டெல்லி ஜமா மஸ்ஜித்: பெண்கள் தடையை திரும்ப பெற்றது ஏன்?

டெல்லி ஜமா மஸ்ஜித்: பெண்கள் தடையை திரும்ப பெற்றது ஏன்?

டெல்லி துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட அதிகார தலையீடுகளை அடுத்தே, டெல்லி ஜமா மஸ்ஜித் தனது பெண்கள் தடை உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஜமா மஸ்ஜித் நிர்வாகத்தின் பகிரங்க உத்தரவு ஒன்று பொதுவெளியில் நேற்று சர்ச்சைக்குள்ளானது. குடும்ப ஆண்களின் துணையின்றி தனியாகவோ கூட்டமாகவோ வரும் பெண்களுக்கு ஜமா மஸ்ஜித்தில் அனுமதி கிடையாது என்பதே அந்த உத்தரவு. இதனையடுத்து மஸ்ஜித் நிர்வாகத்துக்கு எதிராக பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. பெண்களை அவர்களது மத வழிபாட்டு தலங்களில் அனுமதிக்காது தடுப்பதும், தடைகள் விதிப்பதும் தவறான போக்கு என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டெல்லி மகளிர் ஆணையம், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் இது குறித்து கேள்விகள் எழுப்பினர்.

இவற்றுக்கு அப்பால் டெல்லி துணைநிலை ஆளுநரான வி.கே.சக்சேனா, மஸ்ஜித் இமாம் சயீத் அஹமது புஹாரியை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், இரானில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் இந்தியாவிலும் தலையெடுத்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான புதிய உத்தரவு அந்த போராட்டத்தின் தீவிரத்துக்கு வித்திடும் என்று இதர இஸ்லாமிய மத பெரியவர்கள் தரப்பிலிருந்து ஜமா மஸ்ஜித் நிர்வாகத்துக்கு அழுத்தம் தரப்பட்டது. இதனையடுத்து குடும்ப ஆண் துணையின்றி பெண்கள் பிரவேசிக்கத் தடை என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்த மஸ்ஜித்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, “தனியாக வருகை தரும் பெண்கள், அந்த வாய்ப்பினை தங்கள் குடும்பத்தினர் அறியாது காதலை வளர்க்கும் உபாயமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேறு சில பெண்கள் மத வழிபாட்டுத் தலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்தவும் இங்கே வழிபாட்டுக்காக வருவோரின் உரிமைக்காகவும் இந்த தடை உத்தரவை பிறப்பித்து இருந்தோம். தற்போது அதனை திரும்ப பெற்ற போதும், மஸ்ஜித் வளாகத்தில் அதன் தூய்மை மற்றும் அமைதியை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதியில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனபோதும், மத வழிபாட்டுத்தலங்களில் இருபாலருக்கும் சமமான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்த ஆட்சேபங்கள் சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளன. டெல்லி ஜமா மஸ்ஜித் தொடங்கி கேரள ஐயப்பன் கோவில் வரை அவை விவாதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in