ஸ்கேனிங்கா, செல்போனா எது கருவை பாதிக்கும்? : அவ(ள்) நம்பிக்கைகள் - 4

ஸ்கேனிங்கா, செல்போனா எது கருவை பாதிக்கும்? : அவ(ள்) நம்பிக்கைகள் - 4

நம்பிக்கை:

"அடிக்கடி மேற்கொள்ளப்படும் ஸ்கேனிங் பரிசோதனை வளரும் கருவை பாதிக்கக் கூடும்?"

உண்மை :

வளரும் கரு குறைபாடுகளின்றி, ஆரோக்கியமாக வளர்வதை உறுதிப்படுத்தப் பெரிதும் உதவும் அத்தியாவசிய தொழில்நுட்பம் ஸ்கேனிங். இந்த ஸ்கேனிங் மெஷின்கள், உண்மையில் அல்ட்ரா சவுண்ட் டெக்னாலஜியைத்தான் பயன்படுத்துகின்றன.

அதாவது, இதில் பயன்படுத்தப்படுவது உயர் அதிர்வெண் ஒலிக்கற்றைகளே (ultra high frequency sound waves) தவிர, இதில் எந்தவொரு கதிரியக்கமும் இல்லை என்பதே உண்மை.

ஒரு இருள் சூழ்ந்த பெரிய அறைக்குள் சிறு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியைக் கொண்டு செல்வதற்கு ஒப்பான இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஆபத்தில்லாதது.

மேலும், கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், உருவான கரு ஒன்றா இரண்டா என்பதைக் கண்டறியவும் ஸ்கேனிங் 2 மாதத்துக்குள்ளும், குழந்தை மனநலிவு எதுவும் இல்லாமல் பிறக்குமா என்பதைக் கண்டறிய NT ஸ்கேனிங் 3-ம் மாதத்திலும், பிற குறைபாடுகளைக் கண்டறிய 5-வது மாதத்திலும், வளர்ச்சியை உறுதி செய்ய 8-வது மாதத்திலும் என குறைந்தது 4 முறையாவது கர்ப்பகாலத்தில் ஸ்கேனிங் பரிந்துரைக்கப்படுகிறது.

இப்படி ஸ்கேன் செய்வது குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கத்தான். குழந்தையை பாதிக்கும் எதையும் மருத்துவ அறிவியல் அனுமதிக்காது என்பதால், ஸ்கேனிங்கால் குழந்தைக்கு எந்தவொரு பாதிப்பும் உறுதியாக இல்லை.

நம்பிக்கை :

"கர்ப்பகாலத்தில் செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைக்குப் பாதிப்புகள் பெரிதாக இருக்காது..!"

உண்மை :

செல்போன்களின் மிகக் குறைந்த கதிர்வீச்சு, வளர்ந்த மனிதர்களையே தாக்கி நாளடைவில் மூளையைப் பாதிக்கக் கூடும், புற்றுநோய் ஏற்படுத்தக் கூடும் என்று பொது ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உண்மையில் இது நம் அனைவருக்குமான எச்சரிக்கை மணி என்பதால், மொபைல் பயன்படுத்தும் கால அளவில் நாம் எப்படி கவனத்துடன் இருக்க வேண்டுமோ அதுபோல, கர்ப்ப காலத்தில் இன்னும் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.

மேலும் கர்ப்பகாலத்தில் அதிகநேரம் செல்போனை பயன்படுத்தினால், நமது ஓய்வும், உறக்கமும் பறிபோகும். சோர்வு அதிகம் ஏற்படும். இது மனரீதியாக அமைதியைக் குலைக்கும். மொத்தத்தில் செல்போன், பிறக்கும் குழந்தையின் மனநிலையையும் சேர்த்தே பாதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, அளவுக்கு மிஞ்சினால் கர்ப்பகாலத்தில் செல்போனும் நஞ்சாகலாம்!

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
ஸ்கேனிங்கா, செல்போனா எது கருவை பாதிக்கும்? : அவ(ள்) நம்பிக்கைகள் - 4
மாடிப்படி ஏறாதே!? பளு தூக்காதே!? : அவ(ள்) நம்பிக்கைகள்-3

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in