பாதுகாப்பற்ற நிலையில் பெண் காவல் அதிகாரிகள்: தொடரும் பாலியல் அத்துமீறல்கள்

என்ன செய்கிறது விசாகா கமிட்டி; தட்டிக்கேட்குமா அரசு?
பாதுகாப்பற்ற நிலையில் பெண் காவல் அதிகாரிகள்: தொடரும் பாலியல் அத்துமீறல்கள்

தமிழகக் காவல் துறையின் கருப்பு தினமாக மாறிப்போன 2018 ஆண்டை, அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த ஐஜி ஒருவர், தன் கீழ் பணியாற்றி வந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார்.

மேலும் பல பாலியல் தொந்தரவுகளை கொடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அந்த ஐஜி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடந்தது. பின்னர், நீதிமன்றத்துக்கு சென்ற இந்த வழக்கு குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.

பாதிக்கப்படும் பெண் அதிகாரிகள்!

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் 2020-ல் டிஜிபி தகுதியிலிருந்த அதிகாரி ஒருவர், பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து காவல் துறையில் பெண் காவலர்கள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகப் புகார்கள் அளித்தனர். அதன்படி 2 உதவி ஆணையர்கள் தங்கள் கீழ் பணியாற்றிய பெண் காவலர்களை ஆபாசமாக வர்ணித்து பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இத்துடன் இந்த பிரச்சினை ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று (அக். 4) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த காவலர் வெங்கடேசன் மீது அடுத்த புகார் எழுந்துள்ளது. அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் கணினிப் பிரிவில் பணியாற்றி வரும் 34 வயதுடைய பெண் காவலரின் உதட்டைக் கிள்ளி, பாலியல் சீண்டலில் வெங்கடேசன் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவலர் தனது மேல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் காவலர் வெங்கடேசன் உடனடியாக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட காவலர் வெங்கடேசன், இதற்கு முன்னர் கேகே நகர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றியவர். அப்போது அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மசாஜ் பார்லர் நடத்தி வந்ததுடன், பிரபல பெண் கஞ்சா வியாபாரியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தன. இதனால் நுண்ணறிவுப் பிரிவிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அடுத்தடுத்து காவல் துறையில் தொடரும் பாலியல் சீண்டல்களால் பெண் அதிகாரிகள், காவலர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதிலும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்தால் குற்றம் இழைக்கும் அதிகாரிகள், காவலர்களுக்கு, ஒருசில அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றுவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவிடாமல் தடுத்து நிறுத்த முயல்வதாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எதற்காக விசாகா கமிட்டி?

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்கத் தனி கமிட்டி அமைக்கும்படி, 2013-லேயே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பெண் அதிகாரி தலைவராக நியமிக்கப்படும் விசாகா கமிட்டியில் சட்ட வல்லுநர், பெண் உரிமை செயற்பாட்டாளர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், விசாகா கமிட்டி 90 நாட்களுக்குள் விசாரணை முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்கின் தன்மையைப் பொறுத்தவாறு குற்றவாளியை இடைநீக்கம் செய்ய அரசிடம் பரிந்துரைக்கலாம்.

இதன்படி, காவல் துறையில் இதுபோன்ற பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இப்படி உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டியானது ஐஜி முருகன் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரை முறையாக விசாரிக்கவில்லை என, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி குற்றம்சாட்டினார். அதன் பிறகு, அவர் நீதிமன்றத்தை நாடியதால் அந்த வழக்கானது தெலங்கானாவுக்கு மாற்றப்பட்டது.

இவ்வாறு காவல் துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது இன்றுவரை தொடர்கிறது. சமூகத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர், தங்களில் ஒருவரான பெண் காவல் அதிகாரிகளிடமே அத்துமீறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தகையவர்கள் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்படும்போது, அவர்கள் தங்களுக்குள் ஒளித்துவைத்திருக்கும் குரூரத்தை வேறிடத்தில் இருக்கும் பெண்களிடம் காட்டத் தொடங்குகிறார்கள். ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு ஆளான காவல் அதிகாரிகள், காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளைக் களைய முடியும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.

Related Stories

No stories found.