பெண்களின் மாதாந்திர வலியை ஆண்களுக்கு கடத்திய ஜப்பான் நிறுவனம்; மகளிர் தினத்தில் தரமான சம்பவம்

ஆண்களுக்கு மாதவிடாய் வலி
ஆண்களுக்கு மாதவிடாய் வலி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜப்பான் நிறுவனம் ஒன்று, மகளிரின் மாதாந்திர வலியை சக ஆண்கள் உணர்வதற்கான உபாயமாக, அறிவியல் சாதனங்களின் உதவியோடு கடத்தியதில் வரவேற்பு பெற்றிருக்கிறது.

‘தாயாய், தோழியாய், காதலியாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய்... ஆண்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ இப்படியான டெம்ப்ளேட் வாசகங்களில் வாழ்த்து பரிமாறியதோடு இன்றைய மகளிர் தினத்தில், ஆண்கள் தங்கள் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று பரிசுப் பொருட்களை அளித்துள்ளனர். ஆனால், சக ஜென்மமான பெண்ணை ஆண் உள்ளார்ந்து உணர்வதும், புரிந்துகொள்வதும், அதற்கேற்ப இசைந்து உடன் வாழ்வது மட்டும் தலைமுறைகள் தோறும் தடுமாற்றமாகவே தொடர்கிறது.

பெண்களை புரிந்து கொள்வதில் குறிப்பாக அவர்களின் உபாதை உலகில் ஊடுருவிப் பார்க்கும் வாய்ப்பு ஆணுக்கு கிடைப்பதில்லை. தியாகம், கடமை, கலாச்சாரம் உள்ளிட்ட கற்பிதங்களின் பெயரால் பெண்கள் தங்கள் வலிகளையும், வேதனைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்வதற்கு தலைப்பட்டிருக்கின்றனர். அதனை மறுதலிக்க பெண்களுக்கு வாய்ப்பும் தரப்படுவதில்லை. இவற்றுக்கு மாறாக, பெண்களின் உலகை உணர ஆண்களுக்கான ஒரு வாய்ப்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜப்பான் நிறுவனம் ஒன்று விநோத ஏற்பாட்டினை செய்தது.

டோக்கியோவின் எக்ஸியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஆண் பணியாளர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, செயற்கை மாதவிடாய் வலி பரிசாக வழங்கப்பட்டது. இதற்கக ’பெரியோனாய்டு’ என்ற எலெக்ட்ரானிக் சாதனம் மூலம், ஆணின் வயிற்றில் மின் சமிக்ஞைகளை அனுப்பி, மாதவிடாய் வலியை உருவாக்கியது. கீழ் வயிற்றுத் தசையைத் தூண்டி தசைப்பிடிப்பின் வலியனுபவத்தை விர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆண்கள் உணரச்செய்தனர்.

நாரா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், ஒசாகாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றும் இணைந்து உருவாக்கிய அந்த சாதனம் ஆண்களுக்கு அற்புதமான செயற்கை மாதவிடாய் வலியை பரிசளித்தது. ’நகர முடியவில்லை, நிற்க முடியவில்லை.. துடிதுடித்துப்போனேன்’ என்று ஆண்கள் பலரும் தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர். ’மாதந்தோறும் இந்த வலியோடு வீட்டிலும், பணியிடத்திலும் பெண்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள் என்று உணர முடிந்ததும் அவர்கள் மீது பெரும் மரியாதை உருவானது’ என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

ஜப்பான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்த விநோதமான மகளிர் தின முயற்சி, மகளிருக்கான மாதவிடாய் விடுமுறை குறித்த விவாதங்களை மீண்டும் உருவாக்கி உள்ளது. கூடவே, ஆண்களுக்கு பிரசவ வலியை பரிசளிக்கும் சாதனம் எப்போது வரும் என்று சில பெண்களை விசாரிக்கவும் வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!

அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!

போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in