பெண் சக்தி

துடிப்பும், விக்கலும்..! : அவ(ள்) நம்பிக்கைகள் - 10

டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"மூணு மாசமாயிடுச்சு இன்னும் துடிப்பு தெரியலேங்கறா... அப்படின்னா..?"

உண்மை :

வயிற்றுக்குள் குழந்தை அசையும் முதல் உணர்தல் என்பது தாய்க்கு புதிது மட்டுமல்ல, அது அவளது வாழ்நாள் முழுவதும் இனிக்கும் உணர்வும் கூடத்தான். ஆனாலும், அந்த முதல் அசைவை தாயால் கருவின் 4 அல்லது 5-வது மாதத்தில்தான் உணர முடியும். Quickening என்று அழைக்கப்படும் இந்த முதல் அசைவைக் கொண்டு, முன்பெல்லாம் பிரசவத் தேதியைக் கூட உத்தேசமாகக் கணித்து வந்தனர்.

கிட்டத்தட்ட கருவின் 6-வது மாதத்தில்தான் தாய்க்கு அதன் அசைவுகளைத் தெளிவாக உணரமுடியும். என்றாலும் குழந்தையின் இருதயத் துடிப்பை தாயால் உணரமுடியாது. அதைக் கருவிகளின் துணை கொண்டு மட்டுமே அறிய முடியும் என்பதால், வீண் குழப்பங்கள் அவசியமற்றது. மேலும் இந்த குழந்தை அசைவில் சிலவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

5 முதல் 8 மாதங்கள் வரை, பனிக்குட நீரில் நீச்சலடிக்கும் குழந்தை, 8 மாதங்களுக்குப் பிறகு நன்கு வளர்ந்த நிலையில் இடநெருக்கடி காரணமாக கை, கால்களை மட்டுமே அசைக்கும்.

இதனால், 5-வது மாதத்தில் குழந்தை அசைவதற்கும், 8 மாதத்தில் குழந்தை அசைவதற்கும் வேறுபாடுகள் அதிகம் இருக்கும். சிலர் இதைப் புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று பயப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

DFMC (Daily Fetal Movement Count) என்ற 'குழந்தையின் தினசரி அசைவு எண்ணிக்கை' ஒரு காகிதத்தில் குறித்து வைக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உத்தேசமாக 12 மணிநேரத்தில், 10 முறையேனும் குழந்தையின் அசைவு உணரப்படுவது நலம்.

9-வது மாதத்தில் குழந்தையின் அசைவை ஒரு மணி நேரத்துக்கு 3-லிருந்து 5 முறை உணர்தல் அவசியம்.

எண்ணிக்கை குறைவாகும்போது, சிறிதுநேரம் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கவோ அல்லது உணவு உட்கொள்ளவோ அறிவுறுத்தப்படுகிறது.

அதன் பிறகும், அசைவு குறைவாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுதல் அவசியம்.

நம்பிக்கை :

"குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது, தேனைக் குடிச்சா சரியாயிடும்!?"

உண்மை :

வயிற்றுக்குள், பனிக்குட நீரில் வளரும் குழந்தை, அடிக்கடி அசைவதும், தொடர்ந்து உதைப்பதும் சமயங்களில் குழந்தை விக்கல் எடுக்கிறதோ என்று தோன்றச் செய்தாலும், 6-7 மாதங்களில் உண்மையிலேயே குழந்தைக்கு விக்கலும் ஏற்படலாம். நுரையீரல் விரிவடைவதற்காக ஏற்படும் இயல்பான மறிவினை (reflex) தான் இந்த கருவறை விக்கல் என்பதால், தேனும், நீரும் இதற்கு நிச்சயம் பலனளிக்காது.

அதுமட்டுமின்றி, அடுத்தடுத்து விக்கல் ஏற்படுவதைத் தாய் உணர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
SCROLL FOR NEXT