பிராண்டோவின் பிரதிநிதியாக ஆஸ்கர் விருதை மறுத்த செவ்விந்திய நடிகை!

50 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னிப்பு கோரிய ஆஸ்கர் கமிட்டி
மார்லன் பிராண்டோ எழுதிய கடிதத்துடன் ஆஸ்கர் மேடையில் சாஷீன் லிட்டில்ஃபெதர்
மார்லன் பிராண்டோ எழுதிய கடிதத்துடன் ஆஸ்கர் மேடையில் சாஷீன் லிட்டில்ஃபெதர்

1973-ல் ’தி காட்ஃபாதர்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது தனக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்குப் பதிலாக சாஷீன் லிட்டில்ஃபெதர் எனும் செவ்விந்தியப் பெண்ணை அனுப்பி - மேடையிலேயே அதை மறுதலிக்கச் செய்தவர் நடிகர் மார்லன் பிராண்டோ. ஹாலிவுட் திரையுலகில் செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மார்லன் பிராண்டோ எனும் மகத்தான கலைஞர் எழுப்பிய கலகக் குரல் அது. ஏற்கெனவே, செவ்விந்தியர் என்பதால் ஹாலிவுட் திரையுலகில் கடும் புறக்கணிப்புகளை எதிர்கொண்டுவந்த சாஷீன், அந்த நிகழ்வுக்குப் பின்னர் மிகக் கடுமையான அவமதிப்பையும், இழிவையும் அனுபவிக்க நேர்ந்தது.

இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் சாஷீன் லிட்டில்ஃபெதரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது ஆஸ்கர் கமிட்டி.

மார்லன் பிராண்டோ
மார்லன் பிராண்டோ

பிராண்டோவின் அறச்சீற்றம்

1973 மார்ச் 27-ம் தேதி, 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. ‘தி காட்ஃபாதர்’ (1972) படத்துக்கு சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகராக மார்லன் பிராண்டோவின் பெயரை விழா மேடையில் அறிவித்தார் நடிகர் ரோஜர் மூர். ஆனால், மார்லன் பிராண்டோ அங்கு இல்லை. அவருக்குப் பதிலாக செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறினார். செவ்விந்தியப் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையுடன் அவர் ஆஸ்கர் மேடையேறிய காட்சி, வரலாற்றில் மறக்க முடியாத தருணம் ஆகும். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒரு செவ்விந்தியப் பெண் மேடையேறியது அதுவே முதல் முறை.

பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட ரோஜர் மூர், ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்க முற்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த சாஷீன், மைக் முன் சென்று ஒரு கடிதத்தை வாசிக்கத் தொடங்கினார்.

“இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” என்றார் சாஷீன். ஒரு நிமிடம்தான் அவர் பேசினார் (பிராண்டோவின் முழு உரையும் மறுநாள் நாளிதழ்களில் வெளியானது).

சாஷீன் லிட்டில்ஃபெதர்
சாஷீன் லிட்டில்ஃபெதர்

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் ராஜ்ஜியத்தை நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், ஹாலிவுட் திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். செவ்விந்திய நடிகர்களுக்கு மிகச் சிறிய பாத்திரங்கள்தான் வழங்கப்பட்டன. பிரதானமான வேடம் என்றால் செவ்விந்தியர்களாக வெள்ளையின நடிகர்களே நடித்தனர். இதையெல்லாம் வெள்ளையின நடிகரான மார்லன் பிராண்டோ கடுமையாக வெறுத்தார்.

இன்னொரு சம்பவமும் மார்லன் பிராண்டோவைக் கொந்தளிக்க வைத்தது. தெற்கு டகோடா மாநிலத்தின் ’வூண்டடு நீ’ பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த அநீதிகளுக்கு எதிரான குரல் பிராண்டோவின் கடிதத்தில் எதிரொலித்தது.

மார்லண்ட் பிராண்டோவின் கடிதமும், சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கர் அரங்கை அதிரச் செய்தது. அங்கிருந்த பெரும்பாலானோர் அதை ஆமோதித்து வரவேற்றனர். எதிர்ப்புகள் இல்லாமலும் இல்லை. வெஸ்டர்ன் கெளபாய் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜான் வெய்ன் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாஷீனை மேடையிலிருந்து அகற்ற ஜான் வெயின் கோபாவேசத்துடன் முயற்சித்தார். அவரைக் காவலர்கள் அடக்க வேண்டியிருந்தது. பின்னர் அங்கிருந்து நேரே மார்லன் பிராண்டோவின் வீட்டுக்குச் சென்றா சாஷீன். ஆஸ்கர் விழாவில் அடுத்து நடந்த நிகழ்வுகளையும், தங்களின் புரட்சிக் குரலுக்கான எதிர்வினைகளையும் தொலைக்காட்சியில் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர், தொடர்ந்து சாஷீன் அவமதிப்புகளை எதிர்கொண்டார். வெள்ளையின வெறி கொண்ட திரைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரைத் தொடர்ந்து இழிவுபடுத்திவந்தனர்.

தற்போது சாஷீன் லிட்டில்ஃபெதருக்கு 75 வயதாகிறது. இந்நிலையில், அந்த மகத்தான வரலாற்று நிகழ்வின் 50-வது ஆண்டில் அவருக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறது ஆஸ்கர் கமிட்டி. ஜூன் மாதம் ஆஸ்கர் அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் தனக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பிய தகவலை சாஷீன் நேற்று வெளியிட்டார்.

‘திரைத் துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் டேவிட் ரூபின், மார்லன் பிராண்டோ மற்றும் சாஷீன் அந்தச் செயல், மனித மாண்பின் முக்கியத்துவத்தையும் சக மனிதர் மீதான மரியாதையின் அவசியத்தையும் மீண்டும் மீண்டும் ஆஸ்கர் கமிட்டிக்கு நினைவூட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

‘உரையாடல், காயம் ஆற்றுதல் மற்றும் கொண்டாட்டம்’ எனும் பெயரில் சாஷீன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆஸ்கர் அருங்காட்சியகம் தெரிவித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பேர்டு ரன்னிங்வாட்டர், பேர்டு ரன்னிங்வாட்டர் அவரிடம் உரையாடவிருக்கிறார்.

இந்த மாற்றம் தன்னை நெகிழவைத்திருப்பதாகக் கூறியிருக்கும் சாஷீன், “ஆஸ்கர் அகாடமியின் மன்னிப்பு விஷயத்தைப் பொறுத்தவரை, செவ்விந்தியர்களான நாங்கள் மிகவும் பொறுமையானவர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆம், அதற்கு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சற்றே நகைச்சுவை இழையோட கூறியிருக்கிறார். “எப்போதுமே எங்கள் நகைச்சுவை உணர்வைத் தக்க வைக்க வேண்டியிருக்கிறது. அது நாங்கள் பிழைத்திருப்பதற்கான வாழ்க்கை முறை” எனும் அவரது வார்த்தைகள் செவ்விந்திய மக்களின் வலியை உணர்த்துகின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in