அரசியல்

சிவகங்கையும் சிதம்பரமும்... 13

ஒய்.பழனியப்பன் - காங்கிரஸ்

வரலாற்றை நான் மாற்றி எழுத நினைப்பதாக சிராவயலில் அண்ணன் க.திருநாவுக்கரசு படத் திறப்புவிழாவில் காங்கிரஸ்காரர் ஒருவர் பேசியிருக்கிறார். இந்த வரலாற்றை மாற்றி எழுதவோ திரித்து எழுதவோ முடியாது. ஏனென்றால், இது 100, 200 ஆண்டுகளுக்கு முந்தைய திப்பு சுல்தான் கதை இல்லை; திக்கற்று நிற்கும் காங்கிரஸ் குடும்பங்களின் வரலாறு. 50 ஆண்டு கால வரலாறுதான். சம்பந்தப்பட்ட பலர் இன்னும் பத்திரமாய் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர்களும் உண்மையை உரக்கப் பேசத் தயாராகவே இருக்கிறார்கள்.

உண்மை சுடும் என நானும் அறிவேன். அப்படிச் சூடுபட்டுக் கொள்கிறவர்கள், அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு மனதை ஆற்றிக் கொள்கிறார்கள். யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல. 2 உயிர்களை காவுகொடுத்து, காங்கிரஸ் பேரியக்கத்தைக் காக்கப் போராடிவரும் நேரு குடும்பத்தின் வாரிசுகளுக்கு பக்கபலமாக, உறுதுணையாக இருக்கும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ்காரர்கள் மேலும் பாதிக்கப்படாமல் எச்சரிக்கையுடன் இருக்கத்தானய்யா தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது.

இனி இன்றைய தியாகி...

பிள்ளையார்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் சிராவயல், மஞ்சுவிரட்டுக்குப் பேர் போன கிராமம் என்பதுதான் அநேகம் பேருக்குத் தெரியும். மகாத்மா காந்தி வந்துபோன ஊர் என்பது பல பேருக்குத் தெரியாது. இந்த ஊரில் பிறந்த காந்திய தொண்டர் தான் க.திருநாவுக்கரசு.

க.திருநாவுக்கரசு

அமைதியானவர். அரசியல் ஞானம் மிக்கவர். ஆளுமைமிக்கவர். யாரையும் சமாதானப்படுத்தும் வல்லமை மிக்கவர். எளிமையானவர். நிறையப் படிக்கக் கூடியவர் .சாதாரண கதர் வேட்டி சட்டை. இருசக்கர வாகன பயணம் என நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை - சீதையம்மாள் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவர். பின்னர், சிவாஜி ரசிகர் மன்ற தலைவர். அதன் பின்னால், முகவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர். முகவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர். மாவட்ட சேவா தள தலைவர், மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர். மாநில இணைச் செயலாளர் என்று காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர் அண்ணன் திருநாவுக்கரசு.

நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது, தமிழக ஆளுநர் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் நிர்வாக ரீதியான முடிவுகள் எடுக்க ஒரு குழுவை அமைத்தார். ராமநாதபுரம் ஜில்லாவுக்கான 3 பேர் கொண்ட குழுவில் இருந்தவர் அண்ணன் திருநாவுக்கரசு.

இன்றைக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக அண்ணன் கே.ஆர்.ராமசாமி இருக்கிறார். இவரது தந்தையார் பெரியவர் கப்பலூர் ராம.கரியமாணிக்கம் அம்பலத்திடம் சென்று, "தம்பியை காங்கிரஸ் கட்சி வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்" என்று அண்ணன் திருநாவுக்கரசு கேட்டபோது, "வந்தா கூட்டிட்டுப் போங்க... நான் வோணாம்னு சொல்லலை" என்றாராம் அம்பலம்.

ராஜீவ் காந்தியுடன் திருநாவுக்கரசு (கீழே வலது ஓரத்தில் அமர்ந்திருப்பவர்)

அந்த சமயத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் கே.ஆர். ராமசாமியை இளைஞர் காங்கிரஸின் கண்ணங்குடி வட்டார தலைவராகவும், பின்னர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொருளாளராகவும் வளர்த்தவர் திருநாவுக்கரசு. சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்காக மக்கள் பிரநிதிகளை அடையாளம் காட்டியவர் திருநாவுக்கரசு. தலைவர் ப.சிதம்பரத்தை, இளைஞர் காங்கிரஸ் தலைவராக அறிவிக்க வேண்டும் என சி.சுப்பிரமணியத்துக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் திருநாவுக்கரசு முக்கியமானவர்.

வாழப்பாடியாருடன் திருநாவுக்கரசு...

சென்னையில் இருந்த நாட்களில், அடிக்கடி தலைவர் சிதம்பரத்தின் ஃபியட் காரில் மெரினா கடற்கரைக்குச் சென்று வேர்க்கடலை சாப்பிட்டபடி, அரசியலை அசைபோட்ட அனுபவமும் அண்ணனுக்கு உண்டு. இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, திருநாவுக்கரசு உள்ளிட்டோருடன் தலைவர் சிதம்பரம் லாரி மீது அமர்ந்து வந்ததாகச் சொல்வார்கள்.

1980-ல் தனக்குச் சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தலைவர் சிதம்பரம் ஒதுங்கி இருந்தபோது, சென்னை சென்று அவரை மீண்டும் சிவகங்கை வர கட்டாயப்படுத்தியவர்களில் அண்ணன் திருநாவுக்கரசுவும் ஒருவர். அப்போது தலைவர் சிதம்பரம் சொன்னதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே அண்ணன் திருநாவுக்கரசு சொல்லக் கேட்டிருக்கிறேன். “என் கையப் பாருங்க திருநாவுக்கரசு... சுத்தமா இருக்கு. காங்கிரஸ் என்கிற கறையில்லாம சுத்தமா இருக்கு. அதனால நான் காங்கிரஸ் கூட்டத்துக்கு வர முடியாது" இப்படிச் சொல்லி வரமறுத்த தலைவர் சிதம்பரத்தை, தமிழ்ப் பேரவை நிகழ்ச்சி என்று சொல்லி சிராவயலுக்கு அழைத்து வந்தவர் திருநாவுக்கரசு.

இருவருக்கும் இடையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு இருந்தாலும், காங்கிரஸுக்கு சங்கடம் உண்டாக்கும் விதமாக மூப்பனார் தனி இயக்கம் கண்டபோது, அவர் பின்னால் போய்விட்டார் சிதம்பரம். ஆனால், அந்தப் பாதை பிடிக்காமல் வாழப்பாடியார் பக்கம் போய்விட்டார் திருநாவுக்கரசு.

இதனிடையே, 1981-ல் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திருநாவுக்கரசுவை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் வற்புறுத்தினார். ஆனால், அதை மறுத்து கட்சிப் பணியாற்றவே விரும்பினார் திருநாவுக்கரசு.

மகாத்மா காந்தியும் தோழர் ஜீவாவும் சந்தித்த ஊர் சிராவயல். அதனால் சிராவயலுக்கு தலைவர்கள் பலரையும் அழைத்து வந்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து காந்திய தொண்டர் திருநாவுக்கரசு காந்தி ஜெயந்தி விழாக்களை நடத்தினார். அது இன்றைக்கும் அவ்வூர் மக்களால் பேசப்படுகிறது.

கார்த்தி - சிதம்பரம்

தனது கடைசி நாட்களில் ஒருநாள், தலைவர் சிதம்பரத்தைச் சந்திக்க மானகிரி பண்ணை வீட்டுக்குச் சென்றார் அண்ணன் திருநாவுக்கரசு. அவரை அன்பொழுக வரவேற்ற சிதம்பரம், அங்கிருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு திருநாவுக்கரசுவிடம் நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்.

அங்கிருந்து வீடு திரும்பிய பிறகு, "என் நண்பர் சிதம்பரம் உயர்ந்த பதவிகளைப் பார்த்தவர். என்னோடு நீண்ட நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார்" என்று நெக்குருகச் சொல்லிக் கொண்டே இருந்தார். அதுதான் அவர் கண்ட பலன். காங்கிரஸுக்காக உழைத்த அவரை, உரிய முறையில் கொண்டாடாமல் விட்டது யார் குற்றம்?

அண்மையில்தான் அண்ணனின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்டத்தில்தான், “சிலர் வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்கள்” என்று நாகரிக அரசியல் பேசிவிட்டு வந்திருக்கிறார் அந்த பெரியவீட்டுப் பிள்ளை!

(“நான் திமுகவுக்குப் போய்ட்டேங்க... உங்க எம்பி-க்கிட்ட போய்ச் சொல்லுங்க" நேற்று (அக்.22) நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மறைமுக வாக்கெடுப்பில் யூனியன் சேர்மனாகி இருக்கும் காங்கிரஸ் குடும்பத்துப் பிள்ளை ஒருவர், கார்த்தி சிதம்பரத்துக்கு சொல்லிவிட்ட சேதி இது. இவர் ஏன் திமுகவுக்குப் போனார்... இவரை வெந்து நொந்து அப்படி போகவைத்தது யார்? - அடுத்து பார்ப்போம்.)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

SCROLL FOR NEXT