தேநீர் நேரம் - 22: கத்தினார் டி.எம்.எஸ்... கணித்தார் பி.யூ.சின்னப்பா!

பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா
பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பாகண்ணகி படத்தில்

நாடக உலகிலும் சினிமா உலகிலும் ஒரு முன்னோடி நாயக நடிகர் பன்முகத் திறன் பெற்று உச்சம் தொட்டவர் பி.யூ.சின்னப்பா. அவர்தான் தமிழ்த் திரையுலகில் முதல் சகலகலாவல்லவன். நல்ல பாடகர் அவர். சிலம்பு, வாள், மற்போர் என்று அனைத்துவிதச் சண்டைப் பயிற்சிகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.

‘கண்ணகி’, ’மகாமாயா’, ’ஆரியமாலா’, ‘அரிச்சந்திரா’ என பி.யூ.சின்னப்பாவின் வெற்றிப்படவரிசை பெரிது. அவரது ‘கண்ணகி’ (1942) படத்தின் வசனங்களை அன்றைய ஜாம்பவான் இளங்கோவன் எழுதினார். ‘கண்ணகி’யில் சின்னப்பா பேசிய வசனங்களையும் கண்ணகியாக நடித்த பி.கண்ணம்மா பேசிய வசனங்களையும் ரசிகர்கள் கேட்டுக்கேட்டு மெய்சிலிர்த்தார்கள்.

மாதவியைப் பிரிந்து கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வருகிற காட்சியில் ‘மானமெல்லாம் போனபின்னே வாழ்வதுதான் வாழ்வா...’ என்ற பாடலை சின்னப்பா தனது குரலில் தழுதழுக்கப் பாடிவருவார். அவரது தளர்நடை நடிப்பும் அந்தப் பாடலின் சோகச் சுவையும் சேர்ந்து, படம் பார்த்த ரசிகர்களின் மனதை கசக்கிப் பிழிந்தது.

மு.கருணாநிதி
மு.கருணாநிதி

இந்தப் படத்தில் இளங்கோவனின் வசனங்களும் பொருள் பொதிந்ததாக, சொல் வீச்சு நிரம்பியதாக விளங்கின. “ ‘கண்ணகி’ போன்ற படங்களில் இளங்கோவனின் வசனங்களே நாமும் திரைப்படங்களுக்கு வசனமெழுத வேண்டும் என்ற ஆவலை எனக்குள் ஏற்படுத்தின” என்று கலைஞர் கருணாநிதிகூட குறிப்பிட்டிருக்கிறார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய ‘உத்தம புத்திரன்’ (1940) படத்தில் நாயகனாக நடித்தார் சின்னப்பா. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கதாநாயகன் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது. இந்தப் படத்தில் ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாரதியின் பாடலை பி.யூ.சின்னப்பா பாடினார். தடை செய்யப்பட்டிருந்தபோதிலும் பாரதி பாடலைத் துணிந்து டி.ஆர்.சுந்தரம் இந்தப் படத்தில் சின்னப்பாவைப் பாட வைத்தார்.

உத்தமபுத்திரன் படத்தில்...
உத்தமபுத்திரன் படத்தில்...

கே.எஸ்.நாராயண ஐயங்காரும் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடுவும் பட்சிராஜா பிலிம்ஸ் சார்பில் ‘ஜெகதலபிரதாபன்’ (1944) படத்தை சென்டிரல் ஸ்டூடியோவில் தொடங்கினார்கள். ‘12 அமைச்சர்களின் கதை’ என்ற நாட்டுப்புற மாயாஜாலக் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த ‘ஜெகதலபிரதாபன்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய ‘தாயைப் பணிவேனே...’ என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடல்தான் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ‘பாட்டும் நானே பாவமும் நானே...’ பாடலின் முன்னோடி. இந்தப் பாடலில் சின்னப்பாவே கச்சேரியில் பாடுவார். சின்னப்பாவே மிருதங்கம் வாசிப்பார், சின்னப்பாவே வயலின் வாசிப்பார், சின்னப்பாவே கஞ்சிரா, சின்னப்பாவே கொன்னக்கோல்.

ஒரே ஃபிரேமில் 5 இசைக் கலைஞர்களாக சின்னப்பாவையே பார்த்து வியந்துபோனார்கள் ரசிகர்கள். ஒளிப்பதிவாளர் வி.கிருஷ்ணனின் அற்புதமான படப்பிடிப்பால் இந்தக் காட்சி அந்நாளின் அதிசயமாக விளங்கியது. இந்த ஒரு காட்சிக்காகவே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தார்கள். அது தொழில்நுட்பம் அதிகம் முன்னேறாத கறுப்பு - வெள்ளை காலம். இதே உத்திதான் பிறகு ‘திருவிளையாடலில்’ வண்ணத்தில் ஜொலித்தது.

‘ஜெகதலபிரதாபனை’த் தொடர்ந்தும் வெற்றிப் படங்களை தந்து கொண்டே இருந்தார் சின்னப்பா. 1951 பிப்ரவரி 9-ல், அவர் நடித்த ‘வனசுந்தரி’ வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் 23 அன்று அந்தப் பெருங்கலைஞன் பி.யூ.சின்னப்பா தனது 35-வது வயதில் மரணத்தைத் தழுவினார். அவரது நடிப்பில் உருவான ‘சுதர்சன்’ படம் 1951 நவம்பர் 28-ல் அவரது மறைவுக்குப் பிறகு வெளியானது.

பி.யூ.சின்னப்பாவிடம் கொஞ்சம் முரட்டு குணம் இருந்தது. ஆனாலும் நியாயத்திற்காக மட்டுமேதான் அவர் தனது கோபத்தைப் பயன்படுத்தினார். வாய்ப்புக் கிடைக்காமல் சிரமப்படுகிற கலைஞர்களுக்குத் தன் படங்களில் வாய்ப்புக் கிடைக்கச்செய்து உதவுவது சின்னப்பாவின் வழக்கம். அத்துடன் படப்பிடிப்புகளில் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவருமல்ல அவர். சக கலைஞர்களின் நலனில், உடன் பணிசெய்யும் தொழிலாளர்களின் நலனில் எப்போதும் கவனம் செலுத்துபவராகவே இருந்தார் அவர்.

தான் நடிக்கும் படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின்போது எல்லா தொழிலாளர்களுக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறதா, அதில் பாக்கி ஏதும் நிற்கிறதா என்பதையெல்லாம் கேட்டறிந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே ஒத்துழைப்பாராம். யாருக்காவது சம்பள பாக்கி இருந்தால் முதலில் அதனை நேர்செய்துவிட்டுப் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று கறாராகச் சொல்லிவிடுவாராம்.

பி.யூ.சின்னப்பாவின் இந்த அருங்குணத்தை அப்படியே கற்றுக்கொண்டு தானும் அதன்படி நடப்பதாக எம்ஜிஆர் சொன்னதுண்டு. தனது மானசீக முன்னோடிகளாக பி.யூ.சின்னப்பாவையும், எம்.கே.தியாகராஜ பாகவதரையும் எம்ஜிஆர் குறிப்பிடுவது வழக்கம். ஒரு நடிகன் என்பவன் தனது ரசிகர்கள் முன்னிலையில் மிடுக்கோடு தோற்றமளிக்க வேண்டும் என்பதை எம்கேடி-யிடம் கற்றதாக எம்ஜிஆர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமுறை சின்னப்பா படமொன்றுக்காக ஒரு கவிஞர் பாடல் ஒன்றை மிகவும் சிரமம் எடுத்து எழுதித் தந்திருக்கிறார். தயாரிப்பாளரும் இயக்குநரும் அந்தப் பாடல் அந்தப் படத்திற்கு அவ்வளவாகப் பொருத்தமாக இல்லை என்று சொல்லி அதை வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். அத்துடன் அந்தக் கவிஞருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பளிப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

இதைக் கவனித்த சின்னப்பா, அந்த இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் பேசினார். “அந்தக் கவிஞரைப் பொறுத்தமட்டில் சிரமப்பட்டு ஒரு பாடலை எழுதித் தந்துவிட்டார். அதற்காக அவர் உழைத்திருக்கிறார். அந்தப் பாடலைப் பயன்படுத்திக்கொள்வதும் பயன்படுத்தாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால், அந்தக் கவிஞர் நமக்காகத் தன் கடமையைச் செய்திருக்கிறார். அதற்கான ஊதியத்தை அவருக்குத் தருவதுதான் நியாயம்” என்று அவர்களிடம் பேசி அந்தப் பாடலுக்கான சன்மானத்தைப் பெற்று அந்தக் கவிஞருக்குத் தந்தாராம் சின்னப்பா.

ஒருமுறை மதுரைக்கு வந்திருந்த பி.யூ.சின்னப்பாவும், டி.எஸ்.பாலையாவும், கே.ஆர். ராமசாமியும் லாட்ஜ் அறை ஒன்றில் தங்கினார்கள். அங்கே அவர்கள் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்து அறையில் இருந்திருக்கிறார் இளைஞரான டிஎம்எஸ். அது அவர் பாடகராகப் புகழ்பெறாத காலம். டிஎம்எஸ் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

டி.எம்.சௌந்தரராஜன்
டி.எம்.சௌந்தரராஜன்

இதைக் கேட்டுவிட்டு, "இவன் ஏன் இப்படிக் கத்துறான்?" - என்று பக்கத்து அறையில் இருந்த டி.எஸ்.பாலையாவும், கே.ஆர்.ராமசாமியும் எரிச்சலாகி விமரிசித்திருக்கிறார்கள். அதைக் கேட்ட சின்னப்பாவோ, "யார் கண்டது? இப்படிக் கத்திக் கத்தியே நாளைக்கு அவனும் ஒரு பெரிய புகழ்பெற்ற பாடகனாக - இசைவாணனாக ஆனாலும் ஆகிவிடலாம்!" என்றாராம். பின்னாளில் பெரும் பாடகரான பின்பு இதை அறிந்துகொண்ட சௌந்தரராஜன் மகிழ்ச்சியோடு இந்தச் சம்பவத்தை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாராம்!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா
தேநீர் நேரம் - 21: சினிமா கொட்டகைகள் உருவான சரித்திரம்!

வீடியோ வடிவில் காண:

பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா
தேநீர் நேரம் - 22: கத்தினார் டி.எம்.எஸ்... கணித்தார் பி.யூ.சின்னப்பா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in