மகளிர் தினத்தில் மாணவிக்கு மரியாதை

மகளிர் தினத்தில் மாணவிக்கு மரியாதை
காவல் அதிகாரியாக நிவேதிதா

இன்று உலகெங்கும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் பலரும் பெண்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் இந்த நாளில் கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையதில் ஒருநாள் காவல் ஆய்வாளராக பணியில் அமர்த்தி பெருமை சேர்த்திருக்கிறார் புதுச்சேரி காவல் துறையினர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் கார்த்திகேயன், மகளிர் தினத்தில் மகளிருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எதையாவது செய்ய வேண்டும் என்று யோசித்து இதை செய்திருக்கிறார்.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி நிவேதிதாவை இதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். தகுதியான, நன்கு படிக்கக்கூடிய, ஆர்வமான மாணவியை பரிந்துரைக்குமாறு அவர் கல்லூரி நிர்வாகத்திடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் நிவேதிதா உட்பட 10 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது.

ஆய்வாளர் இருக்கையில் நிவேதிதா
ஆய்வாளர் இருக்கையில் நிவேதிதா

அவர்களில் தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் பயின்றுவரும் துடிப்பான இளம் பெண் நிவேதிதாவை தேர்ந்தெடுத்து அவருக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி இன்று காலை காவல் நிலைய பணிகள் துவங்கும் போது அவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். முத்தியால்பேட்டை காவல் நிலைய ஒருநாள் அதிகாரியாக அவரை பணியில் அமர்த்தி காவல் ஆய்வாளருக்கு உரிய மரியாதையை அனைத்து காவலர்களும் செய்தனர். இன்றைய நாள் முழுவதும் காவல் நிலையத்தில் அவர் இருந்து காவலர்கள் செய்யும் அத்தனை பணிகளையும் பகிர்ந்தும், தெரிந்தும் கொண்டார்.

இதுபற்றி நிவேதிதா கூறுகையில், "காவல்துறை சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம், அவர்களுடைய பணி எவ்வளவு கடினமானது என்பதை எல்லாம் நேரில் தெரிந்து கொண்டேன். கடுமையான பணியாக இருந்தாலும் மக்களிடம் அவர்கள் எவ்வளவு அன்புடன் பழகுகிறார்கள், மக்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்கிறார்கள் என்பதையும் நேரில் பார்த்து தெரிந்துகொண்டேன். எனக்கு இது மிகவும் பெருமை அளிப்பதாக இருக்கிறது. இதை என் வாழ்வில் மிக முக்கியமான நாளாக கருதுகிறேன். காவல்துறை மக்களின் நண்பன் என்பதை சக மாணவர்களிடமும் சமூகத்திடமும் எடுத்துச் செல்வேன்" என்று பெருமிதத்துடன் சொன்னார் நிவேதிதா.

மாணவிக்கு மரியாதை செய்த புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தினருக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in