சிதம்பரம் நடராஜர் கோயில்... 
ஆன்மிகம்

சிவனருள் பெற்ற அடியார்கள் – 7

கே.சுந்தரராமன்

களந்தையில் அவதரித்த கூற்றுவ நாயனார் ஓர் அரசர். எந்நேரமும் சிவபெருமானை நினைத்து ஐந்தெழுத்து ஓதி, சிவனடியார் பாதங்களைப் பணிந்து, அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்து வந்தவர். ஆலயங்கள் பலவற்றுக்கும் நிலம் கொடுத்து தொண்டு புரிந்தவர்.

கூற்றுவ நாயனார்

வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், திருக்களந்தை தலத்தில் சீரோடும், சிறப்போடும் ஆட்சி புரிந்துள்ளனர். களப்பாளர் (களப்பிரர்) மரபில் அவதரித்த கூற்றுவ நாயனார், திருக்களந்தை தலத்தில் வாளெடுத்து பகைவர்களை வீழ்த்தி வெற்றி கண்ட அரசராக விளங்கினார். பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்பதால் கூற்றுவர் என்ற பெயரே நிலைத்து நின்று, அவரது இயற்பெயரே மறைவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

திருக்களந்தை தலத்தில் ஆட்சி புரிந்த கூற்றுவ மன்னர், ஒரு குறுநில மன்னராக இருந்தார். தம்மிடமுள்ள அணி, தேர், குதிரை, ஆட்பெரும் படை ஆகியவற்றைக் கொண்டு நாடுகள் பல வென்றார். மன்னரின் வெற்றியால் குறுநிலம் விரிநிலம் ஆனது. மூவேந்தர்களாகப் போற்றப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும் வென்றார்.

சிவபெருமானை வணங்கும் அடியார்களிடம் மிகுந்த அன்பு பாராட்டினார். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து தரும் எண்ணம் கொண்டவராக விளங்கினார். தினமும் சிவபெருமானை வணங்கி ஐந்தெழுத்து ஓதி, கோயில்கள் பலவற்றுக்கு நிலங்கள் அளித்து, தொண்டுகள் பல புரிந்தார். தினமும் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகப் பொருட்கள், பூக்கள், விளக்கெரிக்க எண்ணெய், நெய், திரி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்படி செய்தார்.

திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய அரசருக்கு, சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தை அணிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த மணி மகுடம் தில்லை வாழ் அந்தணர்களின் பாதுகாப்பில் இருந்ததால், அவர்களிடம் இதுதொடர்பாக பேச வேண்டும் என்று தில்லை கிளம்பினார்.

(சோழ மன்னர்கள் தில்லை, உறையூர், பூம்புகார், திருவாரூர் போன்ற இடங்களில்தான் முடிசூடிக் கொள்வர். ஆதிகாலம் தொட்டே சோழ மன்னர்களுக்கு உரிய சிறப்பு பொருளாக மணிமகுடம் இருந்து வந்தது. இந்த மணிமகுடத்தை தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ள தில்லை வாழ் அந்தணர்கள், தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்)

தில்லையை அடைந்த மன்னர், நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். தில்லைவாழ் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்ற மன்னர், தனது நீண்டநாள் விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தார். மன்னரின் சொல் கேட்ட அந்தணர்கள், அச்செயலுக்கு மறுப்பு தெரிவித்தனர். மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

மன்னரால் தங்களுக்கு ஏதும் தீங்கு நேர்ந்துவிடும் என்று அஞ்சிய தில்லை வாழ் அந்தணர்கள், சேர மன்னர் ஒருவரிடம் தஞ்சம் புக எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அதை பாதுகாக்கும்படி வேண்டினர்.

திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தனக்குக் கிட்டவில்லையே என்று கூற்றுவ நாயனார் வருத்தம் கொண்டார். முடியரசு ஆவதற்கு இப்படி ஒரு தடையா என்று நினைத்து வருந்தினாலும், தில்லை வாழ் அந்தணர்களை வற்புறுத்தியோ, துன்புறுத்தியோ, மணிமகுடத்தை சூட்டிக்கொள்ள வேண்டும் என்று மன்னர் விரும்பவில்லை.

மனவேதனையுடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று இறைவனிடம் தனது வருத்தத்தைக் கூறினார். இறைவனை நோக்கி, “அருட்புனலே! ஆடும் ஐயனே! உமது திருவருளால் பகை நாட்டு அரசர்களை வீழ்த்தி, வெற்றிகள் பல கண்டேன். அனைத்து இடங்களிலும் என் வெற்றித் திருவடி பட்டும், தில்லை வாழ் அந்தணர்கள் எனக்கு மணிமகுடத்தை சூட்ட மறுப்பது ஏன்? இந்த எளியோனுக்கு நீ தான் அருள்புரிய வேண்டும். உமது திருவடியையே திருமுடியாக எனக்கு சூட்டி அருள வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.

இறைவன் அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றினார். தமது திருவடியை மன்னரின் தலையின் மீது திருமுடியாக சூட்டி, அவரது நீண்டநாள் விருப்பத்தை தீர்த்துவைத்தார். கண்விழித்த மன்னர், தான் இதுவரை பெற்ற வெற்றியைக் காட்டிலும், பெரும் பேறு பெற்றதாக எண்ணி மகிழ்ந்தார்.

தில்லை வாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய மறுத்தபோதும், தில்லை பெருமானே தனது கனவில் எழுந்தருளி தனது விருப்பத்தை நிறைவேற்றினார் என உள்ளம் உவந்தார். சிரம் மீது கரம் குவித்து, நிலத்தில் விழுந்து பரமனைப் பணிந்து எழுந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்...

சிவபெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, பல வெற்றிகளைக் குவித்து ஆட்சி புரிந்தார் மன்னர். இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்குச் சென்று பொன்னும் பொருளும் நிலமும் அளித்தார். தனித்தனியே ஒவ்வொரு கோயிலுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தடையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். திருத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று வழிபாடு செய்தார். தில்லை வாழ் அந்தணர்கள் மீது ஏதும் வருத்தம் கொள்ளாமல், சிவபெருமான் அருள்பெற்ற அடியார்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார்.

ஆலய வழிபாட்டுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் கூற்றுவ நாயனார். உடல் நினைவு இருக்கும் வரை ஆலயப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். சிவஞானிகளுடன் இணைந்து, ஆலயங்கள்தோறும் சென்று தொண்டுகளை மேற்கொண்டார். வெறும் வரிவசூல் பணிகளை மட்டும் செய்து கொண்டிருக்காமல், அவற்றைக் கொண்டு சாலைகளை சீரமைத்தார். கோயில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். பழுது பார்க்கும் பணிகளைச் செய்து, சிற்பக் கலையை பாதுகாத்தார்.

மக்கள் தொண்டையும் மகேசன் தொண்டையும் சிறப்புற செய்துவந்த மன்னர் நீண்ட நாள் ஆட்சிபுரிந்து நிறைவில் வினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் இரண்டறக் கலந்தார்.

‘ஆட்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

SCROLL FOR NEXT