மக்களவை  
செய்திகள்

மக்களவை சபாநாயகர் யார்? மும்முனைப் போட்டியில், ஆந்திரா மற்றும் ஒடிசாவிலிருந்து மோதும் பாஜக முகங்கள்

எஸ்.எஸ்.லெனின்

மக்களவையின் சபாநாயகர் இருக்கைக்கு, கடந்த முறை வீற்றிருந்த ஓம் பிர்லா மட்டுமன்றி ஆந்திரா அல்லது ஒடிசாவின் பாஜக எம்.பி.க்களில் ஒருவர் என மூவர், பாஜக தலைமையின் இறுதிப்பட்டியலில் பரிசீலனையில் உள்ளனர்.

நாடாளுமன்றம் கூடிய இரு தினங்கள் கழித்து, ஜூன் 26 அன்று மக்களவை சபாநாயகர் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதற்கான பரிந்துரை பட்டியலில், கடந்த மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா மட்டுமன்றி ஒடிசாவின் பத்ருஹரி மஹ்தாப் மற்றும் ஆந்திராவின் டி.புரந்தேஸ்வரி ஆகியோர் பாஜக தலைமையால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

டகுபதி புரந்தேஸ்வரி

மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கடும் நெருக்கடி கொடுத்த நிலையில் அவற்றை ஒருவழியாக பாஜக சமாதானப்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆந்திராவின் டி.புரந்தேஸ்வரியை சபாநாயகராக்குவதன் சந்திரபாபு நாயுடுவை பாஜக வாயடைக்கச் செய்யும் என்று முதல் சுற்று தகவல்கள் தெரிவித்தன. பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் புரந்தேஸ்வரி, என்டிஆரின் மகளாவார்.

இதற்கு அப்பால் ஒடிசாவின் மஹ்தாப் என்பவரும் தீவிர பரிசீலனையில் உள்ளார். நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திலிருந்து பாஜகவில் இணைந்த இவர் ஒடிசாவின் முக்கிய தலைவர் ஆவார். பிஜேடியின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒடிசாவில் முதன்முறையாக அரசை அமைத்துள்ள பாஜக அங்கு அக்கட்சியை மேலும் வளர்க்க, சபாநாயகர் தேர்வுக்கு ஒடிசாவை தேர்வு செய்ய வாய்ப்புண்டு.

ஜூன் 26 அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை முன்மொழிய இருக்கிறார். அவரது முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அவர் தனது மந்திரி சபையை மக்களவைக்கு அறிமுகப்படுத்துவார். இதற்கிடையே எதிர்க்கட்சிகளும் கோதாவில் குதிக்க நேரிட்டால் மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கக்கூடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. எதிர்க்கட்சியினருக்கான துணை சபாநாயகர் இருக்கையை கைப்பற்றுவதோடு எதிர்க்கட்சிகள் சமாதானமாகக் கூடும்.

மஹ்தாப்

முறைப்படி சபாநாயகரை தேர்வு செய்யும்வரை, தற்காலிக சபாநாயகர் அவை நடவடிக்கைகளை கையாள்வார். இந்த வகையில் 18வது நாடாளுமன்றம் ஜூன் 24 அன்று கூடும் போது காங்கிரஸின் மூத்த உறுப்பினரான கே.சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் எனத் தெரிய வருகிறது. கேரளாவின் மாவேலிகராவைச் சேர்ந்த 68 வயதாகும் சுரேஷ் நீண்ட காலத்துக்கு எம்.பி-யாக இருந்தவர்களில் ஒருவர் ஆவார்.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, தற்காலிக சபாநாயகருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன் பின்னர் தற்காலிக சபாநாயகர், பிரதமரின் அமைச்சர்கள் குழு மற்றும் பிற எம்.பி-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

SCROLL FOR NEXT