தேநீர் நேரம் 2 : எம்ஜிஆருக்கு முன்பே கலைவாணருக்கு குறிவைத்த எம்.ஆர்.ராதா!

எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்த போது...
எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்த போது...

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு போராளிக் கலைஞன். கலகத்துக்கு அஞ்சாதவர். எதையும் துணிந்து எதிர்த்துவிடுகிற, தவறென்று தெரிந்தால் தட்டிக்கேட்கிற குணத்துக்குச் சொந்தக்காரர். கோபமும் அவசரப்படும் குணமும்கூட அவரது இயல்புதான்... மறுக்க முடியாது. பெரியாருக்குத் தானுமொரு வலதுகரமாக அவரோடு நின்றவர் ராதா. பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை அவ்வப்போது தனது நாடகங்களில் வைத்தார் அவர். நாடகங்களில் அவர் வைக்கும் அரசியல் - சமூக விமர்சனங்களைத் தாங்காமல் அவருக்காகவே நாடகத் தடைச்சட்டமெல்லாம் வந்தது.

காசு கொடுத்து நாடகம் பார்க்க வரும் எளியவர்களுக்குக் கொடுக்கிற மரியாதையை ஊரின் பெரிய மனிதர்கள் என்ற பெயரில் இலவச பாஸ் வங்கிக்கொண்டு வந்து நாடகம் பார்க்கும் கனவான்களுக்குத் தர மறுத்தார் ராதா. சினிமா பேசத் தொடங்கியதும் நாடகக்காரர்கள் எல்லோரும் சினிமாவை நோக்கிப் படையெடுத்த நேரத்திலும் நாடகத்தையே உயிராக மதித்து அதனோடேயே கட்டுண்டு கிடந்தவர் ராதா.

நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகக் கொட்டகைக்குள் அரிதாரம் பூச வந்ததே ஒரு சுவையான சம்பவம்தான். அப்போது அவருக்கு எட்டு வயதிருக்கும். சரியாகப் படிக்காமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருப்பார். அதனால் அவரது அம்மாவுக்கு அவர் மீது வருத்தமும் கோபமும் இருந்தது. ஒருநாள், தனது சகோதரர்களோடு சாப்பிட உட்கார்ந்திருந்தார் ராதா. அம்மா மீன் பொரித்திருந்தாள். அண்ணனுக்கு இரண்டு பொரித்த மீன்களைச் சுடச்சுட வைத்தாள் அம்மா. ஆனால், தம்பிக்கும் ராதாவுக்கும் ஒரேயொரு மீன்தான். ராதாவுக்குக் கோபம் வந்து, “ஏன் எங்களுக்கு மட்டும் ஒரு மீன், அண்ணனுக்கு இரண்டு மீன்கள்?” என்று கேட்டார். அதற்கு அம்மா சொன்னாள்: “ஊரைச் சுத்துற பயலுகளுக்கு ஒரு மீன் பத்தாதா?”

உடனே, கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய ராதாவுக்கு எழும்பூர் ரயில் நிலைத்தில் ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு என்ற நாடகக்காரர் அடைக்கலம் கொடுத்தார். தனது பெட்டிகளை ராதாவைச் சுமக்கவிட்ட அவர் கேட்டபோது, “எனக்கு அம்மா, அப்பா யாருமில்லை” என்று சொல்லிவிட்டார் ராதா. ”என்னுடைய நாடகக் கம்பெனியில் சேர்ந்துகொள்கிறாயா?” என்று கேட்டார் நாயுடு. சம்மதித்து அவரோடு ரயிலில் சிதம்பரம் போய்விட்டார் ராதா. இப்படித்தான் எம்.ஆர்.ராதா என்ற அந்த மகாகலைஞன் கலையுலகுக்குக் கிடைத்தார்.

நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் கோலோச்சிய எம்.ஆர்.ராதாவுக்கும் எம்ஜிஆருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ராமாவரம் தோட்டத்தில் நடந்த அந்தத் துப்பாக்கிச் சூடு, அதனால் ராதா சிறை செல்ல நேர்ந்தது எல்லாம் உலகம் அறிந்ததுதான். ஆனால், அதற்கு முன்பாகவே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை ராதா துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பலரும் அறியாதது. வியப்பாக இருக்கிறதல்லவா?

‘இழந்த காதல்’ என்பது ராதா நாயகனாக நடித்த நாடகம். அதில் ஜெகதீஷ் என்பது ராதா ஏற்ற பாத்திரம். அதனால் அவரது புகழ் மிக உச்சத்திற்குப் போனது. அதனால் அந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டார் கலைவாணர். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், படத்தின் நாயகன் ராதா இல்லை. கே.பி.காமட்சி என்ற நடிகரை ஒப்பந்தம் செய்தார் கலைவாணர். இதனை அறிந்த ராதாவுக்குக் கடும் கோபம் வந்தது. தன்னை என்.எஸ்.கிருஷ்ணன் புறக்கணித்துவிட்டார் என்று கருதினார். இருவரும் நாடக மேடை நண்பர்கள். “வாடா போடா” என்று பேசிக்கொள்ளக் கூடியவர்கள். இப்படியிருக்க, ஏன் கிருஷ்ணன் ராதாவைத் தவிர்த்தார்... அதன் காரணம் யாருக்குத் தெரியும்?

என்.எஸ்.கிருஷ்ணன்
என்.எஸ்.கிருஷ்ணன்

இந்தச் சூழலில், உளுந்தூர்ப்பேட்டையில் ஒரு துப்பாக்கியை வாங்கிக்கொண்டார் ராதா. அது கலைவாணரைக் குறிவைக்கத்தான் என்பதை அறிந்து நாடகாசிரியர் யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை பதறினார். இதை கலைவாணரிடம் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். ராதாவின் நாடகக்குழு கரூரில் முகாமிட்டிருந்தது. எதற்கும் அஞ்சிப் பழக்கமில்லாத கலைவாணர், நேரே அங்கு போனார். ராதாவைப் பார்த்துச் சத்தம்போடத் தொடங்கினார்.

எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா

"ஏன்டா... உனக்குப் புத்தி இருக்காடா? நடிப்புன்னு வந்துட்டா உனக்குக் கத்துக்குடுக்கிற தகுதியும் யோக்கியதையும் எனக்கு இருக்காடா? கே.பி.காமாட்சியை ‘இப்படி நடி... அப்படி நடிக்காதே’ன்னு எல்லாம் என்னால் அதட்டிச் சொல்லமுடியும். உங்கிட்ட அப்படிச் சொன்னா மரியாதைக் குறைவா இருக்காதா? அதை நீ வேணும்னா வாய்ப்புக் குடுத்ததுக்காகவும் சம்பளம் வாங்குறதாலும் பொறுத்துக்கலாம்... என்னால் பொறுத்துக்க முடியாது. அதனால்தான் நான் உன்னை இந்தப் படத்துல கதாநாயகனா போடல” என்று சொன்ன கலைவாணர். “என்னமோ என்னைய சுட்டுக்கொல்ல துப்பாக்கி வாங்கிருக்கியாமே... எடுத்துட்டு வந்து தாராளமா என்னைய சுடு... நண்பன் கையால சந்தோசமா செத்துட்டுப் போறேன்..." என்றார்.

இதைக் கேட்ட ராதா நெகிழ்ந்துபோனார். அவரது கண்கள் கலங்கின. தனது தவறை உணர்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் கொஞ்ச காலம் கனவுத் தொழிற்சாலைக்குள் பேசுபொருளாக இருந்தது!

வீடியோ வடிவில் காண:

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in