ஆன்மிகம்

சிவனருள் பெற்ற அடியார்கள் – 3

கே.சுந்தரராமன்

சைவ பத்ததி, சைவ பூஷணம், பஞ்சாட்சர ஜபவிதி, தத்துவப் பிரகாசம், சைவ சமய நெறி, சிவார்ச்சனா சந்திரிகை, அட்டப் பிரகரண நூல்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை கருவி நூல்களாகக் கொண்டு சிவபூஜை செய்பவர்கள் தீக்கை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

உயிர்களை அடிமைப்படுத்தும் போகப் பொருட்களாக கூறப்படும் பாசத்தில் (ஆணவம், கன்மம், மாயை) இருந்து விடுபட்டு ஞானத்தை அளிப்பதையை ‘தீக்கை’ என்னும் சொல்லுக்கு பொருளாக ஆகமங்கள் உரைக்கின்றன. ஒருவருடைய அகவளர்ச்சிக்கு ஏற்ப, அவரவரின் பக்குவத்துக்கு ஏற்ப தீக்கை பெறுதல் வேறுபடுகிறது.

அதிதீவிர பக்குவம் உடையவர்களுக்கு இறைவனே உள் நின்று உணர்த்தி வீடுபேறு அருள்வதுண்டு. உள்நின்று உணர்த்தும் பக்குவம் இல்லாதவர்களுக்கு, ஆச்சாரிய (குரு) கோலத்தில் நின்று, உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துவதையே ‘தீக்கை’ என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவதுண்டு. குருவால் உணர்த்தப்படும்போதுதான் ஒருவர் சைவ சமய வாழ்க்கைக்கு சிவசம்பந்தத்தோடு வாழும் தகுதி பெறுவதாக கூறப்படுகிறது.

சமய தீக்கை, விசேட தீக்கை, நிர்வாண தீக்கை, ஆசாரிய அபிஷேகம் என்று நான்கு வகையாக தீக்கை பாகுபடுத்தப்படுகிறது. ஒருவரை சைவ சமயத்துக்கு உரியவராக ஆக்குவது சமய தீக்கை என்றும், அதைவிட சிறப்பானது விசேட தீக்கை என்றும், முத்திப் பேற்றுக்கு காரணமாவது நிர்வாண தீக்கை என்றும், அதற்கும் மேலான பக்குவத்தை பெற்றவர் ஆச்சாரிய அபிஷேகம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

நயன தீக்கை (பார்வையால் மீன் போன்று தீக்கை பெறுதல்), பரிச தீக்கை (பரிசத்தால் பறவை போன்று தீக்கை பெறுதல்), வாசக தீக்கை (மந்திர உச்சாடனம்), மானச தீக்கை (மனத்தால் ஆமை போன்று தீக்கை பெறுதல்), சாத்திர தீக்கை (ஆகமப் பொருள் உபதேசித்தல்), யோக தீக்கை (சிவனோடு கலக்கச் செய்தல்), ஔத்திரி தீக்கை (ஹோமத்துடன் கூடிய நிலை) என்று தீக்கை முறை ஏழாகப் பிரிக்கப்படுகிறது.

சிவனருளில் உறுதியும், அடிப்படை ஒழுக்கமும் சாத்திர ஞானமும் இருப்பவர்களுக்கும் தீக்கை செய்து வைக்கப்படுவதுண்டு.

சிவபூஜையின் நோக்கம்

வேதத்தில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் கூறப்பட்டது. சிவாகமத்தில் வீடுபேறு ஒன்றே கூறப்பட்டது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களையும் சிவனைச் சார்ந்து நின்று சிவ வழிபாட்டால் பெறலாம் என்பதே சைவ சமயத்தைச் சார்ந்தவர்களின் கருத்து. இறை நம்பிக்கையுடன் இறைவனை முன்வைத்து வாழும்போது இவ்வுலக வாழ்வு சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

ஆன்மார்த்தம், பரார்த்தம் என பூஜைகள் பாகுபடுத்தப்படுகின்றன. ஆன்மார்த்த பூஜை இஷ்டலிங்க பூஜை என்று கூறப்படுகிறது. குருநாதரிடம் இருந்து பெற்ற லிங்கத்தை, ஒருவர் வாழ்நாள் முழுவதும் சிவார்ச்சனை செய்து வழிபடுவது ஆன்மார்த்த பூஜையில் அடங்கும். அனைத்து உயிர்களுக்கும் அருள்புரிய வேண்டி, சிவபெருமானை கோயில்களில் பிரதிஷ்டை செய்து பூஜித்தல் பரார்த்த பூஜை எனப்படுகிறது.

அகத்துக்குள்ளேயே (மனதுக்குள்ளேயே) சிவபெருமானை நினைத்து நிகழ்த்தப் பெறும் பூஜை மானத பூஜை (அக வழிபாடு) என்று கூறப்படுகிறது.

சிவலிங்கத் திருக்கோலம், அபிஷேகப் பொருட்கள், மலர்கள், ஆடை, தூபதீபங்கள், இருக்கை, பூஜை பாத்திரங்கள் போன்றவற்றைக் கொண்டு புற வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாடு செய்வோர் நீராடித் தூய ஆடை உடுத்தி, திருநீறு பூசி, உருத்திராக்கம் அணிந்து, தக்க ஆசனத்தில் அமர்ந்து, திருவைந்தெழுத்து (ஓம் நமசிவாய) ஓதி பூஜை செய்ய வேண்டும். முதலில் மனது, பூஜை செய்யும் இடம், பூஜைக்கு உரிய பொருட்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி, மந்திரங்கள் உச்சரித்து, பூஜையைத் தொடங்க வேண்டும்.

பதினாறு வகை உபசாரங்களை (ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்திரோதனம், அவகுண்டம், தேனு முத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பானீயம், செப சமர்ப்பணம், தீபாராதனை) செய்ய வேண்டும். இது சோடஷ உபசாரம் எனப்படும்.

சிவலிங்கம்

சிவலிங்கத்தின் மேற்பகுதி சிவபெருமானையும், அடிப்பகுதி தேவியையும் குறிப்பதாகக் கூறுவர். அடிப்பகுதியை இரண்டாகப் பிரித்து, அவை பிரம்மதேவரையும் திருமாலையும் குறிப்பதாக சைவ புராணங்களில் கூறப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சதாசிவ மூர்த்தியாகவும், சிவபெருமானின் பிற கோலங்கள் மகேஸ்வர மூர்த்தங்களாகவும் போற்றப்படுவதுண்டு.

திருமுறைகள்

சைவ சமயத்தில் சிவ பெருமானின் அங்கங்களாக கூறப்படும் 28 ஆகமங்கள் உள்ளன. அவையாவன, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், குய்யம், சகஸ்ரம், அம்சுதம், சுப்ரபேதம், விஜயம், நிஷ்வாசம், ஸ்வயம்புவம், அனலம், வீரபத்ரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம், புரோத்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பரமேஸ்வரம், கிரணம், வாதுளம் ஆகும்.

சிவபெருமானை வேதத்தோடு சேர்த்து வழிபடுவதும், வழிபாட்டை ஆகமத்தோடு சேர்த்து கடைபிடிப்பதும் சைவ சமயத்தைத் சார்ந்தவர்களின் வழக்கமாகும். வேதத்தின் வழிநூலாக திருமுறைகள் போற்றப்படுகின்றன. திருமுறைகள் தெய்வ நூல்களாகவே புகழப்படுகின்றன. தமிழ் வேதமாகவே கருதப்படும் திருமுறைகள், சிவபெருமானால் படைக்கப்பெற்ற வேதமாக கருதப்படுகின்றன. இவற்றை வேதங்கள் போல் ஓதுவார் என்ற பிரிவினர் ஓதி வருகின்றனர்.

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரங்கள் முதல் 3 திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடிய தேவாரங்கள் அடுத்த 3 திருமுறைகளாகவும், சுந்தரர் பாடிய தேவாரங்கள் ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர் போன்ற ஒன்பதின்மர் பாடிய திருவிசையப்பா 9-ம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திருமந்திரம் 10-ம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலானோர் பாடிய பாடல்கள் 11-ம் திருமுறையாகவும், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் 12-ம் திருமுறையாகவும் போற்றப்படுகின்றன.

திருத்தொண்டர் புராணம், சிவனருள் பெற்ற 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி உரைக்கிறது.

(இனி வரும் வாரங்களில் சிவனருள் பெற்ற அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அரனருள் பெறுவோம்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

SCROLL FOR NEXT