தேசம்

‘அலட்சியமான ஊபர் சேவை’ - அதிருப்தி பகிர்ந்த ஹர்ஷா போக்ளே: நடந்தது என்ன?

காமதேனு

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஊபர் செயலி கார் சேவை மீது அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு. சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை ஊபர் சேவையில் எதிர்கொண்ட சங்கடங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவுசெய்வதும் உண்டு. புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

61 வயதாகும் ஹர்ஷா போக்ளே, இன்று ஊபர் செயலி மூலம் கார் ஒன்றை புக் செய்திருக்கிறார். ஆனால், ஊபர் கார் ஓட்டுநர் அவரை அழைத்துச் செல்ல வரவேயில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல முறை ஊபர் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் ஹர்ஷா போக்ளே தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், உரிய விளக்கம் கிடைக்கவில்லை. எனவே பொறுமையிழந்த அவர், இதுகுறித்து ட்வீட் செய்தார்.

‘இது குறித்து ட்விட்டரில் குறை சொல்ல வேண்டாம் என முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால், @Uber_India மற்றும் @UberINSupport ஆகியவை காட்டிய அலட்சியத்தின் காரணமாக இதைப் பதிவுசெய்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. பல முறை தகவல் அனுப்பியும், மிக மோசமான முறையில்தான் அவர்களது எதிர்வினை இருந்தது. எனது பிரச்சினைக்கு அவர்கள் முகங்கொடுப்பார்கள் என இப்போதும் காத்திருக்கிறேன்’ என அதில் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே புக் செய்த ஓட்டுநர் வரவே இல்லை என்பதால், அடுத்த காரை புக் செய்ய அவர் முயன்றிருக்கிறார். அப்போது, ஏற்கெனவே புக் செய்யப்பட்ட நிலையில் தாங்கள் வருவதில்லை என ஊபர் ஓட்டுநர்களில் ஒருவர் சொன்னதாகவும் இன்னொரு ட்வீட்டில் அவர் பதிவுசெய்திருக்கிறார். ‘இந்தியாவில் ஊபரின் சேவை மோசமடைந்துகொண்டே செல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது’ என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது ட்விட்டர் பதிவுகளுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர், ‘ஊபரைப் புறக்கணிக்கப்போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்ப, ‘அந்த முடிவுக்கு இன்னும் செல்லவில்லை’ என்று ஹர்ஷா போக்ளே பதிலளித்திருக்கிறார்.

கடைசியாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘இதுவரை ஊபரிடமிருந்து எந்த எதிர்வினையும் கிடைக்கவில்லை’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்:

SCROLL FOR NEXT