பெண்பிள்ளைகளைப் பேசவைக்கும் ‘உள்ளுரம்’; ஊரெங்கும் நடத்தப்பட வேண்டும்!

நாடகத்தில் ஒரு காட்சி...
நாடகத்தில் ஒரு காட்சி...

அண்மையில் நான் சந்தித்த, தோழியின் வளரிளம் மகள் போட்டிருந்த டீ சர்ட் என்னை பெரிதும் கவர்ந்தது. Shout (ஷவுட் - கத்து) என்ற வாசகத்துடன் அழுத்தமான நீல வண்ணத்தில் அந்த டிஷர்ட் இருந்தது.

ஷவுட் என்ற சொல் சிந்தனையைத் தூண்டியது. சத்தம் போடாமல், அமைதியாக, மென்மையாகப் பேச வேண்டும் என்றுதானே, இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதில், கத்து என்பது உரிமைக்குரலாக ஒலிக்கிறது.

ஷவுட் என்ற இந்தச் சொல்லுக்கு மற்றொரு பொருளும் உள்ளது. தன் மீது பாலியல் அத்துமீறல் நடக்கும்போது, உரக்கக் கத்த வேண்டும் என்றும் இது பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது.

‘மரப்பாச்சி’ குழுவினரின் தயாரிப்பில், அ.மங்கை அவர்கள் எழுதி, நெறியாள்கை செய்த `உள்ளுரம்’ என்ற நாடகத்தை நேற்று சென்னையில் பார்த்தேன். குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த இந்த நாடகம் அருமை. மத்திய சென்னை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நாடகத்தில் ஒரு காட்சி...
நாடகத்தில் ஒரு காட்சி...

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதும் மனதை உலுக்குகிறது. பெண்குழந்தைகளை, குழந்தைகளாகப் பார்க்காமல், அவர்கள் மீது அத்துமீறும் குற்றங்களும், கொடுமைகளும் குடும்பம், சுற்றுப்புறம், பள்ளிக்கூடம், பொதுவெளி என்று அனைத்து தளங்களிலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான குரலை எழுப்பி, ஓர் உரையாடலைத் தொடங்கி வைக்கிறது இந்த நாடகம்.

ஒரு பெண் உடற்பயிற்சி செய்துகொண்டே, தன் உடலைக் குறித்து, உடல் மீதான தன் உரிமை குறித்து, பெருமிதத்துடன் பறைசாற்றும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. வெளியே போகத் தயாராகிக் கொண்டே, தனக்கும் தன்னைப் போன்ற சக பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் சீண்டல்களைப் பற்றி உரையாடிக் கொண்டே பணிகளைச் செய்கிறார்.

அவர் பேச்சின் வாயிலாக பெண் குழந்தைக்கு நடக்கும் சீண்டல்கள், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க முன்வராமல், 'இது ஒரு பெரிய விஷயமா?' என்று தட்டிக் கழிக்கும் ஆணாதிக்க பொதுப்புத்தியின் அலட்சியம், பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவள் ஆடையையும், நடத்தையையும் குறை சொல்லி அவளையே குற்றவாளியாக்கும் கமென்ட்டுகள் என்று நாடகம் பல பார்வைகளை முன்வைக்கிறது. குற்றவாளி மீது புகார் அளித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு முடித்த பின்னர், அதைக் கடந்து, தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாடகம் கூறும் நிறைவுச் செய்தி அற்புதமானது.

குழந்தைகளைப் பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான உதவி மையத்தின் 'சைல்டுலைன்' தொலைபேசி சேவை (1098) இயங்குகிறது. குழந்தைகள் புகார் அளிப்பதற்கான மையங்களும், ஆலோசனை அமைப்புகளும் செயல்படுகின்றன. எல்லாம் இருந்தும், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த புகார்கள் பெரிய அளவில் வெளியே வருவதில்லை. ஏனென்றால், குழந்தைகள் தாம் சந்திக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்; பயப்படுகிறார்கள்.

அவர்களின் பயத்தை அகற்றி, ‘இவர்களிடம் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை பெற்றோரும், குடும்பமும், ஆசிரியர்களும, குழந்தைகளிடம் ஏற்படுத்துவது மிக முக்கியம். அடுத்து, அதிகாரத்தை கேள்வி கேட்க குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இங்கு அதிகாரம் என்று நான் குறிப்பிடுவது, 'தன்னைவிட அவர்கள் மிகப் பெரியவர்கள்' என்று யாரை எல்லாம் குழந்தைகள் கருதுகிறார்களோ, யாருக்கெல்லாம் பயப்படுகிறார்களோ, அதைத்தான். அவர்கள் செல்வாக்குமிக்க உறவினராக இருக்கலாம், அதட்டி உருட்டும் ஆசிரியராக இருக்கலாம், பெற்றோர்கள் மதிக்கும் வெளிநபராக இருக்கலாம்... யாராக இருந்தாலும் அவர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டால், கத்தவேண்டும், அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தரவேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், தேசிய குற்ற ஆவண காப்பகம் (நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) வெளியிட்ட 2019-ம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் 26,192 குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன என்று தெரிவிக்கிறது. பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற யதார்த்தம் ஒருபுறம் இருக்க, பதிவான குற்றங்களில் 94.2 சதவீதம் அந்த குழந்தைக்கு தெரிந்தவர்களால் நேரிடுகிறது என்று அறிக்கை கூறும் தகவல் பதைபதைக்க வைக்கிறது.

நாடகத்தில் ஒரு காட்சி...
நாடகத்தில் ஒரு காட்சி...

இதில் தமிழ்நாட்டில் பதிவானவை 1,742. இவற்றில் 99.4 சதவீதம் தெரிந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது என்பது பெருங்கொடுமை. தான் அறிந்தவர்களே தனக்கு எதிரியாகும்போது அந்தக் குழந்தை அடையும் மனஉளைச்சல் சொல்லி மாளாது.

இந்த அவல நிலை இனியும் தொடராமல் தடுக்க, இது தொடர்பான உரையாடலை, சமுதாயத்தில் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியுள்ளது. அது விழிப்புணர்வு பிரச்சாரமாக மட்டும் இல்லாமல், குழந்தைகளுக்கு நெருக்கமான கலை வடிவத்தில் இருந்தால் விரைவில் அவர்களைப் போய்ச் சேரும்; அவர்களைப் பேசவைக்கும். அந்த வகையில் மரப்பாச்சி குழுவினரின் `உள்ளுரம்’ நாடகம், பள்ளிக் குழந்தைகளிடையே நிகழ்த்தப்பட வேண்டும். கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும். இந்த நாடகத்தை குழந்தைகளும், பெற்றோரும் காணச் செய்ய வேண்டும். நாடகம் முடிந்த பிறகு, தமக்கு நேர்ந்த அத்துமீறல்களை, கொடுமைகளைப் பற்றி பேசுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். தனது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையை இந்த நிகழ்வு அவர்களிடத்தில் ஏற்படுத்தும். அவர்கள் பேசத் தொடங்கலாம்.

இந்த நாடகத்தை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது அரங்குகளிலும் நடத்த விரும்புபவர்கள் மரப்பாச்சி குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம் இமெயில்: marappachitheaterart@gmail.com / aramangai@gmail.com அலைபேசி எண் : 9940202605

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in