ஏக்நாத் ஷிண்டே 
செய்திகள்

2 சீட் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட்; 7 சீட் வைத்துள்ள எங்களுக்கு இணையமைச்சர் பதவியா? - ஏமாற்றத்தின் உச்சத்தில் ஏக்நாத் ஷிண்டே!

வீரமணி சுந்தரசோழன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் ஒரே ஒரு இணை அமைச்சர் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டதற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவின் புதிய அமைச்சரவையில் வழங்கப்பட்ட மத்திய இணையமைச்சர் பதவியை நிராகரித்தது. முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்த பிரபுல் படேல், இணை அமைச்சர் பதவியை வகிக்க முடியாத அளவுக்கு மூத்தவர் என்று அக்கட்சி தெரிவித்தது. இதுகுறித்து பேசிய பிரபுல் படேல்,"நான் முன்பு கேபினட் அமைச்சராக இருந்தேன். எனவே மத்திய இணையமைச்சர் பதவியென்பது எனக்கு பதவி இறக்கம் ஆகும்" என்று கூறினார். பிரபுல் படேல் மன்மோகன் சிங் ஆட்சியில் 2011 முதல் 2014 வரை கனரக தொழில்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், அஜித் பவார் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்

இந்த நிலையில், அமைச்சர் பதவி விவகாரத்தில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அதிருப்தியில் உள்ளது. முதலில், ஷிண்டே முகாம் மூன்று அமைச்சர் பதவிகளைக் கோரியது. ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர் பதவிகளை அக்கட்சி கேட்டது. ஆனால் அக்கட்சிக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. 7 எம்.பிக்களை வைத்துள்ள ஷிண்டே சிவசேனாவுக்கு ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 2 எம்.பிக்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு கேபினட் அமைச்சர் பதவியை பெற்றுள்ளது கூட்டணியில் புகைச்சலை உருவாக்கியுள்ளது. அதேபோல பீகாரில் ஒரு எம்.பியை வைத்துள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதும் ஷிண்டே தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடா ஸ்ரீரங் பார்னே, "நாங்கள் கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம்" என்று கூறினார். இப்போது அளிக்கப்பட்ட பதவியை ஏற்றுக்கொண்டாலும், அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு கேபினட் உட்பட கூடுதல் அமைச்சர்கள் வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஷிண்டே முகாம் பாஜகவிடம் கூறியுள்ளது என சொல்லப்படுகிறது.

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை

நேற்று பதவியேற்ற 72 அமைச்சர்களில் 5 பேர் மட்டுமே மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இந்த ஐவரில், நான்கு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், மேலும் ஷிண்டே சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், இணை அமைச்சராக பதவியேற்றார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இன்னும் ஒன்பது பேர் மட்டுமே கூடுதலாக பதவியேற்கலாம். எனவே அதிருப்தியில் உள்ள தலைவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

SCROLL FOR NEXT