கர்ப்பகால காய்ச்சல், சளி: அவ(ள்) நம்பிக்கைகள்

கர்ப்பகால காய்ச்சல், சளி: அவ(ள்) நம்பிக்கைகள்

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வந்துவிட்டாலே, திரும்பிய பக்கமெல்லாம் காய்ச்சலும், சளியும் வர ஆரம்பித்துவிடும். ஒருவருக்கு வந்தாலே இன்னொருவரை தொற்றி பாடாய்ப்படுத்தும் இந்தக் காய்ச்சல் கர்ப்பிணிப் பெண்களையும் இன்னும் எளிதாகத் தொற்றிக் கொள்வதும் இயல்பாக நடக்கும்.

அப்படி கர்ப்பகாலத்தில் காய்ச்சல் வந்தால் அதற்கு மருத்துவரைப் பார்க்க வேண்டுமா.? அப்படிப் பார்த்து அவரெதுவும் மருந்துகள் கொடுத்தால் அதை எடுத்துக் கொள்ளலாமா? அது குழந்தையை பாதிக்காதா போன்ற குழப்பங்கள் கர்ப்பிணிகளுக்கு பொதுவாக எழுவதுண்டு. அதைப் பற்றித் தான் இன்று தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

உண்மையில் காய்ச்சல் என்று நாம் சொல்லும் உடற்சூடு என்பது, நமது உடலில் எதாவது நோய்த்தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அந்தக் கிருமிகளை வெளித்தள்ள நடத்தும் போராட்டமேயாகும். அப்படி நோய்த்தொற்று வரும்போது காய்ச்சல் வருமென்றால், காய்ச்சல் வரும்போதெல்லாம் ஏதாவது கிருமித்தொற்று நம்மை பாதித்திருக்குமா என்றால், 'அப்படி இருக்காது; என்றுகூறும் மருத்துவர்கள், வேறுசில காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் காய்ச்சல் தோன்றக்கூடும் என்கிறார்கள்.

பொதுவாக கர்ப்பகாலத்தில் உள்ளே வளரும் கருவிற்கேற்ப வளர்சிதை மாற்றங்களும் கர்ப்பகால ஹார்மோன்களும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதால், இயல்பாகவே உடலின் வெப்பநிலை சற்றே கூடி இருப்பதுடன், அதிக வியர்வையும் இருப்பதை 'ஹாட் ஃப்ளாஷஸ்' (hot flashes) என்று அழைக்கும் மருத்துவர்கள், இந்த உடல்சூட்டை உண்மையான காய்ச்சலிருந்து எளிதாக வேறுபடுத்தவும் முடியும் என்கின்றனர். வேறு நோய் அறிகுறிகள் எதுவுமின்றி வெறும் உடல்வெப்பமும் வியர்வையும் மட்டுமே ஏற்பட்டு, அதுவும் விரைவிலேயே குறைந்துவிடும் இந்த ஹாட் ஃப்ளாஸால் உள்வளரும் கருவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த சமயத்தில் தாய்மார்கள் போதுமான நீரைப் பருகவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த இயல்பான உடல்சூட்டைத் தாண்டி, சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகளுடன் அதிகப்படியான காய்ச்சலும் (100°க்கு மேலாக) தொடர்ந்து இருக்குமேயானால் அந்தக் காய்ச்சலை கர்ப்பகாலத்தில் கட்டாயம் உதாசீனப்படுத்தக் கூடாது. பொதுவாக செப்டம்பர் அக்டோபர் போன்ற மழை மற்றும் குளிர் மாதங்களில் ஏற்படும் காய்ச்சல் 90% வைரஸ் தொற்றினாலும், சமயங்களில் பாக்டீரியா அல்லது பிற கிருமித்தொற்றுகளாலும் ஏற்படுகிறது. இதில் ஃப்ளூ, டெங்கு, கோவிட் உள்ளிட்ட காய்ச்சல்கள் கர்ப்பகாலத்தில் பெரும்பாலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் ஒருசிலருக்கு அது தீவிரமடைந்து தாய்க்கும் சேய்க்கும் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தாய்க்கு ஏற்படும் இந்த சாதாரண தொற்றுகள் சமயத்தில் கருச்சிதைவு, குறைப்பிரசவம், குறைபாடுகளுடன் கூடிய குழந்தை, கருவிலேயே குழந்தை இறப்பு, பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று என குழந்தைகளை பாதிக்கலாம் என்பதுடன் நுரையீரல் மற்றும் மற்ற உறுப்புகள் பாதிப்பினால் தாயின் இறப்பு வரை கூட்டிச் செல்ல வாய்ப்பகள் அதிகம் என்பதால், கர்ப்பகாலத்தில் நோய் வராமல் காத்துக்கொள்வதே சிறந்த வழிமுறையாகும்..

கூட்ட நெரிசல்களைத் தவிர்ப்பது, வீட்டை காற்றோட்டமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது, கொசுவலைகள் பயன்படுத்துவது, வீட்டில் யாருக்கேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது, தனக்கு அறிகுறிகள் ஏற்படும்போது தாமதப்படுத்தாமல் மருத்துவ உதவியைப் பெறுவது, மருத்துவரின் ஆலோசனையுடன் ஃப்ளூ மற்றும் கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது ஆகியன இந்த சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளாகும்..

இவற்றைத் தாண்டி கர்ப்பகாலத்தில் காய்ச்சல் ஏற்படும்போது, மற்றவர்களைப் போலவே அதிகப்படியான நீர் பருகுவது, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது, நல்ல ஓய்வை எடுத்துக் கொள்வது, தளர்வான பருத்தி ஆடைகளை உடுப்பது, நீராவி பிடிப்பது, வெந்நீரில் வாய் கொப்பளிப்பது, தொண்டை கரகரப்புக்கு மென்த்தால், விக்ஸ் போன்ற lozenges உபயோகிப்பது, மற்றும் மஞ்சள், தேன், துளசி உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வதுடன், அறிகுறிகள் தொடருமேயேனால் முறையாக மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியமாகிறது.

மிக முக்கியமாக, வீட்டிலிருக்கும் மருந்துகளையோ.. மருத்துவரின் பரிந்துரையின்றி கடைகளில் வாங்கி, தானாக உட்கொள்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுய மருத்துவம் பேராபத்தை விளைவிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் காய்ச்சலை எல்லாம் தாண்டி Rubella எனும் புட்டாளம்மை நோய் தாய்க்கு கர்ப்பகாலத்தில் ஏற்படுமேயானால், குழந்தைக்கு Congenital Rubella Syndrome எனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனும் தகவல் மிகவும் அவசியமாகிறது.

மூளை வளர்ச்சிக் குறைபாடு, இருதயக் கோளாறுகள், காது கேளாமை, கண்களில் புரை போன்ற பாதிப்புகளுடன் இங்கு குழந்தை பிறக்கலாம் என்பதால் முறையான ரூபெல்லா தடுப்பூசிகள் சிறுவயதிலும், திருமணத்திற்கு முன்னரும் இதில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆக..கர்ப்பகாலத்தில் காய்ச்சல் சளிக்கு வைத்தியம் செய்யலாமா என்றால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம் என்றாலும் வருமுன் காப்பதே சிறந்தது என்ற புரிதலுடன் 'அவ(ள்) நம்பிக்கைகள்' தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in