`மனைவியின் விருப்பத்திற்கு மாறான உறவு வைத்தால் பாலியல் வன்கொடுமையே'

கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
`மனைவியின் விருப்பத்திற்கு மாறான உறவு வைத்தால் பாலியல் வன்கொடுமையே'

``கணவனாகவே இருந்தாலும், மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவை பாலியல் வன்கொடுமையாகவே கருதமுடியும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யும்படியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அந்த பெண்ணின் கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது. திருமணம் என்பது பெண்களுக்கு எதிராக காட்டுமிராண்டிதனமான செயல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல. திருமணத்தினால் மட்டும் ஆணுக்கு சிறப்பு உரிமை எதுவும் கிடைத்துவிடாது. மனைவியின் உடல், ஆன்மா மீது கணவனே ஆளுகை செலுத்துகிறவனாக இருக்க வேண்டும் என்ற பழமைவாத சிந்தனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது மனைவிக்கு உடல் மற்றும் உளவியல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கணவனாகவே இருந்தாலும், மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவை பாலியல் வன்கொடுமையாகவே கருதமுடியும். சட்டத்தை உருவாகும் இடத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

திருமணத்திற்கு பிந்தைய கட்டாய உறவு, பலாத்காரமா இல்லையா என்பதை சட்டத்தை இயற்றுபவர்களை முடிவு செய்ய வேண்டும் என்றாலும் மனைவி பலாத்கார புகார் கூறினால் அதனை கணவன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், கணவனாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in