒரு தணிக்கை அதிகாரியாக அவரது அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. அப்போதெல்லாம் தமிழில் ஆண்டுக்கு 300 படங்களுக்குக் குறையாமல் வெளிவரும். அதனால் ஒரு தணிக்கை அதிகாரியாக ஞான ராஜசேகரன் நிறையப் படங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலரும் பலவிதமான அனுபவங்களைத் தணிக்கை அதிகாரி என்ற முறையில் ஞான ராஜசேகரனுக்குக் கொடுத்தார்கள். அவற்றுள் ஒன்றிரண்டை இங்கே பார்ப்போம்.
ஞான ராஜசேகரனின் தலைமையிலான தணிக்கைக் குழு கமலின் ‘ஹே ராம்’ பட தணிக்கையின்போது பதினைந்துக்கும் மேற்பட்ட வெட்டுக்களைக் கொடுத்தது. அதனால் கமலுக்கு அவர்கள் மீது கடும் கோபம். "யதார்த்தமான விஷயங்களைச் சொல்லி தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துவதை நீங்கள் தடுக்கிறீர்கள்" என்று கமல் தணிக்கைக் குழுவை குற்றம் சுமத்தினார். படத்தில் இடம்பெற்றிருந்த வரம்பு மீறிய ஆபாச வசனம் குறித்து பேச்சு வந்தபோது, “அது உலகத்தில் நடக்கவில்லையா?” என்று கமல் ஞான ராஜசேகரனைப் பார்த்துக் கேட்டார்.
அதற்கு ஞான ராஜசேகரன், "உலகத்தில் நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. சென்சார் குழுவின் வேலை அவை உண்மையா இல்லையா என்று ஆராய்வது இல்லை. மாறாக, நீங்கள் சொல்கிற விஷயங்கள் மக்கள் கூடியுள்ள அரங்கில் வெளியிடத் தகுதியானவையா இல்லையா என்று தீர்மானிப்பதுதான். அதாவது Are they fit for public exhibition or not? என்பதுதான் சென்சாரின் தலையாய கடமை" - என்று பதில் சொன்னார்.
‘ஹே ராம்’ படத்தின் இறுதியில் மகாத்மா காந்தி கோட்சேயால் சுடப்படும் காட்சியில் காந்தி சுடப்பட்டதும் தரையிலிருந்து உயர எறியப்பட்டு கீழே போய் விழுவார். “என்ன இது... தேசப்பிதாவை இப்படியா காட்டுவது?” என்று தணிக்கைக் குழுவிலிருந்த ஒரு காங்கிரஸ்காரர் கேட்டார். “ஆட்டன்பரோ தனது ’காந்தி’ படத்தில் இதே காட்சியை எவ்வளவோ மேன்மையாகக் காட்டியிருக்கிறார். இதிலோ ஏதோவொரு மிருகத்தைச் சுடுவதுபோலக் கேவலமாகக் காட்டியிருக்கிறார்” என்று அவர் வேதனை தெரிவித்தார். ஆனால், “அந்தக் காட்சியை தணிக்கைக் குழு வெட்டச்சொல்ல முடியாது” என்று ஞான ராஜசேகரன் கூறினார்.
இந்த விவாதத்திற்கு பதில் சொன்ன கமல், "கோட்சே உயயோகித்த அதே போர் (Bore) உள்ள துப்பாக்கியைப் பல இடங்களில் தேடியலைந்து லண்டனில்தான் என்னால் வாங்க முடிந்தது. அந்தத் துப்பாக்கியால் ஷூட் செய்தால் நான் படத்தில் காட்டியபடிதான் சுடப்பட்டவர் உயரச்சென்று விழுவார். அதை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன்" என்றார். இயக்குநரின் விருப்ப உரிமை தொடர்பானது என்று கருதி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஞான ராஜசேகரன்.
இதேபோல் ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தை வைத்தும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. ’பாட்ஷா’ படத்தின் தணிக்கை நாளில் ஞான ராஜசேகரன் அந்தப் படத்தைப் பார்க்க அரங்கிற்குள் நுழைகிறார். வாசலில் பெருங்கூட்டம். தணிக்கைக் குழு உறுப்பினர்கள் முன்னபே வந்து அரங்கில் அமர்ந்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் என்ன படத்தை நாம் தணிக்கைக்கு உட்படுத்தப்போகிறோம் என்பதை முன்னரே உறுப்பினர்களுக்கு அறிவிக்கக்கூடாது என்பது விதி. எனவே, அவர்களுக்கு அன்று ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தை சென்சார் செய்யப்போகிறோம் என்பது தெரியாது.
அந்த நிலையில் ராஜசேகரன் அரங்கம் வந்தபோது அவரை நோக்கி சில பிரமுகர்கள் ஓடி வந்தார்கள். அவர்களில் ஒருவர், "ரஜினி சாருக்கு ஒரு பழக்கம். தனது படம் சென்சார் ஆகும்போது படக்காட்சி தொடங்குவதற்கு முன்னால் தணிக்கை அதிகாரியையும் குழுவினரையும் நேரில் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வது அவரது வழக்கம். இப்போது ரஜினி சார் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். கொஞ்சம் காத்திருந்தால் வந்துவிடுவார்" என்றார்.
அதற்கு ஞான ராஜசேகரன், “தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதுவொரு தவறான அணுகுமுறையாகும். இதேபோல மற்ற நடிகர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்பதில்லை. நாங்கள் படத்தைப் பார்த்த பிறகு அவர் வந்து தாராளமாக எங்களைச் சந்திக்கலாம். அது அவரது உரிமையும்கூட” என்றார்.
தூதுவந்தவர்கள் முகம் வாடிப்போய்ச் சென்றார்கள். அவரும் உள்ளே சென்றுவிட்டார். சென்சார் திரையிடல் முடிந்து எல்லோரும் வெளியே வந்தபோது ரஜினி வந்து வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார். படம் தொடங்கும் முன்பே ஒருமுறை வந்ததாகவும், ஞான ராஜசேகரன் சொன்னதைக் கேள்விப்பட்டு வீட்டிற்குச் சென்று இப்போது மீண்டும் வந்ததாகவும் ரஜினி அவரிடம் சொன்னார். அதுமட்டுமல்ல... அதற்கு அடுத்துவந்த ரஜினியின் ‘முத்து’, ‘அருணாசலம்’, ’படையப்பா’ ஆகிய படங்களை ஞான ராஜசேகரன் சென்சார் செய்ய நேர்ந்தபோதும் ரஜினி அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதுமட்டுமா? "இந்த அதிகாரி இருக்கும்வரை அவர் கொடுக்கும் ‘கட்’களை தட்டாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்பீலுக்குப் போகாதீர்கள்" என்று சொல்லிவிட்டார் ரஜினி.
இது இன்னொரு சுவையான சம்பவம். ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்’ படம் உருவாகி முடிந்திருந்தது. அந்த முயற்சிக்கு மிகுந்த ஊக்கமளித்த அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடானது. கருணாநிதியுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். படத்தின் இடைவேளையின்போது இயக்குநரிடம் பேசிய கருணாநிதி, "படம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் போகிறது" என்றார். படம் திரையிடல் முடிந்து எல்லோரும் வெளியே வந்தபோது, “படத்தில் வரலாற்றுப்பிழை ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றார் கருணாநிதி.
சில நாட்கள் சென்றபின் முதலமைச்சர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று ஞான ராஜசேகர் அவரைப் பார்க்க அவரது இல்லத்திற்குச் சென்றார். அப்போது அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் முதல்வருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஞான ராஜசேகரன் உள்ளே சென்றதும் அவரைத் தம் அருகே அமரச் சொன்ன முதல்வர் கருணாநிதி, “ ‘பெரியார்’ படத்தைப் பற்றி சில அபிப்பிராயங்களைச் சொல்லலாம் என்றுதான் உங்களை அழைத்தேன். நான் சொல்கிற யோசனைகளை நீங்கள் ஏத்துக்கணும்னு இல்லை. நிராகரிக்கவும் செய்யலாம்.
பெரியார் ஒரு மாபெரும் தலைவர். அவரை அறிமுகப்படுத்தும்போது இதைவிட இன்னும் பிரம்மாண்டமா இருந்திருக்கலாமோன்னு நான் நினைக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட ஞான ராஜசேகரன் ஒரு இயக்குநர் என்றமுறையில் அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார்.
"சார் என் திரைக்கதையின் அடிப்படையே..." என்று அவர் சொல்லத் தொடங்குவதற்கு முன்பே அருகிலிருந்த மூத்த அமைச்சர் ஒருவர் குறுக்கிட்டார். "அதுதான் தலைவர் இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறார் இல்லையா... அப்படியே வெச்சிட வேண்டியதுதானே?" என்றார் அமைச்சர். இதைக்கேட்டு முதல்வர் கருணாநிதிக்கு கோபம் வந்துவிட்டது. "இதோ பாருங்கள்... இவர் உள்ளே வந்தபோது நாம் அரசியல் பேசிக்கிட்டிருந்தோம். அவர் ஏதாவது குறுக்கிட்டுப் பேசினாரா? இப்போது நாங்கள் சினிமாவைப் பற்றிப் பேசிட்டிருக்கோம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம்" என்று அமைச்சரை கண்டித்தார் கருணாநிதி. அத்தோடு அந்த அமைச்சர் கப்சிப் ஆனார்.
தொடர்ந்து ‘பெரியார்’ திரைப்படம் குறித்து முதலமைச்சர் கருணாநிதி தந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்ட ஞான ராஜசேகரன், அவரது சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்க, நீண்ட நேரம் அந்த உரையாடல் தடையற்றுச் சென்றது!
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
வீடியோ வடிவில் காண: