பழனி அருகேயுள்ள வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பியதை அடுத்து  
செய்திகள்

நிரம்பிய வரதமாநதி நீர்த்தேக்கம்... குளங்களுக்கு நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கே.காமராஜ்

திண்டுக்கல் அருகேயுள்ள வரதமாநதி நீர்த்தேக்கம், மழை காரணமாக நிரம்பியதை தொடர்ந்து ஆயக்குடியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் வரதமாநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பொழியும் மழை நீர் வரதமாநதி நீர்த்தேக்கத்தில் சேர்கிறது. இந்த நீர்த் தேக்கத்தின் முழு கொள்ளளவு 67 அடியாகும். கடந்து சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வரதமாநதி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

வரதமாநதி நீர்த்தேக்கம்

இன்று காலை நிலவரப்படி முழு கொள்ளளவான 67 அடியை இந்த நீர்த்தேக்கம் எட்டியுள்ளது. இதையடுத்து வினாடிக்கு 100 கன அடி வீதம் வரதமாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆயக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு இந்த தண்ணீர் சென்று சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரதமாநதி நீர்த்தேக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த நீர்த்தேக்கத்திலிருந்து பழனி மற்றும் ஆயக்குடி பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தற்போது ஆயக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

SCROLL FOR NEXT