வீட்டுப் பிரசவம் எதனால் ஆபத்து?

அவள் நம்பிக்கைகள்-17
வீட்டுப் பிரசவம் எதனால் ஆபத்து?

டெட்டனஸ் எனும் ரணஜன்னி (வில்வாதம்) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நரம்புகள் பாதிக்கப்படும். அதன் காரணமாக அடுத்தடுத்து ஏற்படும் spasms என்ற தசை இறுக்கங்களால் வாயைத் திறக்க முடியாமல் போவது தொடங்கி (lockjaw) உணவை, நீரை விழுங்க முடியாமல் போவதும், நடக்க முடியாமல் போவதும் ஏற்படும்.

ஒருகட்டத்தில் மூச்சைக் கூட விடமுடியாமல் போவதோடு, இறுதியில் மரணம்வரைக் கொண்டுசெல்லும். ஆனால், பயப்பட வேண்டாம்… இந்த நோய் இப்போது இந்தியாவில் மிக மிக அரிதான ஒன்றாக உள்ளது. அதுவும் கர்ப்பிணிப் பெண்களில் இந்நோய் முற்றிலும் இல்லை. இது எப்படி சாத்தியமாயிற்று, இதற்கும் கர்ப்பத்திற்கும் என்ன சம்பந்தம் ஆகியவற்றை பற்றிப் பார்ப்போம்.

வீட்டிலேயே 2012-ல் பிரசவமான அந்த ஆண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. ஐந்தாறு நாட்களாகத் தாய்ப்பாலை குடிக்க முடியாமல் சிரமப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அறிவுரைப்படி அசாம் மாநில சிவசாகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் குழந்தையைப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த குழந்தை நல மருத்துவர் அந்தக் குழந்தைக்கு 'Neonatal Tetanus' என்பதைக் கண்டறிந்து உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்.

ஐந்து நாட்கள் போராடியும் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அந்தக் குழந்தை மரணமடைந்தது. ஆனால், 2012-ல் அசாமில் கண்டறியப்பட்ட இந்த நியோநேட்டல் டெட்டனஸ் எனும் பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட ரணஜன்னி நோய்தான் நமது நாட்டில் கடைசியாகக் கண்டறியப்பட்ட ரணஜன்னி என்று தகவல்கள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பு 2015-ல் தனது அறிக்கையில் "இந்தியாவின் முக்கிய மைல்கற்களில் இது ஒன்று. கர்ப்பகால மற்றும் பிறந்த குழந்தை ரணஜன்னி நோயை இந்தியா முழுமையாக் கட்டுப்படுத்தியுள்ளது" என்று இதை உறுதி செய்துள்ளது.

ஆனால், இதை எப்படி இந்தியா நிகழ்த்திக் காட்டியது என்று தெரியுமா? அதற்கு இரண்டே காரணங்கள்தான். ஒன்று, கட்டாயமாக்கப்பட்டு வரும் மருத்துவமனைப் பிரசவங்கள். மற்றொன்று நாடு முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டிடி தடுப்பூசிகள்.

அது என்ன டி.டி இன்ஜெக்‌ஷன்? அது கர்ப்பகாலத்தில் எப்போது, எப்படி வழங்கப்படுகிறது என்பதை அறியும் முன், இந்த ஊசி வழங்கப்பட்ட வரலாற்றையும் சிறிது பார்க்கலாம். உண்மையில் ரணஜன்னி எனும் டெட்டனஸ் நோய் பல நூற்றாண்டுகளாக மனிதர்களைத் தாக்கி வந்தபோதிலும், அதற்கான ’ஆன்டி டெட்டனஸ் சீரம்’ எனும் தடுப்பு மருந்து 130 ஆண்டுகளுக்கு முன்1891-ல் டெட்டனஸ் கிருமியை குதிரைகளுக்குச் செலுத்தி, பரிசோதனை செய்தபோதுதான் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போரின்போது போரில் மரணம் அடைந்தவர்களுக்குச் சம அளவில் டெட்டனஸ் நோய்த் தாக்குதலும் இருப்பதைக் கண்ட அமெரிக்க அரசாங்கம், போர் வீரர்களிடையே மரணங்களைத் தவிர்க்க, துணிந்து ஆன்டி டெட்டனஸ் சீரத்தை அவர்களுக்கு வழங்கியதுதான் இதன் முதல் நகர்வாகும். பின்னர் டிடி எனும் டெட்டனஸ் டாக்சாய்ட் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட இரண்டாம் உலகப் போருக்குச் செல்லும் முன், தனது வீரர்கள் அனைவருக்கும் டெட்டனஸ் தடுப்பூசியைச் செலுத்தி, பிறகுதான் போருக்கு அனுப்பியது அமெரிக்க அரசு. இப்படி ஆரம்பித்ததுதான், காயங்கள் ஏற்படும்போது டெட்டனஸ் தடுப்பூசி போடும் பழக்கமாக இன்று உலகெங்கும் பரவியுள்ளது என்கிறது வரலாறு.

இந்த டெட்டனஸ் நோயை ஏற்படுத்தும் Clostridium tetani எனும் பாக்டீரியாக் கிருமிகள் பொதுவாகச் சுத்தம் சுகாதாரமற்ற இடங்களிலும், துருப்பிடித்த பொருட்களிலும், முட்களிலும், மண்ணிலும் நீண்ட நாட்கள் வாழும் தன்மை கொண்டது என்று கூறும் மைக்ரோபயாலஜி, இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது என்கிறது. அப்படியிருக்க, இந்த டிடி தடுப்பூசி ஏன் கர்ப்பகாலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது என்பதற்கு அன்றைய வாழ்நிலைதான் காரணம் என்கிறது மருத்துவ வரலாறு.

அன்றைய நாட்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கூட டெட்டனஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு, பிரசவங்கள் நிகழ்ந்த சுகாதாரமற்ற இடங்களும், பிரசவத்தின்போது தொப்புள்கொடியைப் பிரிப்பதற்கு உபயோகிக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்படாத கத்தி மற்றும் கருவிகளும் தான் காரணம் என்று கூறும் யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு, இவ்வகையான மரணம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படாமல் இருக்க 1960 முதல் டி.டி. தடுப்பூசியை உலகெங்கும் அறிவுறுத்தியும் வந்துள்ளது. நமது நாட்டில்1983 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு முறையாக வழங்கப்பட்ட டிடி தடுப்பூசிகள் உதவியால் குறைய ஆரம்பித்த டெட்டனஸ் நோய், சுகாதார முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசவங்களால் இன்னமும் குறைந்து, 2015 ஆம் ஆண்டு முதல் Maternal and Neonatal Tetanus Elimination (MNE) அதாவது தாய் சேய் டெட்டனஸ் நோய் முற்றிலும் காணாமலே போய்விட்டது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
வீட்டுப் பிரசவம் எதனால் ஆபத்து?
மைனர் பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என அரசுக்கு எப்படி தெரியும்?

Related Stories

No stories found.