'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' பட விமர்சனம்!

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்' படத்தில்...

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா' படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. அதே ஒன்லைனோடு வெளியாகி இருக்கிறது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா?

அதிகாரத்தைப் பிடிக்க ஆசைப்படும் அமைச்சராகி இருக்கும் நடிகர். அதற்கு காவல்துறையில் பதவியில் இருக்கும் தன் தம்பியை பகடைக்காயாக உபயோகிக்கிறான். இன்னொரு பக்கம், போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் கிருபய ஆரோக்கியராஜ் (எஸ்.ஜே.சூர்யா). மதுரையில் ’ஜிகர்தண்டா’ கேங்காக ரெளடியிசம் செய்யும் அல்லியன் சீசர் (ராகவா லாரன்ஸ்). இந்த மூன்று பேரும் எதிர்பாராதவிதமாக ஒரு புள்ளியில் இணைய, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்'.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

மதுரையில் பிரபல ரெளடியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதற்காக இயக்குநரைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அவரை போட்டுத் தீர்க்கும் அசைன்மென்ட்டில், ஒரு கொலை வழக்கில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் போர்வையில் உள்ளே வருகிறார். ஒரே மாதத்தில் இயக்குநர் போர்வையில் லாரன்ஸை கொன்றுவிட்டு தனது போலீஸ் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பவருக்கு சினிமா ஆசையும் லாரன்ஸ் சூழ்நிலையும் அவரின் பின்னணியும் மெல்ல மெல்ல அவரது மனதை மாற்றுகிறது.

இறுதியில் அந்த சினிமா என்ற ஆயுதம் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வை எப்படி மாற்றுகிறது, அதிகாரம் எப்படி ஒரு இனத்தையே அழிக்கிறது என்பதை சொல்லி இருக்கிறது இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

அல்லியன் சீசராக ராகவா லாரன்ஸ். அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் சில இடங்களில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றாமல் இல்லை. ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு போலீஸ் ஆக ஆசை. எதிர்பாராதவிதமாக லாரன்ஸ் செய்யும் கொலையில் இவர் கைதியாகி பின்பு அவரையே போட்டுத்தள்ளும் அசைன்மென்ட்டில் கமிட் ஆகிறார்.

ரவுடியைக் கொல்லப்போகிறோம் என்ற பயத்தையும் மீறி போலீஸ் ஆசை உந்தித்தள்ள, இயக்குநராக உள்ளே நுழைபவரை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்பதை தனது நடிப்பில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார் சூர்யா. வழக்கமாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் படங்களில் சில இடத்தில் அவரது மிகை நடிப்பு எட்டிப்பார்க்கும். இதில் அப்படி எதுவும் இல்லாமல் ஒரே மீட்டரில் நடித்திருப்பது ஆறுதல்.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

லாரன்ஸின் மனைவி மலையரசியாக வரும் நிமிஷா, போலீஸ் அதிகாரியாக வரும் நவீன் சந்திரா, அமைச்சராக வரும் ஷைன் டாம், இளவரசு, சத்யன் என அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசை, திருவின் ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியம், குமாரின் கலை இயக்கம் கதைக்களம் நடக்கும் 1975 காலக்கட்டத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது. 70 களின் கதை என்பதற்கேற்ப கலர் டோனும் ரெட்ரோ ஸ்டைல் மேக்கிங்கும் கண்களை உறுத்தாமல் கதை நகர்த்த உதவி இருக்கிறது.

அதேபோல, காடுகள் பாதுகாப்பு, அங்குள்ள மக்களின் வாழ்வு போன்றவற்றை அதிகாரம் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை பேசத் துணிந்திருப்பது சிறப்பு என்றாலும் இன்னும் அதை அழுத்தமாகப் பேசியிருக்கலாம்.

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

'ஜிகர்தண்டா' படம் பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கும். ஆனால், இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' நம்மை எமோஷனலாக பல இடங்களில் கலங்கடித்திருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சி. சுமார் மூன்று மணி நேரம் நகரும் படத்தில் முதல் பாதியின் நீளத்தை சற்றே குறைத்திருக்கலாம். பதவி ஆசை, கொலைப்பழியில் இருந்து வெளியே வர இன்னொரு கொலைக்குத் துணியும் அப்பாவி, மதுரை ரெளடியின் இன்னொரு முகம் என்பதாக முதல் பாதியில் செல்லும் படம் கதையின் கருவிற்குள்ளேயே இரண்டாம் பாதியில்தான் நுழைகிறது.

மதுரையையே ஆட்டிப் படைப்பவனுக்கு ஒருமுறை கூட தன்னைக் கொல்ல வந்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா மீது சந்தேகம் வராமல் இருப்பது உறுத்தல். எதிர்பாராத விதமாக கொலைப்பழியால் சிறைக்குச் செல்லும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு அது குறித்தான கவலை இருப்பதாக ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. லாரன்ஸ் தன் மனைவியை கை நீட்டி அடிப்பது, திட்டுவது போன்ற காட்சிகளுக்கான தேவையே இல்லாதபோது அதை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...
’ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’...

சந்தோஷ் நாராயணின் இசை தேவையான இடத்தில் மாஸ் கூட்டி பாடல்களில் ஆட்டம் போட வைக்கிறது. ஆனால், கிளைமாக்ஸில் வரும் ஒரு பாடல் பொறுமையைச் சோதிக்கிறது. முடிந்து விட்டதாக நினைக்கும் நேரத்தில் கிளைமாக்ஸில் வரும் சிறு திருப்பமும் அதற்கு பின்னான எமோஷனல் காட்சிகளும் ரோலர் கோஸ்டர் ரைடாக அமைந்திருப்பது படத்திற்கான பலம்.

ஆக மொத்தத்தில், சின்னச் சின்னக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த தீபாவளி ரேஸில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் நிச்சயம் சரவெடிதான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in