கோலிவுட்டில் இயக்குநராக அடியெடுத்து வைத்து ‘ஆனந்தம்’ படத்தைப் போலவே தன் கடின உழைப்பால் அடுத்தடுத்த வளர்ச்சிகளில் ஹிட் படங்களில் தயாரிப்பாளராக வலம் வந்தவர் லிங்குசாமி. யார் கண் பட்டதோ.... அத்தனை வளர்ச்சியையும், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வைத்த ‘அஞ்சான்’ படம் சீட்டுக்கட்டு சரிந்து விழுந்ததைப் போல குப்புறத் தள்ளியது. அந்த நேரத்தில், ‘உத்தம வில்லன்’ படத்தின் தயாரிப்பாளராகவும் உயர்ந்து நின்றிருந்தார் லிங்குசாமி. மிச்ச சொச்சத்தை ‘உத்தம வில்லன்’ வசூல் பார்த்துக் கொள்ள இன்று வரையில் கோடிகளில் கடனும், வட்டியும் துரத்திக் கொண்டிருக்கிறது.
எத்தனை ஹிட் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் என்று ச்ச்சு.. கொட்டிய திரையுலக ஆசாமிகள், தங்களுடைய கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொள்ள அடுத்த பர்ஸ் கனத்த தயாரிப்பாளரை நோக்கி படையெடுக்க துவங்கினார்கள்.
ரீ-மேக் படங்கள் கல்லா கட்டுகிற காலம் என்பதால் பழைய படங்களை தூசி தட்டி ரீ-ரிலீஸ் செய்து வருபவர்கள் பையா படத்தையும் ரி-ரிலீஸ் செய்கிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு ஹிட் தந்த இயக்குநரை, கார்த்தி, விஷால் போன்ற ஹீரோக்கள் கால்ஷீட் கொடுத்து ஏன் உதவாமல் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இத்தனைக்கும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் ஆட்டக்காரராகத் தான் சினிமாவில் நுழைந்தார் இயக்குநர் லிங்குசாமி. தனது சொந்தக்கதையில் ஃபேமிலி செண்டிமெண்ட், நகைச்சுவை, காதல் எனக் கலந்து கட்டி அவர் இயக்கிய ‘ஆனந்தம்’ படம் அதிரிபுதிரி ஹிட். அதற்கடுத்து அவர் இயக்கிய ‘ரன்’ படம், அதுவரை சாக்லேட் பாயாக பார்த்த மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அந்தப் படத்தில் மாதவன் ‘ஷட்டர இழுத்து மூடும்..’ காட்சி இப்போதைய 2கே கிட்ஸ் வரையிலும் ஆதர்ஷம்.
அதற்கடுத்து, அஜித்தை வைத்து இயக்கிய ‘ஜி’ சற்றே சறுக்கினாலும் ’சண்டக்கோழி’ படத்தில் மீண்டும் சிலிர்த்து நின்றார். அப்போது, கதாநாயகனாக ஒரே ஒரு படத்தில் தான் நடித்திருந்தார் விஷால். விஜய் ஓகே செய்து வைத்திருந்த அந்தப் படக்கதையில் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக விஷாலுக்கு அந்தக் கதை சொன்னார் லிங்குசாமி.
லிங்குசாமியைத் தவிர படக்குழுவில் பெரும்பாலும் யாருக்கும் விஷால் நடிப்பதில் பெரிதாக உடன்பாடு இல்லை. ’புதுப்பையனை நம்பி படம் எடுப்பதா?’ என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். ஆனால், படம் ஹிட்! மதுரக்கார பையனாக ஆறடி உயரத்தில் ஆக்ஷன், காதல் என அனைத்து ஏரியாவிலும் விஷால் பாஸ். லிங்குசாமியின் கணக்கு தப்பவில்லை.
அடுத்து விக்ரம் வைத்து இவர் இயக்கிய ‘பீமா’ பெரிதாக ஓடவில்லை. கார்த்திக்- தமன்னா நடிப்பில் வெளியான ‘பையா’. ’பருத்திவீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் ரக்கட் பாயாக இருந்த கார்த்திக்கு லவ்வர் பாயாக கல்லூரி மாணவிகளிடையே மிகப்பெரிய டர்ன். இந்த மில்லினியல் தலைமுறை ‘பையா’ படத்தை கொண்டாடுகிறது.
அதற்கடுத்து ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி2’, ‘தி வாரியர்’ என இயக்குநராக தொடர் தோல்விகளை சந்தித்தார் லிங்குசாமி. ’திருப்பதி பிரதர்ஸ்’ என்ற பெயரில் படங்களும் தயாரித்து வந்தார். ஆனால், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ வசூல்ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி லட்சங்களில் இருந்த கடனை கோடிகளில் உயர்த்தியது. இதுநாள் வரை அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார் லிங்குசாமி.
மத்தாளத்திற்கு இருபக்கமும் அடிபோல தயாரிப்பாளர்- இயக்குநர் என அவரது கரியரில் அவசியம் ஹிட் கொடுத்தாக வேண்டிய சூழல் இது. ’அவரால் ஹிட்டான நடிகர்கள் கார்த்திக், விஷால், மாதவன் போன்றோர் ஏன் லிங்குசாமிக்கு அதன் பிறகு கால்ஷீட் தரவில்லை? தயாரிப்பில் கோடிகளில் நஷ்டத்தை இழுத்து வைத்த கமலும் கண்டுக்கொள்ளவில்லை’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவரது ‘அஞ்சான்’, ‘பையா’ படங்களின் ரீ-ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கமல், கார்த்தி, மாதவன் போன்றோர் அவருடன் மீண்டும் கைக்கோர்க்கலாம் என்பது தான் ரசிகர்களின் ஆவல்! இந்த நடிகர்களுக்கு லிங்குசாமியை கைதூக்கி விடுவது எல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை என்றாலும் யாருக்கும் மனசில்லை... என்று நொந்து கொள்கிறார்கள் கோலிவுட் ஜாம்பவான்கள்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!