சாஷீன் லிட்டில்ஃபெதர்
சாஷீன் லிட்டில்ஃபெதர்

பிராண்டோ சார்பாக ஆஸ்கர் விருதை மறுத்த செவ்விந்திய நடிகை மரணம்!

நடிகர் மார்லன் பிராண்டோ சார்பில் ஆஸ்கர் மேடையேறி, அந்த விருதை ஏற்க மறுத்து ஹாலிவுட் திரையுலகை அதிர்வை ஏற்படுத்திய செவ்விந்திய நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர், நேற்று (அக்.2) காலமானார்.

1946 நவம்பர் 14-ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாலினாஸ் நகரில் பிறந்தவர் சாஷீன் லிட்டில்ஃபெதர். அவரது தந்தை செவ்விந்தியர். தாய் ஐரோப்பிய அமெரிக்கர். கல்லூரி முடித்த பின்னர் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு எனும் திரைத் துறைச் சங்கத்தில் இணைந்தார். ‘கவுன்செலர் அட் க்ரைம்’, ‘தி லாஃபிங் போலீஸ் மேன்’, ’ஷூட் தி சன் டவுன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அவரது வாழ்க்கையை மாற்றியமைத்த தருணம் 1973 ஆஸ்கர் மேடையில் நிகழ்ந்தது.

1973 மார்ச் 27-ம் தேதி, 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. ‘தி காட்ஃபாதர்’ (1972) படத்துக்கு சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகராக மார்லன் பிராண்டோவின் பெயரை விழா மேடையில் அறிவித்தார் நடிகர் ரோஜர் மூர். ஆனால், மார்லன் பிராண்டோ அங்கு இல்லை. அவருக்குப் பதிலாக சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறினார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒரு செவ்விந்தியப் பெண் மேடையேறியது அதுவே முதல் முறை.

பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட ரோஜர் மூர், ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்க முற்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த சாஷீன், மைக் முன் சென்று ஒரு கடிதத்தை வாசித்தார். திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதை எதிர்க்கும் வகையில் இந்த எதிர்ப்பை சாஷீன் மூலம் பிராண்டோ பதிவுசெய்திருந்தார்.

ஆஸ்கர் மேடையில் சாஷீன் லிட்டில்ஃபெதர்
ஆஸ்கர் மேடையில் சாஷீன் லிட்டில்ஃபெதர்

மார்லண்ட் பிராண்டோவின் கடிதமும், சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கர் அரங்கை அதிரச் செய்தன. அங்கிருந்த பெரும்பாலானோர் அதை ஆமோதித்து வரவேற்றனர். அதேசமயம், வெள்ளையின நடிகர்கள் பலர் அதை ரசிக்கவில்லை. வெஸ்டர்ன் கெளபாய் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜான் வெய்ன் மேடையிலேயே சாஷீனிடம் கடுமையாக நடந்துகொண்டார். தொடர்ந்து சாஷீன் அவமதிப்புகளை எதிர்கொண்டார். வெள்ளையின வெறி கொண்ட திரைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரைத் தொடர்ந்து இழிவுபடுத்திவந்தனர். அவரது சினிமா வாய்ப்புகளும் தடைபட்டன.

இந்தச் சூழலில், ‘திரைத் துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்’ என சாஷீனிடம் சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மன்னிப்பு கோரியிருந்தது.

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த சாஷீன் நேற்று கலிபோர்னியாவில் உள்ள நொவட்டோ நகரில் தனது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75.

சாஷீனின் போராட்ட வாழ்க்கை வெள்ளையினத்தவர் அல்லாத கலைஞர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக அமைந்தது. ‘சாஷீன் பிரேக்கிங் தி சைலன்ஸ்’ எனும் ஆவணப் படம் 2021-ல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in