தேநீர் நேரம்-13 : நவராத்திரி சென்டிமென்ட்டில் நவரத்தினம் எடுத்த ஏ.பி.நாகராஜன்!

சிவாஜி - சாவித்திரி
சிவாஜி - சாவித்திரிநவராத்திரி படத்தில்...

புராண வகைக் கதைகளில் சமூகக் கருத்துக்களையும் கலந்து ஜனரஞ்சகமாக அந்த வகைமைக்கு மறுஉயிர் தந்தவர் ஏ.பி.நாகராஜன் என்ற திரை ஜாம்பவான். அவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர். முழுக்க சமூகக் கதையாடல்களையும் அவர் கையாளவே செய்தார். ஒருசமயம் அவரின் பொருளாதார நிலை பெரிய சரிவைச் சந்தித்தது.

எதிர்பாராத வகையில் நொடித்துப் போன ஏ.பி.நாகராஜன், தான் வைத்திருந்த ஆடம்பரக் கார் சவர்லேவை விற்கும் நிலைக்கு வந்தார். ஆசை ஆசையாய் வாங்கிய விலை உயர்ந்த கார் அது. ஆந்திராவில் நெல்லூரில்போய் அந்தக் காரை ரெஜிஸ்டர் செய்துவந்தார். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அங்கே பதிவு செய்தால்தான் நம்பர் பிளேட்டில் ‘ஏபிஎன்’ என்று வரும். சினிமா வட்டாரத்தில் அவரை ஏபிஎன் என்றுதானே அழைப்பார்கள், அதனால்.

நாடக குழுவினருடன் ஏ.பி.நாகராஜன்
நாடக குழுவினருடன் ஏ.பி.நாகராஜன்

‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962) படம்தான் ஏபிஎன்-ஐ நொடிக்கச் செய்துவிட்டது. சொகுசுக் காரை விற்றது மட்டுமல்ல. லாயிட்ஸ் சாலையிலிருந்த தனது பிரம்மாண்டமான மாளிகையையும் விட்டு ஆழ்வார்ப்பேட்டையில் சிறியதொரு வீட்டில் குடியேற நேர்ந்தது அவருக்கு. இத்தனைக்கும் ‘வடிவுக்கு வளைகாப்பு’ சிவாஜியும் சாவித்திரியும் நடித்த படம்.

ஏ.பி.நாகராஜன்
ஏ.பி.நாகராஜன்

இடையில், அகிலனின் ‘சிநேகிதி’ நாவலை ‘குலமகள் ராதை’ (1963) என்ற பெயரில் படமாக இயக்கினார். ஏ.பி.நாகராஜன். அதனைத் தொடர்ந்துதான் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஸ்ரீவிஜயலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, சிவாஜியை வைத்து ‘நவராத்திரி’ (1964) எனும் திரைப்படத்தை உருவாக்கினார். ‘நவராத்திரி’ தனது கஷ்டத்தைப் போக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அது ஒன்பது நாட்கள் நடக்கும் கதை. அந்த ஒன்பது நாட்களிலும் ஒன்பது விதமான குணங்களைக் கொண்ட ஆண்களை ஒரு இளம் பெண் சந்திக்க நேர்கிற சம்பவங்களைச் சொல்லும் கதை அது. அந்த ஒன்பது குணங்களையுடைய ஒன்பது ஆண்களாக சிவாஜியே தோன்றினார். அதுதான் படத்தின் சிறப்பாகவும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒன்பது பேரையும் எதிர்கொள்ளும் இளம் பெண்ணாக சாவித்திரி. மிகச் சிறப்பாக வந்திருந்தது படம். ஒரு மாறுபட்ட சினிமாவாகவும் ரசிகர்களைக் கவர்ந்த இந்த ‘நவராத்திரி’ 100 நாட்கள் ஓடிச் சாதித்து நாகராஜனையும் கொஞ்சம் கைத்தூக்கிவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிவாஜி சாவித்திரி இணைந்து நடித்த ‘திருவிளையாடல்’ படத்தை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் ஏ.பி.என். 1958-ல் அவர் உருவாக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’ படத்துக்கும் இந்தத் ’திருவிளையாடல்’ படத்திற்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது. அது முழுக்க முழுக்க புராணக் கதையை மட்டுமே பேசியது. ஆனால் திருவிளையாடலில் கடவுளர்கள் பூமிக்கு வந்து, மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு உதவுகிறார்கள்.

திருவிளையாடற் புராணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபெருமானின் சில திருவிளையாடல்களை மிகவும் நயமாகவும் சுவையாகவும் தந்து தனது திறன் முழுவதையும் வெளிக்காட்டினார் ஏ.பி.நாகராஜன். நக்கீரர் வேடத்தில் அவரே நடித்தார். ‘திருவிளையாடல்’ மகத்தான வெற்றி பெற்று 26 வாரங்கள் ஓடி ஏபிஎன்-ஐ புகழ் உச்சிக்கு ஏற்றியது.

அதேபோல, 1966-ல் ‘சரஸ்வதி சபதம்’ படத்தை எடுத்தார் நாகராஜன். அந்தப் படமும் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து இடைவிடாமல் புராணப்படங்களையே உருவாக்கியதால் ஏபிஎன்-னுக்கு அருட்செல்வர் என்ற அடைமொழி கிடைத்தது. புராண சினிமா ஸ்பெஷலிஸ்ட் என்று அவரைப் பெருமையாகவும் கிண்டலாகவும் அழைக்கத் தொடங்கினார்கள். என்றாலும் ‘கந்தன் கருணை’ தவிர மற்ற படங்கள் அவருக்கு அவ்வளவாக லாபம் தரவில்லை. பிரம்மாண்ட அரங்க அமைப்புகள், பளபளக்கும் உடையலங்காரங்கள், நகைகள், கிரீடங்கள் என்று ஆடம்பரச் செலவுகள் செய்துவிட்டு அதற்கேற்ப லாபம் வரவில்லை என்றால் என்ன செய்வது?

1967-ல் ஜெமினியை வைத்து ‘சீதா’ என்ற படத்தை எடுத்தார் நாகராஜன். அது ஜெமினியின் 100-வது படம். கொத்தமங்கலம் சுப்புவின் நாவலான ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை 1968-ல் படமாக்கினார். தமிழகக் கலைகளான நாகசுரத்தையும் பரதத்தையும் போற்றுகிற அற்புதமான படமாக வெளிவந்தது இந்த ‘தில்லானா மோகனாம்பாள்’. சிவாஜி கணேசன் - பத்மினி உள்ளிட்ட பலரும் நடித்த இந்தப் படம் இன்றளவும் உன்னதமான திரைக்கதை மற்றும் திரைப்படச் செய்நேர்த்திக்குப் புகழ்ந்து பேசப்படக்கூடியதாக இருக்கிறது.

தில்லானா மோகனாம்பாள்
தில்லானா மோகனாம்பாள்

ஒருமுறை, ஏ.பி.நாகராஜன் கட்டிய பிரிவியூ தியேட்டரைத் திறந்துவைக்க ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி வந்திருந்தார். அவர் பேசும்போது சொன்னார்: "நான் படமெடுத்தால் ராஜராஜ சோழன் வரலாற்றைத்தான் எடுப்பேன். அதற்கு ஏ.பி.நாகராஜன்தான் இயக்குநர்!"

தமிழ்நாட்டின் முதல் 70 எம்.எம். திரையரங்கைக் கட்டிய ஜி.உமாபதி தமிழகத்தின் முதல் சினிமாஸ்கோப் படமாக ‘ராஜராஜ சோழன்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அரு.ராமநாதன் எழுதி, டி.கே.சண்முகம் நாடகக் குழுவினர் நடத்திவந்த கதையை வாங்கி, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கினார் நாகராஜன். படப்பிடிப்பின்போது கேமராவின் லென்சை மாற்றி, சினிமாஸ்கோப் லென்சைப் பொருத்தினார்கள். படம் காட்டும் கருவியான புரொஜக்டர்களிலும் சினிமாஸ்கோப் லென்சைப் பொறுத்தினால் சினிமாஸ்கோப் படத்தைத் திரையிட இயலும் என்று விநியோகஸ்தர்களிடமும் தியேட்டர் உரிமையாளர்களிடமும் விளக்கினார் உமாபதி. படத்தின் ஒவ்வொரு பிரதியோடும் இரண்டு சினிமாஸ்கோப் லென்ஸ் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

1973-ல் வெளிவந்த ‘ராஜராஜ சோழன்’ படத்தில் சிவாஜி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், சிவகுமார். லட்சுமி, குமாரி பத்மினி என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. முதல் சினிமாஸ்கோப் படம் என்ற வியப்பு இருந்தாலும் படத்துக்குச் செய்த செலவை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் வரவில்லை. அதனால் ஏபிஎன் இன்னும் திணறினார்.

இருந்தபோதும் ‘குமாஸ்தாவின் மகள்’ (1974), சென்னைக்கு பரதம் கற்க வந்த பிரெஞ்சு நாட்டு நடிகையை வைத்து ‘மேல்நாட்டு மருமகள்’ (1974) என்று தொடர்ச்சியாக படங்களை எடுத்துக்கொண்டேதான் இருந்தார் ஏபிஎன். ஆனாலும் பொருளாதாரப் போதாமை அவரை நிம்மதியின்றி அலைக்கழித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். 1964-ல் பொருளாதாரச் சிரமம் வந்தபோது சிவாஜியை வைத்து எடுத்த ‘நவராத்திரி’ தனக்குக் கை கொடுத்ததே அதுபோல இன்னொரு படம் செய்தால் என்ன என்று தோன்றியது அவருக்கு

நவராத்திரி - நவரத்தினம்
நவராத்திரி - நவரத்தினம்

’நவராத்திரி’ கதையை சற்றே மாற்றி ‘நவரத்தினம்’ ஆக்கினார். சிவாஜிக்கு பதிலாக எம்ஜிஆரை நாயகனாக்கினார். ஒன்பது விதமான இளம் பெண்களுடன் கதாநாயகனுக்கு ஏற்படுகிற சந்திப்பு அனுபவங்களே ‘நவரத்தினம்’ ஆனது. அந்தப் படம் ரிலீஸ் ஆனதும் அவர் நினைத்தது போலவே கொஞ்சம் பொருளாதாரத் தென்றல் அவர்மீது சில்லென்று வீசியது. ஆனாலும், ‘நவராத்திரி’ அளவுக்கு ‘நவரத்தினம்’ உச்சம் தொடவில்லை. - ஏபிஎன்-னின் சென்டிமென்ட்டும்தான்!

நவரத்தினம்
நவரத்தினம்

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

சிவாஜி - சாவித்திரி
தேநீர் நேரம்:12 கருணாநிதி கலைஞர் கருணாநிதி ஆனது இப்படித்தான்!

வீடியோ வடிவில் காண:

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in