அரசு பள்ளி மாணவர்கள் 
செய்திகள்

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் சேர்க்கை... விரைவில் வெளியாகிறது உத்தரவு!

காமதேனு

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசுப்பள்ளி

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ, மாணவியரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22 லட்சம் பேரும் படிக்கின்றனர்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களின் பணியிடங்களை தக்க வைக்க, மாணவ, மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்டி வருவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.

இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை விசாரணை செய்து, போலி மாணவர் எண்ணிக்கை பிரச்சினையை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், ரத்தப் பிரிவு, பெற்றோரின் மொபைல்போன் எண் போன்றவற்றை எமிஸ் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண, மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.

பள்ளி கல்வித்துறை

இதே போன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஆன்லைன் வழி சேர்க்கை நடத்தினால், போலி விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியாது என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். மேலும், இதனால் மாணவர்கள் சேர்க்கைக் காலங்களில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் குறைக்க முடியும்.  

அதனால் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. பெற்றோருக்கு சிரமமின்றி, பள்ளி ஆசிரியர்கள் அல்லது எமிஸ் தளத்துக்கான ஆன்லைன் பணி ஊழியர்கள் வழியே, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT