செர்வைகல் என்சர்க்ளாஜ் எனும் கருப்பைவாய் தையல்

அவள் நம்பிக்கைகள்-27
செர்வைகல் என்சர்க்ளாஜ் எனும் கருப்பைவாய் தையல்

”முப்பது வயதில் நான் முதன்முதலாய் கருத்தரித்தபோது அப்படி நடக்குமென்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நான்காவது மாதம் குழந்தை வயிற்றில் இருந்தபோது எனக்கு அடிவயிற்றில் ஏதோ இறங்குவது போலிருந்தது. எந்தவொரு வலியும் இல்லாமல் ஒரு இயல்பான காரியம் போல, அப்படியே வெளியே வந்த எனது குழந்தை என் கண் முன்னே அந்த இரவு இறந்ததைப் பார்த்தபோது என்னால் தாங்கவே முடியவில்லை” என்று தனது புத்தகம் ஒன்றில் கூறியுள்ளார் முன்னாள் ஹாலிவுட் பிரபல நடிகையான சோஃபியா லாரன். முதல் குழந்தை மட்டுமல்ல, அடுத்த குழந்தைக்கும் அவருக்கு அதேபோலத்தான் நிகழ்ந்தது.

கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு கரு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல், வலியும் இல்லாமல், கருத்தரித்த நான்கைந்து மாதங்களிலேயே அப்படியே இயல்பாக வெளியே வந்துவிடுமா, அது எப்படி, என்பது போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா?

உண்மையில் சோஃபியா லாரனுக்கு ஏற்பட்டதுபோல, நூற்றில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு 'Cervical Incompetence' எனும் கருப்பைவாய் விரிதல் நிலை என அழைக்கப்படுகிறது. பொதுவாக, கருத்தரிப்பு நிகழாத சாதாரண சமயங்களில் ஒரு பெண்ணின் கருப்பையின் மேல் மற்றும் இடைப்பகுதி (fundus and body of uterus) சற்றுப் பெரிதாக அகன்றும், சற்று நீளமாகவும், (6-7.5 செ.மீ) காணப்படும். கருப்பையின் கீழ்ப்பகுதியான கருப்பைவாய் (cervix) சற்று குறுகியும் (3-3.5 செ.மீ) இறுகியும் காணப்படும். அதாவது ஒரு பெண் கருத்தரிக்கும்போது, கரு வளர்ந்து பெரிதாகி பிரசவிக்கும் வரை கருப்பையின் மேல்பகுதி குழந்தை வளர்வதற்கான இடத்தையும் சூழலையும் அளிக்கிறது.

கர்ப்பகாலம் முழுவதும் அந்தக் கருவின் எடையைத் தாங்கி நிற்பதுடன், பிரசவ நாளன்று இளகி குழந்தை பிறக்க வழிவிடுவது அதன் கீழ்ப்பகுதியான மென்மையான ஆனால் உறுதியான முடிச்சுப்போல இருக்கும் கருப்பைவாய்தான்.

பொதுவாக கருப்பையின் மேல்பகுதியின் வலுவிற்கு அதன் ஊடுதசைகளின் அமைப்பும், கர்ப்பகால ஹார்மோன்களும் பெரிதும் உதவுகின்றன. அதேநேரம் அதன் கீழ்ப்பகுதியான செர்விக்ஸ் எனும் கருப்பைவாய்க்கு பலம் சேர்ப்பது, அதன் இணைப்பு திசுக்கள் மற்றும் கொலாஜன். ஆனால், ஒரு சில கர்ப்பிணிப் பெண்களின் கருப்பைவாயின் கொலாஜன் திசுக்கள் மற்றும் அதன் சுவர்களில் ஏற்படும் மாற்றங்களாலும், ஹார்மோன்களின் பற்றாக்குறையாலும் கருப்பைவாய் தேவைக்கும் அதிகமாக மென்மையடைவதால், கருவைத் தாங்கும் வலுவை அது இழந்துவிடுகிறது. இதன் காரணமாக, கரு நன்கு வளர்ந்து எடை கூடத் தொடங்கும் நான்காவது ஐந்தாவது மாதங்களிலேயே கருப்பைவாய் இளகி குழந்தை வெளியேற வழி விட்டுவிடும். சோஃபியா லாரனுக்கு நிகழ்ந்தது இதுவே.

கிட்டத்தட்ட 95 சதவீதம்வரை வளர்ந்திருக்கும் கருவானது, 16-20 வாரங்களில் அறிகுறிகள் எதுவுமின்றி, கருப்பை வாய் நெகிழ்ந்து, உள்ளே வளரும் குழந்தையை வெளியேற்றிவிடும். இந்த நிலையை, கருப்பைவாய் திறமின்மை அதாவது செர்வைகல் இன்காம்பீட்டன்ஸ் (cervical incompetence) என அழைக்கும் மருத்துவர்கள், பிறவியிலேயே ஏற்படும் கொலாஜன் கோளாறுகள், கருப்பைவாயில் ஏற்படும் பிறவிக் குறைபாடுகள், முன்னர் மேற்கொள்ளப்பட்ட கருப்பைவாய் அறுவை சிகிச்சைகள் அல்லது முன்னர் நிகழ்ந்த கருச்சிதைவுகள் போன்றவற்றை இந்த செர்வைகல் இன்காம்பீட்டன்ஸ்க்கு காரணங்களாகக் கூறுகின்றனர்.

தொடரும்...

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
செர்வைகல் என்சர்க்ளாஜ் எனும் கருப்பைவாய் தையல்
ஒரு பழம் கருவை கலைத்துவிடாது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in