லட்சத்தீவுகளின் மினிகாய் தீவில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு 
அரசியல்

லட்சத்தீவுக்கு ஜாலியாக சுற்றுலா போகலாம் - மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

காமதேனு

லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் பொதுமக்கள் மற்றும் ராணுவ விமானங்கள் செல்லும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, லட்சத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கடல் அருகில் அமர்ந்து சிந்திப்பது போன்ற புகைப்படத்தையும், தண்ணீருக்கு அடியில் சென்று பவளப்பாறைகளை புகைப்படம் எடுத்தும் பகிர்ந்திருந்தார். இது இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே பிரதமரின் புகைப்படங்கள் குறித்து, மாலத்தீவு அமைச்சர்கள் மோசமான முறையில் விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த ஜனவரி 4ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணித்திருந்தார்

இதையடுத்து 3 மாலத்தீவு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து லட்சத்தீவுகளுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த ஏராளமான பிரபலங்கள் தங்களது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, பலரும் லட்சத்தீவுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே, லட்சத்தீவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க முடிவு என தகவல்

போர் விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமானநிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மினிகாய் தீவுகளில் ஒரு புதிய விமானநிலையத்தை உருவாக்கும் திட்டம் ஏற்கெனவே முன்மொழியப்பட்டது. இந்த முடிவு லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதையும், இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் நாட்டின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசாங்கத்தின் திட்டங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிராந்திய சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது சிறிய ரக விமானங்கள் மூலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுகளில் உள்ள அகத்தி விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்தால் பெரிய ரக விமானங்கள் தரையிறங்கும் என்பதால், கூடுதல் சுற்றுலா பயணிகள் செல்ல வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT