வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்: தமிழகம் முதலிடம்!

வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்: தமிழகம் முதலிடம்!

’சுயதொழில் செய்து கோடீஸ்வரியான இளம் இந்தியப் பெண்’ போன்ற விளம்பரச் செய்திகளை, அண்மைக் காலமாக அடிக்கடி பார்க்கிறோம். இதேபோல, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பெண்கள் என்று சிலர் குறித்து சிலாகித்துப் பேசுகிறோம். இத்தகைய பெண் ஆளுமைகள் பலருக்கு உந்து சக்தியாகக் காட்சி அளித்தாலும், நிதர்சனத்தில் பெண்களின் வளர்ச்சி என்னவாக இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

திருமணம் ஆகாத தமிழக இளம் பெண்களில் 27 சதவீதம்வரை பணிபுரிந்து வருகின்றனர்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இதில், சரிபாதி இல்லாவிடினும் ஏறக்குறைய பாதி யுவதிகள்! 20-லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள் இளம் பெண்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி, வேலை, திருமணம், புதிய குடும்ப வாழ்க்கை என்பதாக ஈடுபட்டிருப்பார்கள்.

அந்த வகையில், 2018-19 காலகட்டத்தில் இந்த வயது வரம்புக்கு உட்பட்டு, 9 கோடி 24 லட்சம் இளம் பெண்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் 10.7 சதவீதத்தினர் அந்தக் காலகட்டத்தில் உயர் கல்வி பெற்றுவந்துள்ளனர். 66 சதவீத இளம் பெண்களோ குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 9.5 சதவீதத்தினர் மட்டுமே பெருநிறுவனங்கள் தொடங்கி முறைசாரா தொழில் துறைகள்வரை பணிபுரிந்து வந்தது, அவ்வப்போது எடுக்கப்படும் தொழிலாளர் கணக்கெடுப்பில் (Periodic Labour Survey) தெரியவந்துள்ளது. அவர்களில் கணிசமான எண்ணிக்கையைச் சேர்ந்தவர்கள் திருமணம் ஆகாதவர்கள். மொத்த எண்ணிக்கையில், 72 சதவீத பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 7 சதவீதத்தினர் மட்டுமே, வீட்டைத் தாண்டி வெளியிலும் வேலை செய்துள்ளனர்.

வேலை இருப்பவர்கள், இல்லாதவர்கள்!

அந்த வகையில் விவசாயத்தை தவிர தொழிற்துறை, சேவைத் துறை உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் அதிகம் பேர் பணிபுரிவது தெரியவந்துள்ளது. அதிகம் என்றால் நிறைய அல்ல, நாட்டின் சராசரி விகிதத்தைவிடவும் கூடுதலாகக் கிட்டத்தட்ட 27 சதவீதம்வரை திருமணம் ஆகாத தமிழக இளம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு தமிழகத்தில் 19 சதவீதத்தினரும், குஜராத்தில் 6.5 சதவீதத்தினரும் பணிபுரிவது தெரியவந்துள்ளது.

வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்கள் வேலைக்குச் செல்லும் விகிதாச்சாரத்தில் குறைந்தபட்சமான வித்தியாசம் உள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் முற்றிலுமாகப் பொருளாதாரச் சந்தையிலிருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதிலும், இவ்விரு மாநிலங்களில் பெண்கள் அதிகமாக விவசாயத்தில்கூட ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை.

வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கேரளா, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்தில் திருமணமான பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் விவசாயம் செய்துவருகின்றனர். வளர்ச்சி அடைந்த மாநிலங்களான கேரளா, தமிழகம், பஞ்சாப், ஹரியாணாவில் 5 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

அதேபோல வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கேரளா, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றது.

இதில், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களிலும் திருமணம் முடித்த பிறகு, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது என்ற கேள்வி எழுகிறதல்லவா? வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு ஆகியவை திருமணம் முடித்த பெண்களின் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கோருவதே இதற்கு அடிப்படைக் காரணம். இந்த விஷயத்தில் கேரளா முன்னோடியாகத் திகழ்கிறது. அங்குப் பெண்கள், வீட்டுப் பொறுப்புகளை குறைந்த அளவில் மட்டுமே சுமக்கும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in