உலகை உலுக்கும் ஊபர் ஃபைல்ஸ்: விரிவான தகவல்கள்

உலகை உலுக்கும் ஊபர் ஃபைல்ஸ்: விரிவான தகவல்கள்

சர்வதேச அளவில் உலுக்கியெடுக்கும் வகையிலான ரகசியத் தகவல்கள் அவ்வப்போது வெளியாவதுண்டு. அரசு அல்லது தனியார் அமைப்புக்குள்ளேயே இருந்து, அந்த அமைப்பின் அறமற்ற செயல்களால் வருத்தமடைந்து - சில சமயம் குற்றவுணர்வுக்குள்ளாகி அதன் ரகசியத் தகவல் பரிமாற்றங்களையும், செயல் திட்டங்களையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துபவர்கள் உண்டு. சமீப காலங்களில் விக்கிலீக்ஸ், பனாமா பேப்பர்ஸ் எனத் தொடரும் நிகழ்வுகளில் புதிய வரவு ‘ஊபர் ஃபைல்ஸ்’

என்ன பின்னணி?

பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ இதழ் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் தகவல்கள்தான் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. 182 ஜிகாபைட்ஸ் தரவுகள் கிடைத்திருக்கின்றன. 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட 1.24 லட்சம் ஆவணங்கள் அவை (அந்தக் காலகட்டத்தில்தான் ஊபர் நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. குறிப்பாக 2013-ல்தான் இந்தியாவில் அந்நிறுவனத்தின் சேவைகள் தொடங்கின). அதில் மின்னஞ்சல்கள், வாட்ஸ்-அப் பரிமாற்றங்கள், மெமோக்கள், பிரசன்டேஷன்கள் என ஏராளமான தரவுகள் அடக்கம். நிறுவனங்களுக்கு இடையிலான 83,000 மின்னஞ்சல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. எங்கிருந்து அவை கிடைத்தன எனும் தகவல் வெளியிடப்படவில்லை. சர்வதேசப் புலனாய்வுப் பத்திரிகையாளர் அமைப்பான ஐசிஐஜே-யும், அந்த அமைப்புடன் தொடர்புடைய பத்திரிகைகளும் இந்த முக்கிய ஆவணங்களை வெளியிட்டிருக்கின்றன. இதில் இந்தியா, உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் இடம்பெற்றிருக்கின்றன - ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உட்பட.

வாகனப் போக்குவரத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திய ஊபர் நிறுவனம், உள்ளுக்குள் எத்தனை மோசடிகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இந்தத் தகவல்கள் பட்டவர்த்தனமாக்கியிருக்கின்றன.

காரியக்கார காலனிக்!

இந்தப் பிரச்சினையின் மையமாக இருப்பவர் ஊபர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சிஇஓ-வுமான டிராவிஸ் காலனிக். வியன்னா யூதக் குடும்பத்தைச் சேர்ந்த டிராவிஸ் காலனிக், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்ரெட் கேம்ப்புடன் இணைந்து 2009-ல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஊபர் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் பெயர் ஊபர்கேப் (UberCab). பின்னாட்களில் அது மிகப் பெரிய வளர்ச்சி கண்டது.

டிராவிஸ் காலனிக்
டிராவிஸ் காலனிக்

டிராவிஸ் காலனிக் மீது பல்வேறு புகார்கள் உண்டு. தான் விரும்பியதைச் சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்கிறார்கள். “வெற்றிக்கு வன்முறை உத்தரவாதம் அளிக்கிறது” என்று 2016-ல் பிற நிறுவனங்களின் தலைவர்களிடம் அவர் தெரிவித்தது அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. தனக்கு வேண்டியவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விஷயத்திலும் கண்டும் காணாமலும் அவர் நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. 2017-ல், ஊபர் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்ததாக ஊபர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் பொறியாளர் சூஸன் ஃபவுலர் குற்றம்சாட்டினார். இவ்விஷயத்தை நன்கு அறிந்திருந்தும், அந்த மேலாளர் மீது காலனிக் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சூஸன். இதையடுத்து ஊபர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் காலனிக். ஊபர் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கடும் அழுத்தம் தந்ததையடுத்தே இந்த முடிவை அவர் எடுத்தார்.

மிகவும் அழுத்தமானவர் என வர்ணிக்கப்படும் காலனிக், பல்வேறு நாடுகளின் அரசுகளுடன் லாபி செய்வதிலும் வல்லவர். ஜனநாயகவாதியாக அறியப்படும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முழுமையாக அவருக்கு ஆதரவு வழங்கிய விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

பயன்படுத்திய தந்திரங்கள்

ஊபர் ஓட்டுநர்கள் தாக்கப்படும் சம்பவங்களைப் பயன்படுத்தி, அவை தொடர்பாகப் பொதுவெளியில் கவனம் ஈர்த்து தங்கள் மீது கரிசனத்தை உருவாக்கிக்கொள்ள அந்நிறுவனத்தின் அதிகாரிகள் துரிதமாகச் செயலாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் பயணிகளால் தாக்கப்பட்டால் உடனடியாகக் காவல் துறையிடம் புகார் அளிக்குமாறு ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறது ஊபர். இதுபோன்ற உத்திகளின் மூலம் கண்காணிப்பு அமைப்புகளின் பார்வையில், ‘பாதிக்கப்பட்ட’ தரப்பாகத் தங்களைக் காட்டிக்கொள்ள ஊபர் முயன்றிருக்கிறது.

‘கில் ஸ்விட்ச்’ (kill switch) எனும் உத்தியைப் பயன்படுத்தி, திசைதிருப்பல்களில் ஈடுபடுவார். 13 முறை ‘கில் ஸ்விட்ச்’ உத்தியை ஊபர் நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. 2017-ல் காலனிக்குக்குப் பதிலாக டாரா கோஸ்ரோவாஷாஹி சிஇஓவாகப் பொறுப்பேற்ற பின்னர் ‘கில் ஸ்விட்ச்’ உத்தியைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டதாக ஊபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆம்ஸ்டர்டாமில் ஒருமுறை சோதனை நடத்தப்பட்டபோது உடனடியாக ‘கில் ஸ்விட்ச்’ பயன்படுத்தி, அந்த அலுவலகத்தின் மின்னணு சாதனங்களின் செயல்பாட்டை முடக்க, நிறுவன ஊழியர் ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம் கலானிக் உத்தரவிட்டது தெரியவந்திருக்கிறது. கேஸ்பர், ரிப்ளி போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்யவும் தனது ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். இப்படி நிறைய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

டெல்லி பாலியல் குற்றச் சம்பவம்

2014 டிசம்பர் 5-ல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 27 வயது பெண் ஒருவர் அன்று இரவு குர்கான் (குருகிராம்) பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இந்தர்லோக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல ஊபர் காரை புக் செய்தார். ஷிவ்குமார் யாதவ் எனும் ஓட்டுநர் காரை ஓட்டினார். அப்போது களைப்பில் அந்தப் பெண் தூங்கிவிட, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு காரைக் கொண்டு சென்று அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். பின்னர் அப்பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுசென்று இறக்கிவிட்டார். எனினும் துணிச்சலான அந்தப் பெண், காரின் நம்பர் ப்ளேட்டைப் புகைப்படம் எடுத்து போலீஸில் புகார் அளித்தார். ஷிவ்குமார் கைதுசெய்யப்பட்ட பின்னர்தான் இதற்கு முன்பும் இப்படியான பாலியல் குற்றங்களில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு உத்திகளை ஊபர் கையாண்டது. அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வெளியில் அந்தச் சம்பவம் குறித்து கண்டித்து சமூக ஊடகங்களில் எழுதினாலும், உள்ளுக்குள் வேறு குரலில் உரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன. இந்தச் சம்பவத்தை வைத்து ஊபர் நிறுவனத்தின் மீது எதிர்மறையான எண்ணம் உருவாவதைத் தடுக்கும் வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும் என அவர்கள் பேசிக்கொண்டனர். அவர்கள் பயந்தபடியே டிசம்பர் மாதம் ஊபர் உட்பட செயலி மூலம் இயங்கும் வாடகை கார் சேவைகளை டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரசு தடை செய்தது.

பின்னர் இக்கட்டான நிலையில் உதவிகோர ‘பேனிக் பட்டன்’ எனும் வசதி ஊபர் கார்களில் பொருத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்த பொத்தானை அழுத்தினால் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜிபிஎஸ் உதவியுடன் கார் இருக்கும் இடத்துக்குக் காவல் துறையினர் வந்துவிடுவார்கள் எனக் கூறப்பட்டது. எனினும், அது இப்போது வரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. (‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் சார்பில், பிரத்யேகமாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 50 ஊபர் கார்களில், 48 கார்களில் இருக்கும் பேனிக் பட்டன் வேலைசெய்யவில்லை எனத் தெரியவந்தது.)

கூடவே, அந்நிறுவனத்தின் ஆசியா பிரிவு பொதுக் கொள்கைத் தலைவர் ஜோர்டான் காண்டோ, இவ்விஷயத்தில் தங்கள் நிறுவனம் தவறு செய்தது குறித்து அதிகம் பேசாமல், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைக் களைய ஒரு நீண்டகாலத் தீர்வை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஏற்கெனவே பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஷிவ்குமாருக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது அரசின் தவறுதான் என்று நிறுவவே ஊபர் முயன்றது.

இதற்கிடையே, ஊபரின் போட்டி நிறுவனமான ஓலா (இந்திய நிறுவனம்) தொழில் போட்டி காரணமாக, தங்கள் நிறுவனத்துக்குக் களங்கம் விளைவிக்க அந்தப் பெண்ணின் மூலம் முயற்சிப்பதாகச் சந்தேகப்பட்ட கலானிக், அப்பெண்ணின் உரையாடல்கள், அவரது மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் போன்றவற்றைச் சேகரிக்க தனது நிறுவனத்தின் இந்திய அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்தப் பெண்ணே ஊபர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் (பின்னர் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது).

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தவிர்த்தது, சேவை வரியிலிருந்து தப்பிக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியது என இந்தியாவில் ஏகப்பட்ட குளறுபடிகளை ஊபர் செய்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. சந்தையைப் பிடிப்பதற்கு சட்டத்தில் என்னென்ன ஓட்டைகள் உண்டோ அத்தனையையும் பயன்படுத்திக்கொள்ள ஊபர் தயங்கியதில்லை.

சாதக / பாதகங்கள்

ஊபர் நிறுவனத்தின் வருகையால், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கவே செய்தது. இன்றைய தேதிக்கு 6 லட்சம் பேர் அந்நிறுவனத்தின் சார்பில் கார் ஓட்டுநர்களாகப் பணிபுரிகிறார்கள். ஓரளவு கட்டுப்படியாகும் கட்டணத்தில் கார்களில் செல்லும் வசதியை அனைத்துத் தரப்பினரும் பெற முடிகிறது. கார்கள் தொடங்கி, ஆட்டோ, பைக் (ஊபர் மோட்டோ) வரையிலான வாகனங்களைப் பயன்படுத்த வழிவகை செய்திருக்கிறது. கிக் பொருளாதாரம் (Gig Economy) எனப்படும் இதுபோன்ற புதிய துறையின் வளர்ச்சிக்கு ஊபரின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.

ஆனால், இன்றைய தேதியில் அந்நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் எனும் தகவல்களே அதிகம் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் 10 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொண்ட ஊபர் நிறுவனம், தற்போது 30 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வதாக இது குறித்த விசாரணையில் ஈடுபட்ட ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுவினரிடம் ஊபர் ஓட்டுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால், வருமானத்தை அதிகரிக்க அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதாகவும், கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அம்பலப்படுத்தியவர் யார்?

ஊபர் நிறுவனத்தின் முதுநிலை நிர்வாகியாகப் பணிபுரிந்த மார்க் மெக்கான்(Mark MacGann) தான், அந்நிறுவனத்தின் முக்கியத் தகவல்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு அளித்திருக்கிறார். பல்வேறு நாடுகளின் அரசுகளுடனும், கண்காணிப்பு / கட்டுப்பாட்டு அமைப்புகளுடனும் உரையாடல் நிகழ்த்தி ஊபர் நிறுவனத்துக்காகக் காரியம் சாதித்தது தான் தான் என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் போன்ற முக்கியஸ்தர்களுடன் நட்பார்ந்த முறையில் பழகி இதையெல்லாம் செய்திருக்கிறார். ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகளிடம் ‘உரிய முறையில்’ பேசியது அவர்தான். பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல குறுக்குவழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

எல்லாம் சரி, எல்லாவற்றுக்கும் உடந்தையாக இருந்துவிட்டு இப்போது உண்மையைப் பேச அவர் முடிவுசெய்தது ஏன்? குற்றவுணர்ச்சிதான் அவரைப் பேச வைத்திருக்கிறது. தி கார்டியன் இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். ஊபர் முன்வைத்த கிக் பொருளாதார மாடல் மூலம், நன்மைகள் விளையும் என நம்பியதால், அதற்காகப் பல குறுக்குவழிகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றே அவர் கருதியிருக்கிறார். டாக்ஸி தொழிலில் இருக்கும் சட்ட விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம், கிக் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து பலருக்குப் பலனளிக்க முடியும் என்று தான் நம்பியதாக அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு ஊபர் நிறுவனம் எதிர்வினையாற்றியிருக்கிறது. உண்மைகளை அம்பலப்படுத்தும் விசில் ஊதியாக மார்க் மெக்கான் (whistleblower) தன்னைச் சொல்லிக்கொண்டாலும், ஊபர் நிறுவனம் அதை ஏற்க மறுக்கிறது. தவறுகள் நேர்ந்தது உண்மைதான். 2017-ல் காலனிக்குக்குப் பதிலாக டாரா கோஸ்ரோவாஷாஹி சிஇஓவாகப் பொறுப்பேற்ற பின்னர் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டதாக - ‘கில் ஸ்விட்ச்’ உத்தியைப் பயன்படுத்துவது உட்பட - அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டாரா கோஸ்ரோவாஷாஹி
டாரா கோஸ்ரோவாஷாஹி

'எங்கள் முன்னாள் தலைமைக்கு (காலனிக் பதவிவகித்தது) விசுவாசமாக இருந்ததற்காக இப்போது தனிப்பட்ட முறையில் மெக்கான் வருந்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்றைக்கு ஊபர் குறித்துப் பேசும் நம்பகத்தன்மை அவரிடம் இல்லை’ என்கிறது ஊபர்.

இவையெல்லாம், மிகப் பெரிதாக வெடித்திருக்கும் பிரச்சினை தொடர்பான சில தகவல்கள் மட்டுமே. இன்னும் ஏராளமான பிரச்சினைகள் பேச வேண்டியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in