தேநீர் நேரம் - 10: ஒட்டுமொத்த கச்சேரிக்கும் ஒன்ஸ்மோர்!

எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

தமிழ் சினிமாவின் ஆரம்பநாட்கள் புராணக் கதைகளையே பேசி வந்தது. மக்களுக்குத் தெரிந்த கதைகள் அவை என்பதால் நாடகங்களிலும் அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் அவற்றை எடுத்தாள்வது கலைஞர்களுக்குச் சுலபமாக இருந்தது. வணிக நோக்கிலும் அந்த உத்தி வெற்றி பெற்றது. அந்தப் பழைய போக்கில் ஒரு முறிப்பை ஏற்படுத்தி மனித சமூகத்தின் வாழ்வியல் கதையைத் தமிழ்த் திரைப்படத்தில் பதிவு செய்ய முதன்முதலில் முயன்றவர் பழம்பெரும் திரைக்கலைஞர் ராஜா சாண்டோதான். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கே.சுப்பிரமணியம் தமிழ் சினிமாவில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்ன முன்னோடி ஆவார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி - கே.சுப்பிரமணியம்
எஸ்.டி.சுப்புலட்சுமி - கே.சுப்பிரமணியம்அனந்த சயனம் படத்தில்...

அப்போது நாடகங்களில் மிகவும் வெற்றிகரமான ஜோடியாக விளங்கியவர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும். இந்த இணைக்கு இணையே இல்லை என்பதே நாடக ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். இந்த ஜோடியைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை கே.சுப்பிரமணித்தையே சாரும்.

பவளக்கொடியில் எம்.கே.தியாகராஜ பாகவதர்
பவளக்கொடியில் எம்.கே.தியாகராஜ பாகவதர்

அப்போது காரைக்குடியில் பாகவதரும் சுப்புலட்சுமியும் இணைந்து நடித்த ’பவளக்கொடி’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. அழகப்பச் செட்டியாரும் லட்சுமணன் செட்டியாரும் அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக கே.சுப்பிரமணியத்தை அழைத்துக்கொண்டு சென்றார்கள். கே.சுப்பிரமணியத்தை இணைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது. நாடகத்தில் அர்ச்சுனனாக ஒரு கட்டழகு வாலிபன் அதி அற்புதக் குரலில் பாடி நடித்து ரசிகர்களைக் கவர்த்திழுத்தார். அவருடைய பாடல்களைக் கேட்கவே தினசரி நாடகத்திற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் படையெடுத்ததையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். அந்த நாடகத்தில் பவளக்கொடியாக நடித்த அந்த நடிகை சுப்புலட்சுமியோ வசனங்களைக் கணீர் கணீர் என்று பேசி நடித்தார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி, சச்சு, டி.எஸ்.பாலையா
எஸ்.டி.சுப்புலட்சுமி, சச்சு, டி.எஸ்.பாலையாநீரோட்டம் நாடகத்தில்...

அந்த இருவரையும் ஜோடியாகப் போட்டு இதே ‘பவளக்கொடி’யைத் திரைப்படமாக எடுக்கலாம் என்று தன்னை உடன் அழைத்துவந்த தயாரிப்பாளர்களிடம் யோசனை சொன்னார் கே.சுப்பிரமணியம். அழகப்பச் செட்டியாரும் லட்சுமணன் செட்டியாரும் அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டார்கள். ‘பவளக்கொடி’ உருவானது. 1934-ம் ஆண்டு அது வெளிவந்தது. அமோக வெற்றியைக் கண்டது. ஒன்றல்ல... இரண்டல்ல... நூறு வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்தது.

எஸ்.டி.சுப்புலட்சுமி
எஸ்.டி.சுப்புலட்சுமி

இந்தப் படத்தில் மொத்தம் 55 பாடல்கள். வியப்பாக உள்ளதா? இதுதானே அந்த நாளின் வழமை. இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா? பவளக்கொடி திரைப்படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமிக்குச் சம்பளம் 2 ஆயிரம் ரூபாய்.கதாநாயகன் எம்.கே.தியாகராஜ பாகவதருக்குச் சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். இயக்குநர் கே.சுப்பிரமணியத்துக்கோ சம்பளம் வெறும் 700 ரூபாய் மட்டுமே. அந்தளவுக்கு எஸ்.டி சுப்புலட்சுமி நாடக உலகில் மிக உச்சத்திலிருந்திருக்கிறார். விரைவிலேயே எஸ்.டி.சுப்புலட்சுமியை இயக்குநர் கே.சுப்பிரமணியம் திருமணம் செய்துகொண்டார்.

‘பவளக்கொடி’ வெளிவந்தபின் திரையுலகிலும் சுப்புலட்சுமி பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகள் பல வந்துசேர்ந்தன. 1939-ல் மீண்டும் கே.சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் கல்கியின் ‘தியாக பூமி’ படத்தில் சுப்புலட்சுமி நடித்தார். பெண்ணின் பெருமையைப் பேசும் சாவித்திரி என்ற கதாபாத்திரம் அவருக்கு. மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

சேவா சதனம் படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி
சேவா சதனம் படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி

கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு சாதனைப் படம் ‘சேவா சதனம்’ (1938). அதில்தான் உலகப்புகழ் கர்னாடக இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அறிமுகம் செய்தார் சுப்பிரமணியம். பிரபல இந்தி மற்றும் உருதுமொழி எழுத்தாளர் பிரேம்சந்த் நாவலின் தமிழாக்கத் தொடர்கதைதான் இதன் கதை. அப்போது அது ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அதனை சமூக சேவகி அம்புஜம்மாள் என்பவர் மொழிபெயர்த்து எழுதினார். அப்போதே 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் கதையைப் படமாக்கும் உரிமையைப் பெற்றார் சுப்பிரமணியம். அந்தக் காலத்தில் ஒரு கதைக்குக் கொடுக்கப்பட்ட விலைகளில் இதுதான் பெரிய தொகையாம்.

சேவா சதனம் படத்தில்...
சேவா சதனம் படத்தில்...

படத்தின் நாயகியாக எம்.எஸ். ஒப்பந்தமானார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட புதியதொரு திருப்புமுனையாகப் பேசப்பட்டது இந்த ‘சேவா சதனம்’ திரைப்படம். அந்த நாளிலேயே உயர்சாதி பிராமணக் குடும்பங்களில் நடக்கும் மூடவழக்கங்களைச் சாடியது இந்தப் படம். வரதட்சணை கொடுமைக்கு பலியாகும் சிறு பெண்களுக்குச் சார்பாகக் குரல் கொடுத்தது இந்தப் படம். பொருளாதார வசதியில்லாத குடும்பத்தில் பிறக்கும் சிறுவயதுப் பெண்ணை வயதில் மூத்த ஆணுக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் அப்போது மலிந்திருந்தது. அதனைச் சாடி ஆவேச முழக்கமிட்டது இத்திரைப்படம்.

இந்தப் படத்தின் மிகமிகத் துணிச்சலான இறுதிக் காட்சி என்பது அப்போதும் இப்போதும் வியப்புக்குரிய ஒன்றுதான். வயதில் சிறிய பெண்ணை மணக்கும் நாயகனான ஆண் இறுதியில் மனம் திருந்தி, தான் அணிந்திருந்த பூணூலை அறுத்து வீசியெறிகிறார். இப்படியொரு காட்சியை கே.சுப்பிரமணியன் ‘சேவா சதனத்தில்’ இடம்பெறச் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் ஒருவிதச் சிலிர்ப்பும் திகைப்பும் அடைந்தார்களாம். முப்பதுகளில் இத்தனைத் துணிச்சலான ஒரு தமிழ்ப்படமா என்று அறிவுலகம் வியந்து இயக்குநரின் துணிவை மெச்சியது.

கே.சுப்பிரமணியம்
கே.சுப்பிரமணியம்

கொசுறாக இன்னொரு தகவல். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் பொருட்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் அந்நாளில் பிரபலமாக இருந்தன. அப்போது அந்தக் கலை நிகழ்ச்சிகளுக்கு இயக்குநர் கே.சுப்பிரமணியம் பொறுப்பு. அவர் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமி ஒரு கர்னாடக இசைப்பாடகியை சுப்பிரமணியத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவருக்கு அந்தக் கலை நிகழ்ச்சியில் கச்சேரி செய்யும் வாய்ப்பை கே.சுப்பிரமணியம் வழங்கினார்.

கும்பகோணம் நகரமே அவரது குரலினிமையில் மயங்கிக் களித்தது. இப்படியும் ஒரு தேன்குரலா என்று வியந்தது. கச்சேரி முடிந்ததும் ‘ஒன்ஸ்மோர்’ கோஷம் விண்ணைப் பிளந்தது. ஒரு பாடலுக்கோ அல்லது ஒரேயொரு நடனத்துக்கோ ‘ஒன்ஸ்மோர்’ கேட்பதுதானே உலக வழக்கம்? இது என்னடா புதுசா இருக்கு என்று வியப்பேற்படுத்தியது இந்தச் சம்பவம். ஆமாம், ஒரு முழு கச்சேரியையே ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு மறுபடியும் பாடச் சொன்னார்கள் குடந்தை இசைப் பிரியர்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

வியந்த கே.சுப்பிரமணியம் மீண்டும் ஒருநாள் அவர் கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்தார். இது எங்கேயும் நடந்திராத அதிசயம்தானே? அந்த அதிசயத்தை நிகழ்த்திய அற்புதக்குரலுக்குச் சொந்தக்காரர்தான் ‘சேவா சதனம்’ திரைப்படத்தில் அறிமுகமான அதன் நாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற இசையரசி!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

எம்.எஸ்.சுப்புலட்சுமி
தேநீர் நேரம் -9 : டி.ஆர்.மகாலிங்கம் மீது கல்லெறிய மறுத்த சீர்காழி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in