நீலகிரி மாவட்டத்தை அலங்கரித்துள்ள பெண் பிரதிநிதிகள்

நீலகிரி மாவட்டத்தை அலங்கரித்துள்ள பெண் பிரதிநிதிகள்

உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் முதல் அதிகாரிகள் வரை எளிய பின்னணி கொண்ட பெண்கள் அதிகளவில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிப்பதை, அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டமான நீலகிரி, சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பன்படி, நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் 3 லட்சத்து 75 ஆயிரத்து 251, ஆண்கள் 3 லட்சத்து 60 ஆயிரத்து 143 என 7 லட்சத்து 35 ஆயிரத்து 394 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகையிலும், வாக்காளர்கள் எண்ணிக்கையிலும் பெண்களே அதிகம். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களே அதிகளவில் உள்ளனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நடுவட்டம் பேரூராட்சியை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் தலைவர் பதவிகளை பெண்களே அலங்கரிக்கின்றனர். மொத்தமுள்ள 294 பதவிகளில் 151 பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, 4 நகராட்சிகளில் 55 பேர், 11 பேரூராட்சிகளில் 96 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

இதில், நகராட்சிகளில் 2 பழங்குடியின பெண்கள், 18 ஆதிதிராவிட பெண்கள், 35 பொதுப்பிரிவு பெண்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். 11 பேரூராட்சிகளில் 3 பழங்குடியின பெண்கள், 41 ஆதிதிராவிட பெண்கள், 52 பொதுப்பிரிவு பெண்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். மேலும், ஏற்கெனவே நடந்து முடிந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், மாவட்ட ஊராட்சியிலுள்ள 6 வார்டுகளில் 3 பெண்களும், 3 வார்டுகளில் ஆண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

நான்கு ஊராட்சி ஒன்றியங்களில், குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் பெண்கள் தலைவர்களாக உள்ளனர். இதேபோல, 35 கிராம ஊராட்சிகளில் 58 சதவீத பெண்கள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பழங்குடியின பெண்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பதவியேற்ற பெரும்பாலான பெண் தலைவர்கள், எளிமையான பின்புலத்தை கொண்டவர்கள். அதிகரட்டி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள எம்.பேபி, விவசாய தொழிலாளி. ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியாளம் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.சிவகாமி, பழங்குடியின பெண். இவர், முதன்முறையாக நகராட்சியின் தலைவராக தேர்வு பெற்றுள்ளார். மாநிலத்திலேயே முதன் முறையாக பனியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் வள்ளி, தேவர்சோலை பேரூராட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளாக பெண்களின் எண்ணிக்கை அதிக உள்ளதுபோலவே, அதிகாரிகளிலும் பெண்களின் கை ஓங்கியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலராக கீர்த்தி பிரியதர்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக மோனிகா ராணா, குன்னூர் சார் ஆட்சியராக தீபினா விஸ்வேஸ்வரி, மாவட்டத்தின் முதல் மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி என பெண்களே முக்கியப் பதவிகளில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in