சிவகங்கையும் சிதம்பரமும்... 12

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 12

இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் காங்கிரஸ் தியாகி பாட்டம் கருப்பையா. பாட்டம் கதையைச் சொல்வதற்கு முன்னதாக, இன்னொருவரைப் பற்றிய நோட்டத்தையும் சொல்லிவிடுகிறேன்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தம்பி ஒருவர் அண்மையில், ‘தேசியத் தலைமையோடு தலைவர் கார்த்தி சிதம்பரம் ஒத்துப்போக வேண்டும். அதுவே நல்லதொரு அரசியலாக இருக்கும்’ என்று சமூக வலைதளத்தில் யதார்த்தமாக ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் போட்டதற்கு பின்னாலே, அன்புச் சகோதரர் கார்த்தி சிதம்பரத்தை வைத்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் திருப்பத்தூர் தம்பி. அந்த நிகழ்ச்சிக்கு வந்த கார்த்தி, எதிர்பார்த்த கூட்டம் சேர்க்கவில்லை என்று சொல்லி அவரது குடும்பத்தார் முன்னிலையிலேயே அந்தத் தம்பியை அன்பொழுக ‘வாழ்த்தி’ இருக்கிறார். அங்கிருந்தவர்களுக்கு இவர் ஏன் இத்தனை ‘பிரியமாய்’ இருக்கிறார் என்று தெரியாமல், சற்றே குழம்பிப் போனார்கள். ஆமாம், அது வலையால் விரித்துக்கொண்ட வம்பு என்று தம்பிக்கு மட்டும்தானே தெரியும்.

இனி, இந்தக் காணொலியை ஒருமுறை கண்ணாரக் கண்டுவிட்டு மேலே படிக்கலாம்.

இது, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோது எடுத்த காணொலி. இதை நன்றாகக் கவனித்தால் ஒன்று புரியும். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமும் அவர்களின் அருகில் சென்று வணக்கம் செலுத்துகிறார் தலைவர் ராகுல் காந்தி. அனைவரும் பதில் வணக்கம் சொல்கிறார்கள். ஆனால், ஒருவர் இளம் தலைவர் வணக்கம் சொல்கிறபோது தம்முடைய சட்டையைச் சரி செய்துகொண்டு, கைகூப்பக்கூட மனமில்லாமல் நிற்கிறார். இதைப் பார்த்தாலே சட்டையைச் சரிசெய்யும் அந்த அன்பரின் அடிமனத்து அவா புரியும். இந்தக் காணொலியைப் பார்த்துவிட்டு பலபேர் அதிர்ந்தார்கள்; பகிர்ந்தார்கள். ஆனால், நான் அதிரவில்லை. ஏனென்றால்... எனக்குத்தான் முன்பே இது தெரியுமே!

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியானது எப்போதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன நினைக்கிறதோ, நேரு குடும்பம் என்ன சொல்கிறதோ அதை ஒட்டியே செயல்படக்கூடியது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். தன்னை சந்திக்க வரும் கட்சிக்காரர்களிடம் அன்புச் சகோதரர் கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாகவே காங்கிரஸ் தலைமை குறித்தான தமது வருத்தங்களை, சங்கடங்களை பகிர்வார் என்பார்கள். அவர் இப்படி இருப்பதாலோ என்னவோ அவருடன் காரில் பயணிக்கும் அந்தஸ்தைப் பெற்ற அன்பர்களும் அவரைப் போலவே கள்ளம் கபடமில்லாமல் மனதில் உள்ளதை அப்படியே பேசுகிறார்கள்.

இப்படி எல்லாம் பேசியதன் வெளிப்பாடுதான், அண்மையில் வெள்ளிக்குறிச்சியிலும் தேவகோட்டையிலும் வெடித்த கொந்தளிப்பு. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகே, ‘மாவட்ட கமிட்டி கூட்டத்தை கூட்டுக’ என்ற கோஷம் மாவட்ட காங்கிரஸில் திரும்பிய பக்கமெல்லாம் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்தெல்லாம் பின்னால் விரிவாகப் பேசுவோம்.

இனி பாட்டம் கருப்பையா கதை...

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்பு உருவம். அந்தக் கருப்பு உருவத்துக்கு உள்ளே ஒரு வெள்ளந்தியான மனம். அதுதான் பாட்டம் கருப்பையா. 1964-ல் டிப்ளமோ படித்துவிட்டு, சென்னையில் பொதுப்பணித் துறையில் வேலை செய்தவர் கருப்பையா. சிவகங்கையின் திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பாட்டம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பார்த்த வேலையை உதறிவிட்டு வந்த பிழைக்கத் தெரியாத மனிதர். அன்று தொடங்கி 2016 வரை, அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவராக அவரும் அவருடைய குடும்பத்தாருமே இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அந்தக் குடும்பத்தால் அடையாளம் காட்டப்பட்டவரே அங்கு தலைவராக இருக்கிறார்.

பாட்டம் கருப்பையா
பாட்டம் கருப்பையா

1996-ல் தலைவர் சிதம்பரம் தமாகா கண்டபோது, அவரோடு தமாகாவுக்குச் சென்றவர் கருப்பையா. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கருப்பையா மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்த முறையும் மாவட்ட கவுன்சிலராக வந்தார். 2006-லிருந்து 2016 வரை கருப்பையாவின் புதல்வர் சிவகுமார், பாட்டம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். 2006-ல், கருப்பையாவின் மனைவி சரஸ்வதி அந்தப் பகுதியினுடைய ஒன்றிய கவுன்சிலர்.

தமக்கும் தமது குடும்பத்துக்கும் என ஒரு மிகப்பெரிய செல்வாக்கை அந்தப் பகுதிகளில் வைத்திருக்கக் கூடியவர் பாட்டம் கருப்பையா. அதுமட்டுமின்றி தலைவர் ப.சிதம்பரம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தனது பகுதியில், தான் சார்ந்த பட்டியலின மக்களின் வாக்குகளை அவருக்குப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் பணியாற்றியவர். அதன் காரணமாகவே தனது வேட்பு மனுவை முன்மொழிய, பல நேரங்களில் பாட்டம் கருப்பையாவை தேடினார் ப.சிதம்பரம்.

பட்டியலின மக்களின் வாக்குகளை அப்படியே தன் பக்கம் திருப்புவார் என்பது மட்டுமல்ல... எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்காத வெற்றி வேட்பாளர் என்ற சென்டிமென்ட்டும்தான் கருப்பையாவை சிதம்பரம் கூடவே வைத்திருக்கக் காரணமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், எஸ்சி - எஸ்டி பிரிவின் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என 35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸுக்காக பாடுபட்டு உழைத்தவர் பாட்டம் கருப்பையா. தலைவர் சிதம்பரத்துக்கு மட்டுமின்றி கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட தேர்தல்களிலும் கருப்பையாவின் ஒட்டுமொத்த குடும்பமே காங்கிரஸுக்காக களப்பணி செய்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டம் ஊராட்சியில் பதிவான சுமார் 800 வாக்குகளில் சுமார் 480 வாக்குகள் கார்த்திக்கு விழுந்ததன் பின்னணியில், கருப்பையாவின் களைப்பறியாப் பணியும் இருக்கிறது.

இப்படி மூச்சும் பேச்சும் காங்கிரஸாகவே வாழ்ந்த பாட்டம் கருப்பையாவின் குடும்பம், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்சியைவிட்டே துரத்தப்பட்டது. ஏன் என்ற கேள்வி எழுந்தபோது ஒரு போட்டோவைக் காட்டினார்கள். அதில், பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவருடன் கருப்பையாவின் புதல்வர் சிவகுமார் பேசிக்கொண்டு நிற்கிறார். சிவகுமார் வீட்டு வாசலில் இருவரும் பேசிக் கொண்டு நின்றதைப் படம் எடுத்து, பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக காரணம்காட்டி கருப்பையாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவிட்டே நீக்கினார்கள். சிவகுமாருடன் பேசிக்கொண்டு நின்றவர் பாஜக என்பதை மட்டும் சொன்னார்களே தவிர, இருவரும் உறவுக்காரர்கள் என்பதை வாகாக மறந்துவிட்டார்கள்; மறைத்துவிட்டார்கள். இந்த உள்குத்து நடவடிக்கைக்குப் பின்னால், பல உண்மைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விசாரித்து அறியவும் தெளியவும்தான் எங்களுக்கு நேரமில்லை.

தன்னை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள் என்றதும் கொள்கைப் பிடிப்புகொண்ட கருப்பையா ஆடிப்போய் அப்படியே முடங்கிவிட்டார். என்றைக்காவது உண்மை தெளிந்து காங்கிரஸ் தங்களை மீண்டும் கட்சிக்கு அழைக்கும் என கருப்பையாவின் குடும்பம் காத்திருக்கிறது. நானும்கூட காமதேனுவின் இந்தக் கட்டுரை மூலமாக, காங்கிரஸ் தலைமைக்கு ஓர் பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். உண்மையான காங்கிரஸ்காரரான கருப்பையாவை இனியும் உதாசீனப்படுத்த வேண்டாம். கடைசி காலத்திலும் அவர் அக்மார்க் காங்கிரஸ்காரராகவே வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!

(மகாத்மா காந்தியின் காலடி தடம்பட்ட ஊரில், காந்தியைப் போலவே அமைதிப் புயலாக வாழ்ந்து மறைந்த ஓர் காங்கிரஸ் தொண்டரின் கதையை அடுத்துப் பேசுவோம்.)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 12
சிவகங்கையும் சிதம்பரமும்... 11

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in