தமிழக ஆளுநர்களாக இருந்த 3 குடிமைப் பணி அதிகாரிகள்!

ஆர்.என். ரவி 2-வது ஐபிஎஸ் அதிகாரி
1987-ல் சென்னை வந்த துணைக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை, நடிகர் சிவாஜி கணேசன் வரவேற்கிறார். இடது ஓரத்தில் இருப்பவர் அப்போதைய ஆளுநர் எஸ்.எல்.குரானா
1987-ல் சென்னை வந்த துணைக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை, நடிகர் சிவாஜி கணேசன் வரவேற்கிறார். இடது ஓரத்தில் இருப்பவர் அப்போதைய ஆளுநர் எஸ்.எல்.குரானா படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

பொதுவாக ஆளுநர்களாக அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களை மத்திய ஆளும் கட்சி நியமித்துவிடும். சில நேரங்களில் குடிமைப் பணி அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றிய நீதிபதிகள், பல்துறை நிபுணர்கள் போன்றோரும் ஆளுநர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி. தமிழகத்தில் இதற்கு முன்பு இந்தியக் குடிமைப் பணிகளைச் சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது 4-வதாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எஸ்.எல்.குரானா

தமிழகத்தின் 13-வது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சுந்தர் லால் குரானா. 1982 முதல் 1988 வரை தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர் இவர். தமிழகத்தில் சட்ட மேலவை கலைப்பு, எம்ஜிஆர் மறைவு, 1988-ல் ஜானகி ஆட்சிக் கலைப்பு போன்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்தபோது தமிழகத்தின் ஆளுநராக இருந்தவரும் இவரே. எஸ்.எல்.குரானா ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றியவர்.

தமிழக ஆளுநராகப் பதவிவகித்த பி.சி.அலெக்ஸாண்டர், 1990 மே 23-ல் பணியிலிருந்து விடைபெற்றுச் சென்றபோது, சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் அவரை வழியனுப்புகிறார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி.
தமிழக ஆளுநராகப் பதவிவகித்த பி.சி.அலெக்ஸாண்டர், 1990 மே 23-ல் பணியிலிருந்து விடைபெற்றுச் சென்றபோது, சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் அவரை வழியனுப்புகிறார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

பி.சி.அலெக்ஸாண்டர்

தமிழகத்தின் 14-வது ஆளுநராக நியமிக்கப்பட்ட பி.சி.அலெக்ஸாண்டரும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்தான். 1948 முதல் பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றிய பி.சி.அலெக்ஸாண்டர், இந்திரா காந்திக்கு முதன்மைச் செயலாளராகவும் இருந்தவர். 1988-ல் ஜானகி ராமசந்திரன் அரசு கலைக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தப் பதவியில் பி.சி.அலெக்ஸாண்டர் இருந்தார்.

2002-ல் தனது ராஜினாமா கடிதத்தையும், அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டதற்கான கடிதத்தையும் அப்போதைய ஆளுநர் பி.எஸ்.ராம்மோகன் ராவிடம் அளிக்கிறார் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
2002-ல் தனது ராஜினாமா கடிதத்தையும், அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டதற்கான கடிதத்தையும் அப்போதைய ஆளுநர் பி.எஸ்.ராம்மோகன் ராவிடம் அளிக்கிறார் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

ராம்மோகன் ராவ்

தமிழகத்தின் 19-வது ஆளுநராக நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் ஒரு ஐபிஎஸ். அதிகாரியாவார். 1956-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ராம்மோகன் ராவ், ஆந்திராவின் டிஜிபியாகவும் இருந்தவர். 2002-ல் அவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2004-ல் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் பதவியேற்ற பிறகு, தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா வர வேண்டும் என்று அக்கட்சி விரும்பியது. அதையடுத்து ராம்மோகன் ராவ் வடகிழக்கு மாநிலத்துக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். அதை ஏற்காமல் பதவியிலிருந்து அவர் விலகினார். ராம்மோகன் ராவ் மாற்றப்பட்டதை எதிர்த்து, அன்றைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த கதையும் அப்போது நடந்தேறியது.

2019-ல் நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்துப் பேசும் ஆர்.என்.ரவி
2019-ல் நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்துப் பேசும் ஆர்.என்.ரவிபடம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

ஆர்.என்.ரவி

இந்நிலையில், ராம்மோகன் ராவுக்குப் பின்னர், 19 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, உளவுப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவர் 1976-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்தவர். உளவுத் துறை சிறப்பு இயக்குநர், தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் எனப் பல பதவிகளை ஆர்.என். ரவி வகித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in