இரண்டு உயிர்கள் என்பதால் இரண்டு மடங்கு சாப்பிடணுமா? :அவ(ள்) நம்பிக்கைகள்-5

இரண்டு உயிர்கள் என்பதால் இரண்டு மடங்கு சாப்பிடணுமா? :அவ(ள்) நம்பிக்கைகள்-5

நம்பிக்கை :

கர்ப்பத்தில் அதிக எடை கூடினால், இரட்டைக் குழந்தையாக இருக்கலாம்?

உண்மை :

"வயிறே தெரியல...குழந்தை வளர்ச்சி கம்மியா இருக்குமோ?", "வயிறு திடீர்ன்னு பெருசா தெரியுதே... ஒருவேளை இரட்டைக் குழந்தையா இருக்குமோ?" என்ற இந்த 2 கேள்விகளும் எதிரெதிராய்த் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றுதான்.

கர்ப்பகாலம் முழுவதும், தாயின் எடை வாரத்துக்கு அரைக் கிலோவாகவோ அல்லது மாதத்துக்கு 2 கிலோவாக அதிகரிக்கும் என்றாலும், மொத்தம் 10 முதல் 12 கிலோவரை எடை கூடுவது நடக்கும்.

அதேபோல, இயற்கையாகவே ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு, கர்ப்பகாலத்தில் வயிறு தெரியாமல் இருப்பதும், தடிமனான உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு வயிறு சற்று பெரிதாக தெரிவதும் இயல்புதான். அதனால் அதிக எடை கூடினால் இரட்டைக் குழந்தை, கூடவில்லை என்றால் குழந்தைக்கு வளர்ச்சிக்குறைவு என்பதெல்லாம் ஒன்றுமில்லை.

ஆனால், எடை அதிகமானால் தாய்க்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை நோய்களும், குறையும்போது ரத்த சோகை, தைராய்டு போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, எடையில் வித்தியாசம் அதிகமாகத் தெரியும்போது தாங்கள் பார்க்கும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

நம்பிக்கை :

"கர்ப்ப காலத்தில், 2 உயிர்கள் என்பதால் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சேர்த்து உணவை 2 மடங்கு அதிகம் உண்ண வேண்டும்?"

உண்மை :

"அப்ப, கருவில் இரட்டைக் குழந்தைன்னா... அம்மா 3 மடங்கு உணவு சாப்பிடணுமா..?"

அப்படியெல்லாம் இல்லை. ஊட்டச்சத்து மிகுந்த உணவு, எப்போதும் உண்பதைவிட 400 முதல் 500 கலோரிகள் அளவு அதிகமாக உட்கொண்டாலே போதுமானது. உட்கொள்ளும் உணவை 10 சதவீதம் மட்டும், அதாவது 3 இட்லியை நான்காக அதிகரித்தால் போதுமானது.

ஹார்மோன்கள் காரணமாக உணவு செரிமானம் கர்ப்ப காலத்தில் சற்று தாமதிப்பதால், உணவை சிறு அளவுகளாக, ஒரு நாளில் 5-லிருந்து 6 முறைவரை பகிர்ந்து உட்கொள்ளலாம்.

Balanced Diet எனப்படும் சமச்சீர் உணவு இங்கு அவசியம் என்பதுடன், வைட்டமின்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்து ஆகியன நிறைந்த உணவு வகைகள் இன்னும் ஏற்புடையவை.

தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆதாரம், ஆரோக்கியமான உணவு மட்டுமேயன்றி, அதிகப்படியான உணவு அல்ல.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
இரண்டு உயிர்கள் என்பதால் இரண்டு மடங்கு சாப்பிடணுமா? :அவ(ள்) நம்பிக்கைகள்-5
ஸ்கேனிங்கா, செல்போனா எது கருவை பாதிக்கும்? : அவ(ள்) நம்பிக்கைகள் - 4

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in