போதைப்பொருள் 
செய்திகள்

போதை கடத்தலுக்கு உதவும் போலீஸார் டிஸ்மிஸ்; கடத்தல்காரர் சொத்துக்கள் பறிமுதல்... பஞ்சாப் முதல்வர் பரபரப்பு உத்தரவு

எஸ்.எஸ்.லெனின்

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் போலீஸார் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும், கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் மிகப்பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் விளங்குகிறது. பல பத்தாண்டுகளாக தொடரும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகள் பலவும் தோல்வியடைந்தன. பஞ்சாப் இளைஞர்கள் மத்தியிலான போதைக் கலாச்சாரம் மட்டுமன்றி எல்லைக்கு அப்பாலிருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருளை விநியோகிக்கும் பாகிஸ்தானாலும், பஞ்சாப் போதை கலாச்சாரத்துக்கு முடிவு காணப்படவில்லை.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

ஆம் ஆத்மி கட்சி அங்கே ஆட்சி அமைத்தது முதலே பஞ்சாப்பின் போதை கலாச்சாரத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டன. அதற்கேற்ப முதல்வர் பகவந்த் மான் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, பஞ்சாப் போதை நடமாட்டத்துக்கு எதிராக சாட்டை சொடுக்கத் தொடங்கியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுடனான இன்றைய தினத்தின் சந்திப்பின்போது பகவந்த் மான் இதனை அறிவித்தார். மேலும் பஞ்சாப் மாநில காவல்துறை முழுமையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

"போதைப்பொருள் விற்பனையில் காவல்துறை அதிகாரி யாரேனும் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் ஒன்றாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவார். போதைப்பொருள் கடத்தல்காரர் யாரேனும் பிடிபட்டால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். கடத்தல்காரர் பிடிபட்ட ஒரு வாரத்தில் அவரது சொத்துக்கள் மீது இவ்வாறு பறிமுதல் நடவடிக்கைகள் பாயும்” என்றும் பகவந்த் மான் அறிவித்தார்.

போதைப்பொருள்

இவற்றுக்கு அப்பால் மாநில காவல்துறையை முழு சீர்திருத்தத்துக்கு ஆளாக்கவும் பகவந்த் மான் முடிவு செய்துள்ளார். அவற்றில் ஒன்றாக பல ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். கீழ்நிலை காவல்துறை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையே தொடர்பு தெரிய வந்திருப்பதை அடுத்தும், இந்த இடமாற்றங்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அப்பால் புதிதாக 10,000 காவலர்களை மாநில காவல்துறையில் பணியமர்த்தவும் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT