உங்க ஆளுக்கு நடந்தால் மட்டும்தான் குரல் கொடுப்பீரா?

உங்க ஆளுக்கு நடந்தால் மட்டும்தான் குரல் கொடுப்பீரா?
தி இந்து கோப்புப் படம்

பல நாட்களாக தொல்லை செய்து வருகிறது ஒரு உண்மை நடப்பு.

தலைநகர் புது டெல்லியில் நடந்த ராபியாவின் கொடூரக் கொலைதான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதற்குத் தொடர்புடையதே ஆனாலும் அதுவல்ல. அதையும் தாண்டியது.

அந்த படு கொலைக்குப் பின்னும் வழக்கம் போல் உண்ண உரங்க சிரிக்க.. இப்படிப் பாதிப்பே இல்லாமல் நம் இந்தியச் சமூகத்தால் எப்படி இயங்க முடிகிறது?

கணவரின் சடலத்துடன் மனைவி உடன்கட்டையேறும் சதி முறை குறித்து

வரலாற்றில் படித்திருக்கிறோம். அன்றுவரை தன்னோடு உயிர் வாழ்ந்த ஒரு பெண்ணை மனதார தூக்கி நெருப்பில் எரிந்து விட்டு எப்படி சாதாரணமாக இவர்களால் வாழ முடிந்தது என்ற கேள்வி இதை படிக்கும்போதெல்லாம் எழும். இவர்களுக்குள் மானுடம் இல்லையா, இறந்து விட்டதா என்ற கேள்விகளும் அடுத்தடுத்து தோன்றும்.

நேரடியாக அவர்களைச் சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அந்த தனிநபரோ, அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். இல்லையெனில் ஒன்றுமே நடக்காததுபோல் கள்ள மவுனம் காக்கிறார்கள்.

ஆங்கிலேயருக்கும் அக்பருக்கும் இருந்ததே!

கடல் கடந்து வந்து நம்மை அடிமையாக்கி சுரண்டினாலும் ஆங்கிலேயரால் இதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அடுக்கடுக்கான தாள்களில் சதி மானுடத்திற்கு எதிரான அநீதி என்று ஓலமிட்டு எழுதினார்கள். அவற்றை தங்களது அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதற்கு முன்னர் அன்றைய பாரசீகத்தில் இருந்து வந்த அக்பரும் கூட இந்த சதி செயலை சகிக்க முடியாமல் சட்டங்களை இயற்ற முயன்றார். சதி முறையையே தடுக்க நினைத்தார்; முடிந்தவரை செயல்பட்டார். இப்படி அந்நியர்களை எல்லாம் பாதித்த ஒரு நடப்பு நம் மக்களை மனத்தை உலுக்கவில்லையா? இந்த கேள்வி மட்டும் மிஞ்சிப் போனது.

மாவீரர் சிவாஜி பெண்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் அவர்களைத் துன்புறுத்துபவரின் தலை உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரித்தார். மக்களும் தானே மன்னரின் சொற்படி நடந்தார்கள். இவருக்கு முன்னர் ஆட்சி செய்த விஜய நகர மன்னர்களும் பல தரப் பட்ட மக்களையும் ஒரே விதமாகத்தான் நடத்தினார்கள். வைதிக மரபார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தபோதும் சதி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் ராஜா ராம் மோகன் ராய். பெண் சிசுக் கொலையும் ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுப்பும் சகஜமாக இருந்த காலம் அது. அப்போது ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு இல்லம், ஒடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் நடத்தியவர்கள் ஜோதி ராவ் புலேவும் அவரது மனைவி சாவித்ரி பாய் புலேவும். கால காலமாக இந்த வழியில் வந்த நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

மனதுக்குள் மதில் சுவரோ!

நாட்டின் எந்தப் பகுதியில் ஒரு படுகொலை அல்லது வன்புணர்வு எது நடந்தாலும் பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் மனதை எதுவுமே பாதிக்காத விதத்தில் மதில் சுவரை கட்டி வைத்து இருக்கிறார்கள்.

குரல் கொடுக்கும் சிலரோ மனிதத்தை மறந்து பாதிக்கப்பட்ட நபரின் மதம், இனம், சாதி, மொழி, மாநிலம் போன்றவற்றை முதலில் ஆழ்ந்து சோதிக்கிறார்கள். நேரடியாக அவர்களைச் சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அந்த தனிநபரோ, அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். இல்லையெனில் ஒன்றுமே நடக்காததுபோல் கள்ள மவுனம் காக்கிறார்கள்.

இத்தனை பிரிவினைவாதம் எப்படி நம்முடைய ஆழ்மனத்தில் வேரூன்றியது? ஒரு புறம் நாம் முன்னேறிக் கொண்டிருப்பதாக பெருமை கொள்கிறோம். நமது முன்னேற்றம், படிப்பு, நாகரிகம், பொருளாதார வளர்ச்சி, வசதி போன்றவற்றை மனிதம் என்கின்ற விலை கொடுத்து வாங்கி விட்டோமோ!

அடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டு செல்கிறோம்? நம்மை நினைத்து அவர்கள் பெருமை கொள்ள முடியுமா? நாம் சங்க காலத்தை நினைத்து பெருமை கொள்வதைப் போல...

ஏ ...இந்திய மானுட சமுதாயமே எங்கே தொலைத்தாய் உன் மானுடத்தை ?

ஜெசிகா லாலுக்காகவும் நிர்பயாவிற்காகவும் விண்ணைத் தொட்ட உன் குரல் எங்கே?

நீதி கேட்க நாதி இல்லையா... நீதித் தாய் கண்கட்டுடன் கதறுகிறாள்!

மீசை துடிக்கிறது எங்கே போனது காவலும் சட்டமும்...காவல் தெய்வம் முனியன் கதறுகிறான்...

இன்று பாரதி இருந்தால் இதுபோலல்லவா வெகுண்டெழுந்திருப்பார்! பாரதிக்கு விழா எடுக்கும் இத்தருணத்தில் சிந்திப்போமாக!

கட்டுரையாளர்: உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in