மாண்புடன் வாழ பாலியல் தொழிலாளருக்கும் உரிமை உண்டு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிய தீர்வா?
மாண்புடன் வாழ பாலியல் தொழிலாளருக்கும் உரிமை உண்டு!

பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறைதான். அதில் ஈடுபடுவோருக்கு இதர பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உரிமைகளும் கண்ணியமும் உறுதி செய்யப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் எழுதியிருக்கும் தீர்ப்பு பல்வேறு அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற முறையில் பாலியல் தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களை காவல்துறை வதைக்கவோ துன்புறுத்தவோ கூடாது” என்று உச்ச நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், போப்பண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மே மாதம் 19-ம் தேதி ஆணை பிறப்பித்தது. முக்கியமாக, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த புகார்களைப் பாலியல் தொழிலாளர்கள் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் காவல்துறை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்த உத்தரவை அடுத்து, பாலியல் தொழிலுக்கு உச்ச நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டுவதா என்கிற அதிர்ச்சியோடு பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பெண்களைப் போகப்பொருளாக மட்டுமே அணுகும் கீழ்த்தரமான வணிகத்தை தொழிலாக அங்கீரிப்பதா என்று கேள்வி எழுப்பும் சிலர், கடும் போராட்டங்களுக்குப் பிறகு ஒழிக்கப்பட்ட தேவதாசி முறைக்கு உயிரூட்டும் திட்டம் இது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேசமயம், இந்த தீர்ப்பு சார்ந்து விவாதிக்க மேலும் பல கோணங்கள் இருக்கவே செய்கிறது. முதலாவதாக, பாலியல் தொழிலையும் தொழிலாளர்களையும் அருவருப்புடனோ அல்லது பரிதாபத்துடனோ அணுகுவதை தவிர்த்துவிட்டு சக மனிதர்களாகப் பார்க்கும் மாற்றம் இந்தத் தீர்ப்பால் சாத்தியமாகலாம். அதை உறுதி செய்தால் மட்டுமே மேற்கொண்டு இது குறித்த விவாதிப்பது சாத்தியப்படும்.

இப்போது உச்ச நீதிமன்றம் முன்னெடுத்திருப்பதை இரண்டாண்டுகளுக்கு முன்பே தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்னெடுத்தது என்ற செய்தியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. 2020-ல் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் உழைக்கும் பெண்களின் பட்டியலில் முறைசாரா தொழிலாளர்களாக பாலியல் தொழிலாளர்களை அங்கீகரிப்பதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவித்தது. சமூக விலகல் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் தொழிலாளர்களே. அவர்களில் பெரும்பாலோருக்கு வசிக்க வாடகை வீடுகூட கிடைப்பது சிக்கல். இதனால் அடையாள அட்டையோ, குடிமக்கள் என்பதற்கான ஆதாரமோ அற்றவர்களாகக் கிடக்கிறார்கள் அவர்கள். இதனால் அரசு வழங்கிய பெருந்தொற்று கால நிவாரணத் தொகுப்புகூட அவர்களின் கைக்குக் கிட்டவில்லை.

தமிழகத்தில் உள்ள ‘வாடாமலர் எய்ட்ஸ் தடுப்பு சங்கங்களின் கூட்டமைப்பு’ பாலியல் தொழிலாளர்களுக்கு உதவியதைப் போல நாடெங்கும் உள்ள பாலியல் தொழிலாளர் சங்கங்கள் தங்களால் முடிந்த அடிப்படை உதவிகளை பரஸ்பரம் செய்துகொண்டன. ஆனால், இது மட்டும் போதாதென்பதை உணர்ந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, மனநல சிக்கல், வீட்டு வாடகைக்குக் கூட கையில் பணம் இல்லாத சூழல் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து மத்திய அரசு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கும்படி ஆலோசனை வழங்கியது.

அதுமட்டுமின்றி, பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், உளவியல் பூர்வமாகவும் வன்முறையிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்; அதற்கு பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற விவாதமும் தலையெடுத்தது.

1996-ம் ஆண்டிலேயே தேசிய மகளிர் ஆணையம் இதனைப் பரிந்துரைத்தது. அதன் பிறகு 2016-ல் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகள் அமர்வு பாலியல் உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சொன்னது.

ஒழுக்கக்கேடு தடுப்புச் சட்டம் (Immoral Traffic Prevention Act 1956) ‘பரத்தமை’ என்ற சாடலுடன் பாலியல் தொழிலாளர்களை ரெய்டு செய்து, கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அத்தொழில் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாலியல் தொழிலாளர்கள் இழிவாகவும் தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

2019-ல் நாடு முழுவதும் உள்ள 1,000 பாலியல் தொழிலாளர்களிடம் சர்வோஜனா பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினராலும் வாடிக்கையாளர்களாலும் அடித்து துன்புறுத்தப்படுவது அறியப்பட்டது. அவர்களில் 2 சதவீதத்தினர் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மீதமுள்ளோர் பாலியல் தொழிலுக்காகக் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை.

இத்தகைய பின்னணியில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் பாலியல் தொழில் குற்றமாகக் கருதப்படமாட்டாது என்பதாக அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இது தேவதாசி முறைபோல ஒரு தரப்பினர் கட்டாயம் பின்பற்றியாக வேண்டிய வாழ்க்கை முறையாக நிர்ப்பந்திக்கப்படவில்லை. சட்டமாகவும் பிறப்பிக்கப்படவில்லை. அத்தொழில் குற்றமாகக் கருதப்படு வதிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாலியல் தொழில் குற்றமாகக் கருதப்பட்டதால் ஒன்றும் அத்தொழிலை முற்றாக ஒழிக்கமுடியவில்லை. மாறாக, பாலியல் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்குத்தான் உள்ளாக்கப்பட்டார்கள். இந்தத் தொழிலில் ஈடுபட்டமைக்காக ஆண்கள், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தலை அனுபவித்திருக்கிறார்கள். ஆணுறை பயன்படுத்தும்படி வாடிக்கையாளரை நிர்ப்பந்திக்கக்கூட முடியாத நிலையில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பொது சமூகத்தில் கலந்து தங்களது உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைப் பேண அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மறுமுனையில், இந்த தீர்ப்பில் ’விரும்பி’ பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை கைது செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் வாசகம் சிக்கலுக்குரியது. யாருடைய கட்டாயமும் இன்றி பாலியல் தொழிலில் ஈடுபடுபவரா அல்லது கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டவரா (sex trafficking) என்பதைக் கண்டறியும் வழிமுறை உண்டா? பாலியல் தொழிலாளர்களின் சந்ததியரின் நிலை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம், மனநலம் உள்ளிட்டவை குறித்து அரசிடம் என்ன திட்டம் உள்ளது? பாலியல் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பெழுதும் உச்ச நீதிமன்றம், பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் இருந்தால் எதற்காகப் பாலியல் தொழிலுக்குள் வரப்போகிறார்கள் என பேசத் தவறுவதேன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக பாலியல் தொழிலாளர்களின் கருத்தும், நிலைப்பாடும் இதில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்கிற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கேள்விகள் அத்தனைக்கும் விடை காண வேண்டும். அதற்கு முன்பாக, பாலியல் தொழிலாளர்கள் தினமும் எதிர்கொள்ளும் அவமானங்கள், கைது நடவடிக்கைகள், ஊடகங்கள் அவர்களைக் காட்சிப்பொருளாக மாற்றி கொச்சைப்படுத்தும் சம்பவங்கள், காவல்துறை வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து இனியேனும் விடிவுக் கிடைக்கும் என நம்புவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in