நடிகை ரிதுபர்ணா சென்குப்தா 
செய்திகள்

ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஜூன் 5ல் ஆஜராக நடிகைக்கு அமலாக்கத் துறை சம்மன்

வ.வைரப்பெருமாள்

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5ம் தேதி ஆஜராகுமாறு பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் (2016-2021) பாகிபுர் ரஹ்மான் என்ற செல்வாக்குமிக்க தொழிலதிபரால் ரேஷன் கடை விநியோகஸ்தர்களுக்கு அரிசி, கோதுமை கட்டாய அளவை விட குறைவாக வழங்கப்பட்டன. அதில் எஞ்சிய தானியங்கள் வெளிசந்தைகளில் லாபத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.

பொதுவிநியோகத் திட்ட முறைகேடு வழக்கு

முன்னதாக கடந்த அக்டோபர் 14ம் தேதி, கொல்கத்தாவின் புறநகர் பகுதியான கைகாலியில் உள்ள இல்லத்தில் வைத்து பாகிபுர் ரஹ்மானை அமலாக்கத்துறை கைது செய்தது.

பாகிபுர் ரஹ்மான், அம்மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்கிடம், 22 மணி நேரம் தொடர் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர் கடந்த அக்டோபர் 27ம் தேதி அவரை கைது செய்தனர்.

2016 - 2021 காலகட்டத்தில் ஜோதிப்பிரியா மாலிக் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சராக இருந்தார். அதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியான ஷேக் சாஜகானை அமலாக்கத் துறை கைது செய்து, அவரது வீட்டிலிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியது.

அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்

இந்நிலையில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5ம் தேதி ஆஜராகுமாறு பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2019ல், ரோஸ் வேலி பொன்சி ஊழல் தொடர்பாக நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவை அமலாக்கத்துறை விசாரித்தது. ஆதாரங்களின்படி, ரிதுபர்ணா சென்குப்தா, ரோஸ் வேலி குழுமத் தலைவர் கவுதம் குண்டுவுடன் பல வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சென்றதாகவும், திரைப்படங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பில் அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரிதுபர்ணா சென்குப்தா மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

SCROLL FOR NEXT