எங்கிருந்தோ வந்தேன்...

அழிவின் விளிம்பில் இருக்கும் மரக்குதிரை தொழிலுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் புஷ்பலதா!

எங்கிருந்தோ வந்தேன்...

நாம் சிறுவர்களாக இருந்தபோது நமது வீடுகளில் தடதடத்த அந்த மரக்குதிரையின் ‘தடக் தடக்’ சத்தம் இன்னமும்கூட நம் நினைவலைகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் மரக்குதிரை, மரப்பாச்சி, மரப்பெட்டி சாமான்கள்தான் குழந்தைகளுக்கான விளையாட்டு உலகமாக இருந்தது. இப்போது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் மருந்துக்குக்கூட மரப்பொருட்களை பார்க்கமுடிவதில்லை.

பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பாரம்பரியமாக செய்யப்பட்டுவந்த மரக்குதிரைகள் தயாரிக்கும் பணி 30 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூரில் கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ஆனாலும் ஒருசிலர் மட்டும் இன்னமும் மரக்குதிரைக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் புஷ்பலதா.

1980-களில் தஞ்சையில் ஜோசப் என்பவர் குழந்தைகளுக்கான விளையாட்டுபொருள்கள் செய்யும் பிரத்யேகப் பட்டறை ஒன்றை வைத்திருந்தார். அங்கு மரப்பாச்சி பொம்மை, மரக்குதிரை, நடைவண்டி, அன்னப்பறவை, சொப்புச் சாமான்கள் ஆகியவை செய்யப்பட்டு விற்பனைக்குப் போகும். அந்த ஜோசப்பின் மனைவிதான் புஷ்பலதா. கணவரின் வழியில் பாரம்பரிய முறையில் இன்னமும் மரக்குதிரை செய்யும் தொழிலைச் செய்துகொண்டிருக்கும் புஷ்பலதா தன்னைப் பற்றி பேசக் கேட்போம்.

“கல்யாணமான புதுசுல, என் கணவரோட விளையாட்டுச் சாமான் பட்டறையைப் பார்க்க அப்பப்ப போவேன். அந்த சமயத்துல எங்க பட்டறையில ஜெகநாதன்கிற தச்சர்தான் மரக்குதிரைகளைச் செய்வார். அவருக்கு மட்டும் தான் அந்த தொழில் நுணுக்கம் தெரியும். எங்கக்கிட்ட முன் பணம் வாங்கிருந்த ஜெகநாதன், ஒரு நாள் தீடீர்னு வேலைக்கு வராம நின்னுக்கிட்டாரு. மரக்குதிரைக்கு ஆர்டர் குடுத்துருந்தவங்க எல்லாம் எங்கள நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம்; தச்சர் வரமறுத்துட்டார். கடைசியா, மரக்குதிரை செய்யுறதுக்கான அச்சுக்கட்டைகளை மட்டுமே அவருக்கிட்ட இருந்து என்னோட கணவர் வாங்கிட்டு வந்தாரு.

அதவெச்சுக்கிட்டு என்ன செய்யுறதுன்னு எனக்கும் அவருக்கும் புரியல. ஏன்னா... நாங்க ரெண்டு பேருமே அதுக்கு முந்தி உளி பிடிச்சதில்ல. இருந்தாலும் நம்பிக்கையோட உளியைப் பிடிக்க ஆரம்பிச்சேன். முன்னப் பின்ன பழக்கமில்லாததால கையெல்லாம் பொக்கலமாகிருச்சு. அதோட அதா வேலை செஞ்சு ஒரு மாசத்துல ஒரு குதிரையச் செஞ்சு முடிச்சேன். அது அத்தனை நேர்த்தியா வரலைன்னாலும் நான் அதை பொக்கிஷமா வெச்சிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சு, அந்தக் குதிரையை வெளிநாட்டுக்காரர் ஒருத்தர் விடாம வற்புறுத்திக் கேட்டதால மறுக்க முடியாம எடுத்துக்குடுத்துட்டேன்” என்று புன்னகைக்கிறார் புஷ்பலதா.

முதல் குதிரையைச் செதுக்கத்தான் அத்தனை சிரமப்பட்டாராம். அடுத்தடுத்த குதிரைகள் இவருக்கு கைவந்த கலையாகிப் போனதாம். இப்போது அரிதான பொருளாகிவிட்டாலும் தனது குதிரையை 2,800 ரூபாய்க்குத்தான் தருகிறார் புஷ்பலதா.

இத்தனை மலிவாக விற்றால் கட்டுபடி ஆகுமா என்று கேட்டால் அதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லும் புஷ்பலதா, “நான் சின்னவளா இருந்தப்ப பணக்காரவீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் மரக் குதிரைகள்ல விளையாடுவாங்க. நானெல்லாம் அதைத் தொட்டுப் பாத்ததுகூடக் கிடையாது. அப்படி இல்லாம, இல்லாத வீட்டுப் பிள்ளைகளும் இந்தக் குதிரையைத் தொட்டு விளையாடணும்னுதான் செய்கூலியைக் குறைச்சுக்கிட்டு குறைவான விலைக்குக் கொடுக்கிறேன். மக்களும் பேரம் பேசாம சந்தோஷமா வாங்கிட்டுப் போறாங்க” என்கிறார்.

மரக்குதிரையை மா மரத்தில் தான் செய்ய முடியும். குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மூலிகை வண்ணங்களைத்தான் பயன்படுத்துகிறார் புஷ்பலதா. மரக்குதிரையில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு இயக்கம் சீராகி, ஞாபக சக்தி, மூளைவளர்ச்சி ஆகியவை அதிகரிப்பதாக பிசியோதெரபி மருத்துவர்களும் இந்தக் குதிரையைப் பரிந்துரைக்கிறார்களாம். அதனால் புஷ்பலதாவின் குதிரை மார்க்கெட் பிஸியாகத்தான் இருக்கிறது.

மரக்குதிரையை மட்டும் நம்பி இருக்காமல் அன்னப்பறவை, தொட்டில் தூம்பு, மர விளையாட்டுச் சாமான்கள் உள்ளிட்டவையும் செய்து கொடுக்கும் புஷ்பலதாவுக்கு மனதுக்குள் ஒரு கவலையும் உண்டு. மரப்பாச்சிப் பொம்மை செய்யமுடியவில்லையே என்பது தான் அவருக்குள் இருக்கும் அந்தக் கவலை. மரப்பாச்சி பொம்மையை கருமருது மரத்தில் தான் செய்யமுடியும். அந்த மரம் கிடைப்பது அரிதாகி விட்டதாலும், கிடைத்தாலும் காஸ்ட்லி என்பதாலும் மரப்பாச்சி பொம்மைகளை செய்யமுடியாத வருத்தத்தில் இருக்கிறார் புஷ்பலதா.

கருமருதில் செய்யப்படும் மரப்பாச்சி பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடினால் அவர்களுக்கு ஜீரண சக்தி அதிகமாகும். அவர்களின் வளர்ச்சிக்கும் இது உதவும் என மரத்துக்குள் மருத்துவமும் சொல்கிறார் புஷ்பலதா.

நிறைவாக நம்மிடம் பேசிய அவர் “எனக்கும் இந்தத் தொழிலுக்கும் சுத்தமா சம்பந்தமே இல்லை. எங்கோ பிறந்து இங்கே வந்து, மத்தவங்களால கைவிடப்பட்ட இந்தத் தொழிலை நான் செஞ்சுட்டு இருக்கேன். உண்மையச் சொல்லணும்னா இது எனக்கு கிடைச்ச வரம். மகளுக்கு திருமணம் செஞ்சு குடுத்துட்டேன். மகனும் அரசு வேலையில இருக்கான். இன்னும் எதற்காக இதுக்குள்ள கெடந்து கஷ்டப்படுறீங்கன்னு பிள்ளைங்க கேக்குறாங்க. ஆனாலும் என்னால உளியை எடுக்காம இருக்கமுடியல. அழிஞ்சுட்டு வர்ற இந்தத் தொழிலை நம்மாள முடிஞ்ச வரைக்கும் செய்யலாம்னு நினைக்கிறேன்.

தஞ்சாவூர் மரக்குதிரைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் நடக்கிறதா சொல்றாங்க. அப்படி கிடைச்சா இந்தத் தொழிலை அழியாமப் பாதுகாத்துடலாம். ஆர்வமுள்ளவங்க நாடி வந்தா அவங்களுக்கு இந்த மரக்குதிரை செய்யுறதுக்கு பயிற்சி குடுக்கவும் நாங்க தயாரா இருக்கோம். அதேசமயம், வருமானம் கம்மின்றதால தச்சர்கள் யாரும் இந்தத் தொழிலுக்குள்ள வரமாட்டேங்கிறாங்க. அரசே குதிரைகள கொள்முதல் செய்ய முன்வந்தா பல பேர் இந்தத் தொழிலுக்கு வருவாங்கன்றது என்னோட நம்பிக்கை.

தஞ்சை ரயிலடி பக்கத்துலதான் எங்களோட பட்டறை இருந்துச்சு. ஆனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம் வருதுன்னு சொல்லி அதை இடிச்சுட்டாங்க. அதனால இப்ப, வீட்டுல வெச்சுத்தான் குதிரைகள செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு பக்கபலமாக இருந்த என் கணவரும் 10 மாசத்துக்கு முந்தி கண்ணை மூடிட்டார். முன்னாடி பப்ளிக்கான இடத்துல எங்க பட்டறை இருந்ததால மாசத்துல 30 குதிரைகூட வித்துப் போகும். ஆனா, இப்ப ஒதுக்குப்புறமா வந்துட்டதால பலபேருக்கு பட்டறை இருக்கதே தெரியல. அதனால 10 குதிரைகள் போனாலே பெரிய விஷயமா இருக்கு. அதனால, பப்ளிக்கான இடத்துல பட்டறை வைக்கிறதுக்கு அரசாங்கம் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கிக் குடுக்கணும்னு உங்க மூலமா கேட்டுக்கிறேன் தம்பி” என்றார்.

நமக்கே உரித்தான நமது பாரம்பரியக் கலைகள் பலவும் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மரக்குதிரை வடிக்கும் கலையும் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் நிற்கிறது. அதை மீட்டெடுக்க நினைக்கும் புஷ்பலதாவுக்கு அரசு இயன்ற உதவிகளைச் செய்யும் என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in