அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் நீலகிரி

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்
அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி  செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் நீலகிரி

தமிழகத்திலேயே தகுதி வாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 7,24,748 மக்கள் உள்ளனர். இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,21,060 நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமும் நீலகிரி மாவட்டம் தான். இங்கு தோடர் , கோத்தர், பணியர் உட்பட ஆறு வகை பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

பழங்குடியினருக்கு சதவீத தடுப்பூசி

சர்வசேத சுற்றுலா தலமான நீலகிரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கரோனா நோய் தொற்று பரவியது. முதல் அலையில் பாதிக்கப்படாத பழங்குடியினர் இரண்டாம் அலையில் சிக்கினர். உதகையில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்தாண்டு ஜனவரி முதல், கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தொடக்கம் முதலே நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் தயக்கமில்லாமல் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் பழங்குடியினர் மத்தியில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தது. அத்தயக்கத்தை போக்கியதால், அவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 27,500 பழங்குடியின மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர் கள் 21,800 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, பழங்குடிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டமாக நீலகிரி உருவாகியது.

100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தமிழகத்திலேயே 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. கடந்த 12-ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29,760 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் மூலம் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப் பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காமதேனு இணையத்திடம் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி 29,760 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இன்னும் 3 மாத காலத்தைக் கடக்காத 6,277 நபர்கள் தவிர்த்து மீதமுள்ள 5,14,783 நபர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய காரணத்தால் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in