புராதனச் சின்னங்களை அறிவியலால் மீட்டெடுக்கும் தமிழ்ப்பெண்!

பேராசிரியர் திருமாலினி செல்வராஜ்
பேராசிரியர் திருமாலினி செல்வராஜ்

ஆதிச்சநல்லூரில் தொடங்கி கீழடி வரை,பண்டைய நாகரீகம் குறித்த அகழாய்வுப் பணிகள் மூலம் பண்டைய தமிழர் பயன்படுத்திய பொருட்கள், அவை பயன்படுத்தப்பட்ட காலம் குறித்து விரிவான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கீழடி அகழாய்வில் கண்டறிந்த பொருட்களின் கால அளவைக் கண்டறிய உதவியவர்களில் ஒருவர் முனைவர் திருமாலினி.

வேலூர் விஐடி பேராசிரியர் திருமாலினி செல்வராஜ். இவர் பழங்கால கட்டிடங்கள், புராதனச் சின்னங்கள், கோயில்களை அக்கால அறிவியல் முறைகளைக் கொண்டு புனரமைத்து வருகிறார். தஞ்சை அரண்மனை, பெரிய கோயில், பாடாலீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், சார்மினார், கேரளாவில் வடக்குநாதன் கோயில், பத்மநாபபுரம் அரண்மனை என இவரின் கைவண்ணத்தில் புது வண்ணம் கண்ட புராதனச் சின்னங்களின் பட்டியல் நீள்கிறது.

அக்கால கட்டிடக்கலையில் கற்களை அடுக்குவதில் சுண்ணாம்பு பூச்சு பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னே சுண்ணாம்பு தான் வெளியிடும் கரியமிலவாயுவை மீண்டும் அதுவே கிரகித்துக் கொள்கிறது என்ற அறிவியல் ஒளிந்திருக்கிறது. இவ்வாறு அக்கால கட்டிடக்கலையிலும் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பண்டைய கட்டமைப்புகள் கடந்த காலத்துக்கான ஒரு சாளரம்.

இவர் பி.டெக்., சிவில் இஞ்சினியரிங் படித்தவர், தன்னுடைய முனைவர் பட்டத்துக்காகப் புராதன சின்னங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அக்காலக் கட்டிடக்கலை மீதான ஆர்வம் உந்தித்தள்ள, அவற்றை புனரமைப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஐரோப்பா சென்றார். அங்குள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, இங்குள்ள புராதனச் சின்னங்கள் கட்டப்பட்டுள்ள பூச்சுக்கலவையைக் கண்டறிந்து, இதற்காகத் தனியே காப்புரிமையும் பெற்றார்.

இதுகுறித்து திருமாலினி கூறும்போது, “தமிழ்நாட்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், அரண்மனைகள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. அதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கின்றன. பல்வேறு கால சூழ்நிலைகளை தாண்டி அவை கம்பீரமாகக் காலத்தைக் கடந்து நிற்கின்றன. அதற்குக் காரணம் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கலவைகள். அவை, பசுமை பேணும் பொருட்களாகவும் அதையொட்டிய தயாரிப்பு தொழில்நுட்பமாகவும் விளங்கின.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இத்துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பாரம்பரிய கட்டமைப்புகளை மறுசீரமைக்க அறிவியல் கண்ணோட்டத்தில் அணுக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்புவரைகூட, புனரமைப்பில் சிமென்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், சிமென்ட் கலவையானது கட்டிடத்தில் விரிசல் ஏற்படுத்தி, வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அக்காலக் கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட கடுக்காய், சுண்ணாம்பு, வெல்லம், தாமரைத்தண்டு, பருத்தி விதை, சோற்றுக் கற்றாழை உள்ளிட்ட பொருட்களின் அளவை ஆய்வு செய்து ஒரு கலவையை உருவாக்கினேன்.

அதேநேரம், ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு வித கலவை அளவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு முறையும் மூலக்கூறுகளை கண்டறிய வெளிநாடுகளில் உள்ள துறைசார் வல்லுநர்களிடம் அனுப்பி நானோ டெக்னாலாஜி மற்றும் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அந்தக் கட்டிடத்தில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்கான ஆலோசனையை வழங்குகிறேன்” என்கிறார்.

இந்தியாவில் தினமும் ஏதோ ஒரு புராதனச் சின்னம் சேதமாகிறது. அவற்றைக் காக்கும் கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே ‘பாரம்பரியச் சுற்றுலா’ ஒன்றை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்.

இதுவரை 45-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தவர், நவீனக் காலத்துக்கு வேண்டிய அறிவுசார் கருத்துகளை பழங்கால கட்டிடங்கள் பறைசாற்றுவதாகக் கூறுகிறார். “இன்று சிமென்ட்டுக்கு மாற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தப் பேச்சு அதிகரித்து வருகிறது. அதற்கு விடையாக அக்காலத்தில் கற்களை அடுக்குவதில் சுண்ணாம்பு பூச்சைப் பயன்படுத்தியதை புரிந்து கொள்ளலாம். அதன்பின்னே சுண்ணாம்பு தான் வெளியிடும் கரியமிலவாயுவை மீண்டும் அதுவே கிரகித்துக் கொள்கிறது என்ற அறிவியல் ஒளிந்திருக்கிறது. இவ்வாறு அக்கால கட்டிடக் கலையிலும் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பண்டைய கட்டமைப்புகள் கடந்த காலத்திற்கான ஒரு சாளரம்” என்பவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆகியவற்றின் அழைப்பின் பேரில், தொடர்ந்து புனரமைப்பு பணிகளுடன் அகழாய்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

“அழகன்குளம் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் ரோமானியர்களுடன் தமிழர்கள் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததையும், இங்கிருந்து பட்டு, மசாலா பொருட்களை அனுப்பி, அங்கிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் தருவித்து இருக்கிறார்கள். தற்போது ஆதிச்சநல்லூர் பொருட்களின் பயன்பாடு குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். விஐடி நிறுவனத்தில் புராதனச் சின்னங்களை ஆய்வு செய்ய உயர்ரகக் கருவிகள், வசதிகளுடன் ஆய்வகம் ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது” என்று கூறும் திருமாலினி, புராதனத்தைக் காப்பதில் பொதுமக்களின் செயல்பாடுகள் குறித்து கவலை கொள்கிறார்.

“இந்தியாவில் தினமும் ஏதோ ஒரு புராதனச் சின்னம் சேதமாகிறது. அவற்றைக் காக்கும் கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே ‘பாரம்பரியச் சுற்றுலா’ ஒன்றை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும். ஒவ்வொரு கட்டிடத்தின் நிலையையும் உயர்த்தி, அதன் சிறப்புகளை எடுத்துரைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தாலி போன்ற நாடுகளில் அவர்கள் பொருளாதாரத்தைக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கத் தொடங்கியுள்ளனர். அதை, இங்கேயும் முயன்றால் ஒருவேளை புராதனச் சின்னங்கள் காக்கப்படலாம். ஏனெனில், வருங்கால சந்ததியிடம் நம் பாரம்பரியத்தை எடுத்துரைக்க அவைதான் சான்றாக இருக்கப் போகின்றன” என்கிறார். புராதனச் சின்னங்களின் மகத்துவம் உணர்ந்து அவற்றை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்குவதே, திருமாலினி போன்றோருக்கு நாம் நீட்டும் உதவிக்கரமாக இருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in