கோவிட் தடுப்பூசி கருவை பாதிக்குமோ!? : அவ(ள்) நம்பிக்கைகள் - 13

கோவிட் தடுப்பூசி கருவை பாதிக்குமோ!? : அவ(ள்) நம்பிக்கைகள் - 13

கர்ப்பகாலம் முழுவதும் அவ(ள்) நம்பிக்கைகள் பலவும் தொடர்ந்து கொண்டே இருக்க, சமீபத்திய அவநம்பிக்கை, தடுப்பூசிகள் சார்ந்ததாக இருப்பதுதான் பெரும் வேதனை.

நம்பிக்கை :

கர்ப்பகாலத்தில் தடுப்பூசிகள் கூடாது..!

உண்மை :

நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பாளர்கள் இருப்பதைப் போலவே, அது தொடர்பாக கேள்விகளை தொடர்ந்து எழுப்புபவர்களும் அதிகம். அந்த வகையில் சமீபத்திய கேள்வி, "கோவிட் தடுப்பூசியை கட்டாயம் போடணுமா? அம்மாவையும், குழந்தையையும் அது பாதிக்காதா?" என்பதே..!

உண்மையில், இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய 2 ஊசிகளும், கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் போதும் பாதுகாப்பானவையே. அதிலும் இதுவரை கரோனா உண்டாக்கிய சேதாரங்களுக்குப் பின்னும், தாய்-சேய் என 2 உயிர்கள் தொடர்புள்ள கர்ப்பகாலத்தில் கோவிட் தடுப்பூசி தேவையா என்ற கேள்வியே தேவையற்றது. கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, "பொண்ணு அமெரிக்காவில இருக்கா, இதுவரைக்கும் செக்கப் அங்கேதான் நடந்தது. TT தடுப்பூசியெல்லாம் அமெரிக்காவில கிடையாதாமே...இங்கே மட்டும் ஏன்?" என்று கேட்கிறார்கள். இதற்கு பதில் இதுதான்: தடுப்பூசி முறைகள், பிரசவிக்கும் இடம் மற்றும் நோய்த்தொற்று சார்ந்தது.

இந்திய சுகாதார அமைப்பின்படி, 2 T T தடுப்பூசிகள் 4 வார இடைவெளியில், 3-வது மாதத்துக்குப் பின், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கும் இது பொருந்தும்.

மற்ற தடுப்பூசிகளான காமாலை-பி, டிப்தீரியா, ஃப்ளூ ஆகியன நோய்த்தொற்று மற்றும் காலநிலைக்கேற்ப தேவைப்படும்போது வழங்கப்படுகின்றன. அதேபோல, "வீட்டில வளர்க்கிற நாய்தான்... மாசமா இருக்கற பொண்ணைக் கடிச்சிருச்சு.. என்ன செய்ய..?” என்ற கேள்விக்கு, 'Anti Rabies Vaccine' எனப்படும் நாய்க்கடி ஊசி, கர்ப்பகாலத்தில் பாதுகாப்பான ஒன்றுதான். நிச்சயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆக, கர்ப்பகாலத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசிகள் அனைத்தும் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானவைதான். முக்கியமாக கோவிட் தடுப்பூசி.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கோவிட் தடுப்பூசி கருவை பாதிக்குமோ!? : அவ(ள்) நம்பிக்கைகள் - 13
அதிகம் தண்ணீர் குடித்தால் பனிக்குட நீர் அதிகமாகுமா?: அவ(ள்) நம்பிக்கைகள் -12

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in