மலாலா பெண்ணியவாதி என்பதால் கல்யாணம் தவறா?

மலாலா பெண்ணியவாதி என்பதால் கல்யாணம் தவறா?
மலாலா-அசர்

எதற்காகப் படிக்க வேண்டும் என்பது சுடப்பட்ட பிறகுதான் நன்கு புரிந்தது. என்னைச் சுட்டவன், என்னுள் இருந்த பயத்தை முழுமையாகக் கொன்றுவிட்டான். இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அனைத்துக் குழந்தைகளும், ஆணோ, பெண்ணோ, கறுப்போ, வெள்ளையோ, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ, பள்ளிக்குச் செல்லும் நாள் நிச்சயம் வரும்...

இவ்வாறு பாகிஸ்தான் பெண் கல்விப் போராளி மலாலா பேசும்போது, அவருக்கு 14 வயது. பெண்கள் கல்வி பெறுவதைக் கண்டு சகிக்காத தாலிபான் பயங்கரவாதிகள் மலாலாவை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். மரணப்படுக்கையில் இருந்து மீண்டெழுந்து வந்து, ஐநா சபையில் மலாலா இப்படி பேசினார்.

'நான் மலாலா’ என்ற தலைப்பில், ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறார் மலாலா. பாகிஸ்தானின் ‘தேசிய இளைஞர் அமைதி விருது’ மலாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்ட கைலாஷ் சத்தியார்த்தியுடன், 17 வயது மலாலாவுக்கு 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெண் உரிமைக்காகவும், அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் தீவிரமாகக் குரல் எழுப்பி வந்தார். அவரிடம், திருமணம் குறித்த கேள்வியை ஊடகங்கள் எழுப்பியபோதெல்லாம், பெண்ணை அடிமைப்படுத்தும் குடும்ப அமைப்பை தான் எதிர்ப்பதாகவே தெரிவித்துவந்தார்.

நான் துணிந்து ஏற்றிருக்கும் சமத்துவத்தை, நீதியை, நேர்மையை ஏந்தியபடியே காதல் உறவையும் திருமண பந்தத்தையும் பேண முடியும் என்ற நம்பிக்கை உண்டானது.
திருமணத்துக்கு தயாராகும் மலாலா
திருமணத்துக்கு தயாராகும் மலாலா

இந்நிலையில் கடந்த வாரம் மலாலா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர் அசர் மாலிக் என்பவரை, இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் மணம் முடித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும் அன்பு பாராட்டும் அனைவரும் “மலாலா எங்க வீட்டுப் பொண்ணு” என்றே கருதுகிறார்கள். ஆகையால், மலாலாவின் திருமணப் புகைப்படம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் சமூக ஊடகப் பக்கங்களிலும் இடம்பிடித்தது. பலர், அவர் வாழ்க்கையில் இன்னொரு கட்டத்துக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாக மனமார வாழ்த்தினார்கள்.

மறுபுறம், “என்னமோ திருமணமே செய்ய மாட்டேனு சொன்னாங்க... இந்தப் பெண்ணியவாதிகளே இப்படித்தான்!” என்று சிலர் கேலி பேசினார்கள். இந்த வகைப் பதிவுகளும் வைரலாயின. இந்நிலையில் ”நான் ஏன் திருமணம் செய்துகொண்டேன்?” என்ற விளக்கத்தை மலாலா ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

என்னுடைய மனிதநேயத்தை, சுதந்திரத்தை, பெண் ஆளுமையை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் என்னைப் பீடிக்கவே திருமணம் வேண்டாம் என்ற தீர்வை தேர்வு செய்தேன்.

”நான் திருமணமே வேண்டாம் என்றுதான் இருந்தேன்... குறைந்தது 35 வயதுவரை மணமுடிக்கக்கூடாது என்றிருந்தேன். நான் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனால், ஆணாதிக்க வேரிலிருந்து உதித்த குடும்ப அமைப்பை கேள்விக்குள்ளாக்கினேன். திருமணத்துக்குப் பிறகு பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் சமரசங்கள், கலாச்சாரத்தின் பெயரால் பெண் மீது நிர்பந்திக்கப்படும் உறவுமுறை, பெண்ணை ஏளனமாகக் கருதும் போக்கு ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினேன். என்னுடைய மனிதநேயத்தை, சுதந்திரத்தை, பெண் ஆளுமையை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் என்னைப் பீடிக்கவே திருமணம் வேண்டாம் என்ற தீர்வை தேர்வு செய்தேன்.

”தேர்வில் தோற்றுவிட்டாயா? ஒரு வேலையும் கிடைக்கவில்லையா? அப்ப கல்யாணம்தான்” என்பது இங்கு சகஜம்.

உலகெங்கிலும் உள்ள 1 கோடி 20 லட்சம் பெண் குழந்தைகள், 18 வயதுக்குள் மணமுடிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கைத்துணை வாய்ப்பதில்லை. அடிமைத்தளைக்குள்தான் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலும் வடக்கு பாகிஸ்தானில் வளர்ந்த என்னைப் போன்ற சிறுமிகளுக்குச் சுதந்திரமான வாழ்க்கைக்கு நேரெதிரானது திருமணம் என்கிற பந்தம். நீங்கள் படிக்காமல், வேலைக்குச் செல்லாமல், உங்களுக்கான இடத்தை உறுதி செய்யாமல் போனால் அவசர அவசரமாக மணமுடித்துக் கொடுக்கப்படுவீர்கள். அதிலும், ”தேர்வில் தோற்றுவிட்டாயா? ஒரு வேலையும் கிடைக்கவில்லையா? அப்ப கல்யாணம்தான்” என்பது இங்கு சகஜம்.

என்னுடன் சேர்ந்து வளர்ந்த சிறுமிகளில் பலர் தங்களுடைய பணிவாழ்க்கையை தேர்வு செய்வதற்கு முன்பாகவே, கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டுவிட்டனர். ஒருத்தி 14 வயதாகும்போதே கைக்குழந்தையோடு நின்றாள். சில சிறுமிகளுக்கு பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் போகவே, அவர்களது படிப்பு பாதியிலேயே நின்றுபோனது. இன்னும் சிலர் பள்ளிக்கு அனுப்பப்பட்டாலும் சிறப்பாகப் படிக்க முடியவில்லை. இதனால், இப்பெண்களுக்குச் செலவழிப்பதில் பிரயோஜனமில்லை என்று அவர்களது பெற்றோர் முடிவெடுத்தனர். இந்த பெண்களுக்கெல்லாம் கல்யாணம் என்பது அவர்கள் தோல்வியின் விளைவு. இப்போதும் பள்ளிப்பருவத்தில் இருந்தாலும் இனி ஒரு நாளும் அவர்களது கனவுகள் நிறைவேறாது. இத்தகைய சூழலில்தான் நான் திருமணம் குறித்து யோசிக்கவே முடியாமல் இருந்தேன்.

என்னுடைய நகைச்சுவை உணர்வை அவர் ரசித்தார். நெருங்கிய நண்பர்களானோம்... ஏற்ற, தாழ்வுகளின்போது ஒருவருக்கு இன்னொருவர் செவி மடுத்தோம் தோள் கொடுத்தோம். அசரிடம் நெருங்கிய சிநேகிதனையும் அன்பு இணையரையும் கண்டேன்...

அதன் பிறகுதான் வேறொரு வழி இருப்பதும் புரிந்தது. கல்வியும், விழிப்புணர்வும், அதிகாரப்படுத்துதலும் கைவரப் பெற்றால் திருமணத்தின் கருத்தையும் உறவுகளின் வடிவமைப்பையும் பல சடங்கு சம்பிரதாயங்களையும் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். மக்கள் உருவாக்கியவைதான் கலாச்சாரம். ஆகையால் மக்களால் அதை மாற்றவும் முடியும். என்னுடைய நண்பர்கள், வழிகாட்டிகள் மற்றும் என்னுடைய இணையர் அசர் ஆகியோருடனான உரையாடல் என்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வைத்தது. நான் துணிந்து ஏற்றிருக்கும் சமத்துவத்தை, நீதியை, நேர்மையை ஏந்தியபடியே காதல் உறவையும் திருமண பந்தத்தையும் பேண முடியும் என்ற நம்பிக்கை உண்டானது.

2018-ம் ஆண்டில் கோடைக்காலத்தில் ஆக்ஸ்போர்டு நகருக்கு நண்பர்களுடன் அசர் வந்திருந்தார். அப்போதுதான் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தது. அவர் கிரிக்கெட் துறையில் பணிபுரிவதால், எனக்கு அவருடன் உரையாட நிறைய இருந்தது. என்னுடைய நகைச்சுவை உணர்வை அவர் ரசித்தார். நெருங்கிய நண்பர்களானோம். எங்கள் இருவருக்கும் இடையில் பொதுவான விருப்புகள் இருப்பதும் அருகமை பிடித்திருப்பதையும் உணர்ந்தோம். மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களிலும் ஏமாற்றம் நிறைந்த தருணங்களிலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்றோம். ஏற்ற, தாழ்வுகளின்போது ஒருவருக்கு இன்னொருவர் செவி மடுத்தோம் தோள் கொடுத்தோம்.

அசரிடம் நெருங்கிய சிநேகிதனையும் அன்பு இணையரையும் கண்டேன். பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு இன்றுவரை என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் நட்பை, காதலை, சமத்துவத்தைத் திருமண பந்தத்தில் அனுபவிக்க முடியும் என்று இப்போது நான் நம்புகிறேன். ஆகவே, நவம்பர் 9 அன்று பர்மிங்காம் நகரில் உள்ள எங்களுடைய இல்லத்திலேயே உற்றார் உறவினர் சூழ ‘நிக்கா’ செய்து கொண்டாடினோம்.

அதுவொரு கூட்டு முயற்சி. என்னுடைய தாயும் நண்பர்களும் பாகிஸ்தான் லாகூரில் இருந்து எனக்கான திருமண ஆடைகளை வாங்கி வந்தார்கள். அசரின் தாயும் சகோதரியும் எனக்கான நகைகளை வாங்கித் தந்தார்கள். என்னுடைய தந்தை, வீட்டை அலங்கரிப்பதற்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தார். ஒளிப்பதிவாளரையும் ஒப்பனை கலைஞரையும் என்னுடைய துணை ஊழியர்கள் அழைத்து வந்தார்கள். பள்ளியில் உடன் படித்த நெருங்கிய தோழிகள், ஆக்ஸ்போரைச் சேர்ந்த தோழிகள் மூவர் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

நானே என்னுடைய கைகளில் மருதாணி இட்டுக்கொண்டேன். ஏனென்றால், என்னுடைய குடும்பத்திலேயே எனக்கு மட்டும்தான் அந்தத் திறமை இருப்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன்! விசேஷத்துக்கு முந்தைய நாள் தனக்கான வெளிர் சிவப்பு கழுத்துப் பட்டையையும் பாக்கெட்டில் வைக்கும் சதுர துணியையும் எனக்கான செருப்பையும் தேர்ந்தெடுக்க அசர் பல மணிநேரம் மாலில் என்னுடன் செலவழித்தார். என்னுடைய குட்டி தம்பிகளும் கோட்டு சூட்டுகளை அணிந்தார்கள்.

மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்த தருணங்களை எங்கள் மீது அக்கறை கொண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. எங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை எதிர்நோக்கிப் பூரிப்புடன் இருக்கிறோம்.”

இவ்வாறு மலாலா எழுதியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in