பிரதமர் மோடி - ரியாசி பயங்கரவாத தாக்குதல் 
செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்களை ‘தெய்வாம்ச’ பிரதமர் கண்டிக்காதது ஏன்? -காங்கிரஸ் சரமாரி கேள்வி

எஸ்.எஸ்.லெனின்

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்வதில், பிராந்திய அமைதி மற்றும் இயல்புநிலை குறித்தான பாஜக அரசின் வறட்டு வாதங்கள் அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பும் என்ற பாஜகவின் வெற்று வாதங்கள் கடந்த சில தினங்களாக, அப்பகுதியில் நடந்துவரும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் இன்றைய தினம் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஊடக பொறுப்பாளருமான பவன் கேரா, பயங்கரவாதிகளின் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். ’பாகிஸ்தான் தலைவர்களுக்கு பதிலளிக்க மோடிக்கு நேரம் உள்ளது. ஆனால் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டிக்க நேரமில்லை’ என்றும் கூறியுள்ளார்.

மோடி பதவியேற்பு

ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பவன் கேராவின் கண்டன கருத்துக்கள் வந்துள்ளன. ”காஷ்மீர் விஷயத்தில் பாஜக அரசு மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை விபத்தாக மாற்றியுள்ளது. கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்களின் விளைவுகளை அப்பாவிகள் அனுபவிக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத பாஜகவின் அரசியல் வணிகம் தொடர்கிறது. .

நரேந்திர மோடியும் அவரது என்டிஏ அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டபோது, ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் இந்தியா ஒரு மோசமான பயங்கரவாதத் தாக்குதலை சந்தித்தது. பக்தர்களின் பேருந்து மீதான தாக்குதலில், அங்கு 9 விலைமதிப்பற்ற உயிர்கள் கொல்லப்பட்டதோடு குறைந்தது 33 பேர் காயமடைந்தனர். அப்பாவி குழந்தைகள் வரை பலியான இந்த சம்பவத்தில், தன்னைத்தனே ’தெய்வாம்சம்’ பொருந்தியவர் என அழைத்துக்கொள்ளும் பிரதமர் ஒரு அனுதாப வார்த்தை கூட இதுவரை வெளியிடவில்லை” என்று பவன் கேரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

”அது மட்டுமன்றி கதுவா மற்றும் ஜம்முவின் சட்டர்கல்லா உள்ளிட்ட இடங்களிலும் அடுத்தடுத்து பயங்கரவாதிகளுடனான மோதல் தொடர்கிற்து. அதே நேரத்தில் பாகிஸ்தான் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பதிலளிக்கும் பணியில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? ஏன் மௌனம் காக்கிறார்.

பிரதமர் மோடி - பவன் கேரா

கடந்த 2 ஆண்டுகளில் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகியவை ​​எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 35 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். புல்வாமா, பாம்பூர், உரி, பதன்கோட், குர்தாஸ்பூர், அமர்நாத் யாத்திரை தாக்குதல், சிஆர்பிஎஃப் முகாம்கள், விமானப்படை வளாகம் மற்றும் ராணுவ நிலையங்கள் உட்பட மோடி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு நிலையங்கள் மீது குறைந்தது 19 பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. சுஞ்ச்வான் ராணுவ முகாம், பூஞ்ச் ​​பயங்கரவாத தாக்குதல்களில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்த வகையில் பாஜக ஆட்சிக்காலத்தில் ஜம்மு காஷ்மீரில் 2,262 பயங்கரவாத தாக்குதல்களில் 363 பொதுமக்கள் இறந்ததுடன், 596 ஜவான்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனபோதும் மோடி அரசு தேச பாதுகாப்பிற்கான ஆபத்தை பொருட்படுத்துவதாக தெரியவில்லை” என்றும் பவன் கேரா கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT